(எச்.எம்.எம்.பர்ஸான்)
வீட்டில் நகைகளை வைத்து விட்டு போனால் திருட்டுப் போய்விடும் என்ற அச்சத்தில், தான் பதினாறு வருடங்களாக சிறுகச் சிறுக சேர்த்து வந்த 12 பவுண் தங்க நகைகளை தன்னுடன் எடுத்துச் சென்ற போது தொலைத்துள்ளார் வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் வசித்து வரும் பெண்ணொருவர்.
தனது மகளுக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அந்த பெண்மணி கடந்த 19 ஆம் திகதி காலை 10 மணியளவில் அவரது வீட்டிலிருந்து தடுப்பூசி செலுத்தும் நிலையம் நோக்கிச் செல்லும் போதே தான் எடுத்துச் சென்ற நகைகளை தொலைத்துள்ளார்.
தவறவிட்ட நகைகளை அந்த பெண்ணும் அவரது குடும்பமும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந் நிலையில்தான் இவ்வாறு தொலைந்து போன 12 பவுண் நகைகளும் மூன்று நாட்களின் பின்னர் கடந்த 21 ஆம் திகதி அந்த பெண்ணின் கைகளுக்கே கிடைக்கப் பெற்றுள்ளன.
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் ரபீக் முகம்மட் சப்றான் எனும் மாணவன் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது வீதியோரம் சிவப்பு நிற பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
சப்றான் அந்த பையை திறந்தபோது அதில் ஏராளமான தங்க நகைகள் இருப்பதைக் கண்டு வியந்து போயுள்ளான். உடனடியாக அதனை வீட்டுக்கு கொண்டு சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.
நகைகள் தொலைந்து போன தகவலை அறிந்து கொண்ட சப்றானின் பெற்றோர்கள் உடனடியாக உரிமையாளர்களைத் தேடிச் சென்று 21ஆம் திகதி நகைகளை ஒப்படைத்தனர்.
நகைகளை தொலைத்த கவலையில் இருந்த பெண்ணுக்கு மீண்டும் நகைகள் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடிக்குமளவு பஞ்சம் நிலவுகின்ற இந்த காலத்தில் இவ்வாறு நகைகளை கண்டெடுத்து வழங்கியமை அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
தனது நகைகள் அவ்வாறே மீளக் கிடைத்ததால் மகிழ்ச்சியுற்ற அதன் உரிமையாளர், சப்றானின் தாய்க்கு தங்க மோதிரம் ஒன்றை அன்பளிப்புச் செய்த போதும் அதனை சப்றானின் தாய் ஏற்க மறுத்துவிட்டார்.
“இப்போது களவு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதனால்தான் நான் வெளியில் செல்லும் போது நகைகளை எடுத்துச் சென்றேன். நான் நகைகளை தவறவிட்ட போது குறிபார்ப்பவர்களிடம் சென்று நகைகளை கண்டுபிடிக்குமாறு என்னிடம் பலர் கூறினார்கள். நான் நகைகளை தொலைத்தது போன்று எனது ஈமானை தொலைக்க விரும்பவில்லை.
அந்த நகைகள் அனைத்தையும் நான் பதினாறு வருடங்களாக சிறுகச் சிறுக சேமித்தே வாங்கினேன். அதில் ஹராம் கலந்து விடக் கூடாது என்பதற்காக நான் கஷ்டமான நிலையில் இருந்த போதும் வட்டிக்கு அடகு வைக்கவில்லை. அல்லாஹ் என்னை கை விடமாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதேபோன்றுதான் அல்லாஹ் எனது நம்பிக்கையை வீணாக்கவில்லை” என்று நகைகளின் உரிமையாளர் மேலும் குறிப்பிட்டார்.
இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கவழக்கங்கள், திருட்டுச் சம்பவங்கள் நிறைந்து காணப்படுகின்ற இந்த கால கட்டத்தில் சப்றானின் முன்மாதிரியான இந்த செயற்பாடானது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
இந் நிலையில் நகைகளை கண்டெடுத்து ஒப்படைத்த மாணவன் சப்றானை கௌரவித்து பாராட்டிய நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (24) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகை உரிமையாளரின் சார்பாக அவரது உறவினரான வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழக தலைவர் பிஸ்தாமி ரவூப் கலந்து கொண்டு பணப் பரிசு மற்றும் நினைவுப் பரிசில்களை மாணவன் சப்றானுக்கு வழங்கி வைத்தார்.
மாணவன் சப்றானை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் எனப்பலரும் பாராட்டி வாழ்த்தியதுடன் அவரது முன்மாதிரியான செயலை ஏனைய மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.- Vidivelli