பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் வன்முறை கும்பலால் மத நிந்தனையாளராக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று அவரது மனைவி நிலுஷி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானில் இனவாத கும்பலால் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவரின் சம்பளத் தொகை மற்றும் நிவாரணத் தொகையை பாகிஸ்தான் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.
இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பிரியந்த குமார கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஆவேசமான ஒரு கும்பலால், அடித்துக் கொல்லப்பட்டார்.
பின்னர் அவரை கொலை செய்தவர்கள் சடலத்தை தீ வைத்து எரித்தனர்.
பிரியந்த 2012இல் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தர உத்தரவாத அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். பிறகு அவர் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.
இந்த நிலையில், பிரியந்த கொல்லப்பட்டதையடுத்து 100,000 டொலர் மதிப்புள்ள நிதியும் முதல் சம்பளமும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் இம்ரான் தெரிவித்தார்.
மேலும், ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு பத்து வருட சம்பளத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த 100,000 டொலர் தொகையானது, சியால்கோட் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகர்களால் திரட்டப்பட்டது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கான தூதுவர் யாசின் ஸோயா, சியால்கோட்டின் தொழிலதிபர்களுடைய முயற்சிகளையும் அதைச் செயல்படுத்த அரசு வழங்கிய ஆதரவையும் பாராட்டினார். பிரியந்த குமாரவுடைய பிள்ளைகளுக்கு அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் பெற்றுத்தர முயல்வதாக அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் இலவச உயர்கல்வி பெற இலங்கை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராஜ்கோ நிறுவனத்திற்கு பிரியந்த குமாரவின் பங்களிப்பு அபாரமானது என்று அவர் கூறினார்.
பிரியந்த 2012இல் இணைந்தபோது, அந்நிறுவனத்தில் 250 ஊழியர்கள் இருந்தனர். ஆனால், அது பல ஆண்டுகளாக விரிவடைந்து, இப்போது சுமார் 1,000 பேர் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.
பிரியந்த குமாரவின் மற்றொரு சக ஊழியரான மாலிக் அத்னான் பிபிசியிடம் பேசியபோது, அவருடைய மனைவிக்கு முதல் சம்பளத்தை வழங்குவதற்காக குமாரவின் மனைவியை சியால்கோட்டுக்கு அழைக்க நிறுவனம் விரும்பியது. ஆனால், வெளியுறவுத் துறை அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், கராச்சியில் இன்னும் பணிபுரியும் குமாரவின் சகோதரர் தொழிற்சாலைக்கு வந்தார்.
பிரியந்த குமாரவைக் கொலை செய்ய முயன்ற கும்பலை எதிர்த்து நின்றதற்காக மாலிக் அத்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் விருது வழங்கினார். அவர் தனது உடலை கேடயம் போல காத்து குச்சிகள் மற்றும் தடியடிகளில் இருந்து பிரியந்த சிக்காமல் பாதுகாத்தார்.
பிரியந்தவைக் கொன்றதற்காக குறைந்தது 26 சந்தேக நபர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வீடியோ பதிவேற்றியவருக்கு ஒரு வருட சிறை
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.
பிரியந்த குமாரவின் கொலையுடன் தொடர்புடைய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, கொலையை நியாயப்படுத்திய ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொலையை நியாயப்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றிய நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதையடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கணவரை கொன்றவர்களை மன்னிக்கமாட்டேன்– மனைவி உருக்கம்
பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவி குறித்து, பிரியந்த குமாரவின் மனைவி முதியன்சலாகே நிலுஷி திஸாநாயக்க பிபிசி தமிழிடம் பேசினார்.
தனது கணவர், தம்முடன் இருந்தவாறே தன்னையும், தனது குடும்பத்தையும் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக நிலுஷி கூறினார்.
தனது பிள்ளைகளின் கல்வியை சரியான முறையில் தொடர்ந்தவாறு, அவர்களின் வாழ்க்கையை சிறப்புற செய்வதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
”எனது இலக்கை நோக்கி நான் செல்வேன். அதனையே எதிர்காலத்தில் முன்னெடுப்பேன்” என அவர் கூறினார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தினால், நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, அந்த நாடு உதவி செய்ததை எண்ணி மகிழ்கின்றேன் என்றார்.
கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நபர்களுக்கு மனதளவில் மன்னிப்பு வழங்கக்கூடிய மனநிலைமை உங்களிடம் உள்ளதா? என்று கேட்டோம்.
”குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை சமூகமயப்படுத்தினால், இன்னும் பல பெண்களுக்கு கணவரை இழக்க வேண்டிய நிலைமையும், இன்னும் பல பிள்ளைகளுக்கு தமது தந்தையை இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும் அல்லவா? அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நிலுஷி வலியுறுத்தினார்.
என் கணவரின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், எம்மை போன்று, மேலும் பலர் பாதிக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.” என அவர் தெரிவித்தார்.
நீங்கள் எதிர்காலத்தில் ஏதேனும் தொழில் செய்வதற்கான எண்ணம் உள்ளதா? என்றபோது, நான் எதிர்நோக்கியுள்ள சுகயீன நிலைமை காரணமாக, தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை இல்லை என அவர் குறிப்பிட்டார்.
தனது கணவருக்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டை பிரியந்தவின் மனைவி மறுத்தார்.”என் கணவர் தொழிற்சாலையில் சுவரொட்டிகளைக் கிழித்ததாகக் கூறப்படும் செய்திகளை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவர் ஒரு அப்பாவி மனிதர்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.”பாகிஸ்தானின் வாழ்க்கை நிலைமைகளை அவர் மிகவும் அறிந்திருந்தார். அது ஒரு முஸ்லிம் நாடு. அவர் அங்கு என்ன செய்யக்கூடாது என்பதை அவர் அறிந்திருந்தார், அதனால்தான் அவர் பதினொரு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்,” என்கிறார் நிலுஷி.
தனது கணவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தான் முழுமையாகவே நிராகரிக்கிறார் நிலுஷி. எனது கணவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு கிடையாது என அவர் கூறுகின்றார்.
பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு, இலங்கை அரசாங்கம் அண்மையில் ரூபா 25 லட்சத்தை வழங்கியது. தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு வெள்ளிக்கிழமையன்று நடந்த கொடூரமான கொலையின் தீவிரம் – பாகிஸ்தானையே உலுக்கியது. பலரும் இதுபோன்ற வன்முறை கும்பல்களின் செயல்களைக் கண்டித்து போராட்டங்களிலும் அமைதிக் கூட்டங்களையும் நடத்தினார்கள்.
பிரதமர் இம்ரான் கான், “இது ஒரு பயங்கரமான கும்பல் தாக்குதல்” என கண்டித்ததோடு, “சட்டத்தின் மூலம் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்தார்.
பாகிஸ்தான் தூதரகத்தில்…
பாகிஸ்தானின் சியொல்கோட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர், அதாவது இலங்கை மதிப்பில் 2 கோடியே 2 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா உதவித் தொகை பாகிஸ்தான் அரசாங்கத்தினால் கடந்த வாரம் வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் பிரியந்த குமாரவின் சம்பளப் பணம் அவரது மனைவிக்கு வழங்கப்படவுள்ளது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வின்போதே இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.
ஒரு இலட்சம் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு மறைந்த பிரியந்த குமார பெற்று வந்த சம்பளப் பணம் மாதம் தோறும் வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் தனது உரையில் கூறியிருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவம் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அவரின் பிரிவால் வாடும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைந்து செயற்பட்டு வருகிறார். மேலும், இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு பிரதமர் இம்ரான் கானும் பாகிஸ்தான் மக்களும் உறுதிகொண்டுள்ளனர்.
உலகில் எந்த மதமும் வன்முறையை போதிப்பதில்லை. மகாத்மா காந்தி ஒரு இந்துவால் கொல்லப்பட்டார். அன்வர் சதாத் முஸ்லிம் ஒருவரால் கொல்லப்பட்டார். சாந்தி, சமாதானத்தையே இஸ்லாம் போதிக்கிறது. உலகில் வாழும் ஒவ்வொருவரும் சாந்தி, சமாதானத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இறைத் தூதர் முஹம்மது நபி கூறிய வழியை பின்பற்றி நடக்க வேண்டும்.
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரியந்த குமாரவின் மனைவி நிலுஷி மற்றும் அவரது இரண்டு மகன்மார்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட தேரர்கள், இஸ்லாமிய, இந்து, கத்தோலிக்க மதத் தலைவர்களும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த பிரியந்த குமாரவின் மனைவி நிலுஷி,
“பெளத்த மத தர்மத்தில் போதித்துள்ளதன்படி பழி வாங்குவது நல்லதல்ல. இதனையே எனது இரண்டு பிள்ளைகளுக்கு கூறி வளர்க்கிறேன். இருப்பினும் எனது கணவரை கொலை செய்த கொடூர கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஏனெனில், இது போன்ற துயரச் சம்பவம் உலகில் எங்கேயும் இடம்பெறக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக செயற்பட்ட பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.-Vidivelli