திருமலை சண்முகாவில் மீண்டும் சர்ச்சை: கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற ஆசிரியைக்கு மீண்டும் அனுமதி மறுப்பு
ஆசிரியையும் அதிபரும் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை சண்முஹா இந்து மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து கடமைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்ற ஆசிரியையை கடமையைப் பொறுப்பேற்கவிடாது தடுத்ததாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை சண்முஹா இந்து மகளிர் கல்லூரிக்கு அபாயா அணிந்து கற்பித்தல் பணிகளில் ஈடுபடச் சென்றதன் காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா, நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக நேற்றைய தினம் மீண்டும் பாடசாலைக்கு கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றிருந்தார். இதன்போது பாடசாலைக்குள் கூடியிருந்த சிலரால் குறித்த ஆசிரியை மிரட்டப்பட்டதாகவும் கூட்டத்தில் இருந்த ஒருவரால் ஆசிரியை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இச் சம்பவத்தின்போது தன்னை ஆசிரியை பஹ்மிதா தாக்கியதாக கூறி அப் பாடசாலையின் அதிபரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
2017 ஆம் ஆண்டு அபாயா அணிந்து கற்பிக்கச் சென்ற ஆசிரியைகளை, அபாயா அணியக் கூடாது என்றும் சாரி அணிந்து வருமாறும் கூறி சண்முஹா கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் மனித உரிமை ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கண்டறிந்ததோடு ஆசிரியைகளை மீளவும் அதே பாடசாலையில் கடமையாற்ற அனுமதிக்குமாறு பரிந்துரைகளை முன்வைத்தது.
எனினும் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரை பல வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அதனை நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான பஹ்மிதா ரமீஸ், மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
சென்ற மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரச தரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட மனுதாரரான ஆசிரியை பஹ்மிதா தான் மீண்டும் சண்முஹாவில் ஆசிரியையாக கடமையாற்ற அனுமதிக்கப்படவேண்டும் எனக் கேட்டிருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட அரச தரப்பு நேற்று (02.02.2022) ஆசிரியை பஹ்மிதாவை மீண்டும் சண்முஹாவிற்குச் சென்று கடமையை ஏற்க அனுமதித்தது. அதற்கான கடிதத்தினை கல்வி அமைச்சு அனுப்பியிருந்தது.
அதன் பிரகாரம் நேற்று சண்முகாவிற்கு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவை அதிபரின் காரியாலயத்தில் கூடியிருந்த பலர் தடுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூட்டத்தினுள் இருந்த ஒருவர் ஆசிரியை பஹ்மிதாவை தாக்க முற்பட்டதாகவும் அவரின் கையடக்கத் தொலைபேசியையும் பறிக்க முயன்றதாகவும் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியை மீண்டும் பாடசாலையில் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாடசாலை சமூகத்தினராலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களாலும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நேற்றுக் காலை பாடசாலை முன்பாக நடாத்தப்பட்டது.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், அபாயா அணிந்து பாடசாலைகளில் கடமையாற்றுவதை தடுப்பதானது அடிப்படை உரிமை மீறல் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், பாடசாலைகளில் இவ்வாறான சகிப்புத்தன்மையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது மாணவர்களுக்கு தவறான முன்மாதிரியாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலயக் கல்வி அலுவலகத்திற்கு இணைப்பு?
இதனிடையே, நேற்றைய சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த ஆசிரியையை உடனடியாக செயற்படும் வண்ணம் திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இணைப்புச் செய்வதற்காக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பணிப்புரை விடுத்ததற்கமைய திருகோணமலை வலயக் கல்வி அலுவலம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு இணைப்புச் செய்த கடிதத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
குறித்த ஆசிரியை பாடசாலையில் கடமையாற்றுவதற்கே நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தரப்பு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வலயக் கல்வி அலுவலகத்தில் இணைக்க மாகாணப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளமையானது பாரபட்சமான செயற்பாடு என்றும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. – Vidivelli