முஸ்லிம் அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே இஸ்லாம் சமய பாட நூல்களில் திருத்தம்

ஏப்ரலுக்கு முன்னர் திருத்திய நூல்கள் விநியோகிக்கப்படும் என்கிறது வெளியீட்டுத் திணைக்களம்

0 604

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இஸ்­லா­மிய சமய பாட­நூல்கள் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன. உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் தொடர்­பாக ஆராய்ந்து வாக்கு மூலங்கள் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள பரிந்­து­ரைகள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரைக்­க­மை­யவே இந்­ந­ட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் பீ.என். அயி­லப்­பெ­ரும விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இஸ்லாம் சமய பாட­நூல்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யுள்­ளதால் அப்­பா­ட­நூல்­களை மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிப்­பதை உட­ன­டி­யாக நிறுத்­தும்­ப­டியும், அப்­பா­ட­நூல்கள் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருப்பின் உட­ன­டி­யாக அவற்றை மீளப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் அண்­மையில் கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள ஆணை­யாளர் நாயகம் அனைத்து தேசிய பாட­சாலை அதி­பர்கள் மற்‌றும் பாடநூல் நேர­டி­யாக விநி­யோ­கிக்­கப்­படும் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு சுற்று நிரு­ப­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்தார். அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், பாட­நூல்கள் மீள­தி­ருப்­பிப்­பெற்றுக் கொள்­ளப்­பட்­டதன் மூலம் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது. ஏப்ரல் மாதத்­துக்கு முன்பு புதிய பாட­நூல்கள் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும். கல்வி அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட குழு­வொன்றின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய, கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பான முஸ்லிம் அதி­கா­ரி­களின் சிபா­ரி­சு­களின் படி இஸ்லாம் சமய பாட­நூல்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் கல்வி வெளி­யீட்­டுத்­தி­ணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பான அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான ஐ.ஏ.எம்.அப்­சானைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

“இஸ்­லா­மிய சமய பாட­நூல்­களில் அடங்­கி­யுள்ள சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களே திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பாட­நூல்­களில் அடங்­கி­யுள்ள சில வச­னங்கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. சில வச­னங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளன. இத் திருத்­தங்கள் இஸ்லாம் பாடத்­திட்டம் மற்றும் மார்க்­கத்­துக்குப் பாதிப்­பில்­லாத வகை­யிலே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அச்­ச­கத்தில் ஒரு தொகை பாட நூல்கள் அச்­சி­டப்­பட்­டுள்­ளன. அந்தப் பாட­நூல்­களில் திருத்­தங்­களில் ஸ்டிக்கர் ஒட்­டப்­படும். ஏற்­க­னவே மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்ள பாட­நூல்கள் மீளப்­பெற்று களஞ்­சி­யத்­துக்கு அனுப்­பப்­பட்டு வரு­கி­றது. அந்­நூல்கள் மீண்டும் திருத்­தங்­க­ளுடன் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட மாட்­டாது.

விஷேட உத்­த­ர­வு­க­ளின்­ப­டியே இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆனால் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்­ப­டாத வகையில் இத்­திட்­டத்தை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. 10 ஆம், 11ஆம் தரங்களுக்குரிய இஸ்லாம் சமய பாடநூல்களிலே பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை 6ஆம், 7ஆம் தரங்களுக்குரிய பாடநூல்களில் ஒரு சில திருத்தங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் அகற்றப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன’ என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.