(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளரும் நிந்தவூர் பிரதேசத்தின் ஆரம்பகால ஊடகவியலாளரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான கலாபூஷணம் ஏ.எல்.எம்.அமீன், தனது 77ஆவது வயதில் கடந்த 18ஆம் திகதி காலமானார்.
கல்வி, கலாசாரம், கலை, இலக்கியம் மற்றும் ஊடகம் என அனைத்து துறைகளிலும் கோலோச்சி, தனது வாழ்நாளை சமூகத்திற்காகவும் பிரதேச முன்னேற்றத்திற்காகவும் முழுமையாக அர்ப்பணித்திருந்த இச்செயல் வீரரின் மறைவானது இப்பிராந்தியத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.
கிழக்கிலங்கையின் ஊடகத்துறை முன்னோடியாகத் திகழ்ந்த இவர் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் வீரகேசரி, தினபதி, சிந்தாமணி உள்ளிட்ட தேசிய பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார். தற்போது போன்று நவீன தொழில்நுட்ப வசதிகள் எவையும் இல்லாத காலத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பிராந்திய நடப்பு விவகாரங்கள் மற்றும் செய்திகளை பத்திரிகைகள் ஊடாக மக்கள் முன் கொண்டு செல்வதற்காக தன்னை அர்ப்பணித்திருந்த ஓர் ஊடக ஜாம்பவானாக இவர் நோக்கப்படுகிறார்.
இப்பிராந்தியத்தில் சம காலத்திலும் தனக்குப் பின்னரும் ஊடகப்பணியாற்றக் கூடிய எழுத்தார்வமுள்ள இளையோரை இனம் கண்டு அவர்களை ஊடகத்துறைக்குள் கொண்டு வருவதிலும் இவர் கரிசனை செலுத்தியிருக்கிறார்.
சிரேஷ்ட பத்திரிகையாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் மு.கா. ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் செய்தித் தொடர்பாளராக கடமையாற்றிய பத்திரிகையாளர் ஏ.எல்.எம்.நயீம் ஆகியோர் இவரது இளைய சகோதரர்கள் என்பதும் இவர்கள் இருவரும் ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு மூத்த சகோதரரான ஏ.எல்.எம்.அமீன் அவர்களே கால்கோளாக இருந்துள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
கல்வி மற்றும் ஊடக சேவைகளுடன் இணைந்ததாக சமூக சேவைகளிலும் இவர் கூடிய ஈடுபாடு காட்டி வந்துள்ளார். நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளராக இருந்து பள்ளிவாசல் பரிபாலனம் மற்றும் ஊர் நலன் சார்ந்த விடயங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவ்வாறே நிந்தவூர் பிரதேச காதி நீதிபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் குடும்பப் பிணக்குகளை தீர்த்து வைப்பதில் நீதி, நேர்மை, மனிதாபிமானம் என்பவற்றுக்கு முன்னுரிமையளித்து, சமூக மட்டத்தில் நற்பெயர் பெற்றிருக்கிறார்.
பிரதேச அபிவிருத்தி, முன்னேற்றம் என்பவற்றில் எப்போதும் அக்கறையுடன் செயற்பட்டு வந்த மர்ஹூம் ஏ.எல்.எம்.அமீன், நிந்தவூர் வௌவ்வாலோடை பிரதேசத்தில் மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கும் நிந்தவூரில் குடிநீருக்கான பாரிய குழாய் நீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அவசியம் தேவைப்பட்ட அடிப்படை விடயங்களை முன்னின்று செய்து கொடுத்து, அவை நிறைவேறுவதற்கு பின்புலமாக இருந்து பங்காற்றியிருந்தார்.
நிந்தவூர் மற்றும் காரைதீவு பிரதேசங்களுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் இப்பிரதேச பாடசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்காக சிறந்த அணுகுமுறைகளை கையாண்டிருந்தார். இதற்கென அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக தனது இயல்பான இன்முகத்துடன் மென்மையாக அணுகி, வெல்லும் வசீகரத்தை இவர் கொண்டிருந்தார்.
ஆசிரியராக, அதிபராக, கல்வி அதிகாரியாக, பொது ஸ்தாபனங்களின் நிர்வாகியாக கடமையாற்றிய சந்தர்ப்பங்களிலெல்லாம் தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களையும் சரி, தனது மேலதிகாரிகளையும் சரி, தன்னக்கேயுரித்தான வசீகரமான நற்குணங்கள் மூலமே அனைவரதும் மனங்களை வெற்றி கொண்டு காரியமாற்றும் வல்லமையைக் கொண்டிருந்தார். இதனால் முரண்பாடுகள் அற்ற நிர்வாக முகாமைத்துவம் இவரிடம் காணப்பட்டது. இதன் மூலம் பணிகள், சேவைகள் யாவும் சீராக முன்நகர்ந்தமை இவரது தலைமைத்துவ சிறப்பம்சமாக காணப்பட்டது.
இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கல்முனை மாவட்ட கிளையின் செயலாளராகவும் கல்வித் திணைக்களத்தின் கல்முனை மாவட்ட கடன் வழங்கல் சபையின் உறுப்பினராகவும், நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், நிந்தவூர் வர்த்தகர் சங்கத்தின் செயலாளராகவும், நிந்தவூர் பிரதேச ஓய்வூதியர் சங்கத்தின் தலைவராகவும், ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட செயலாளராகவும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
1965ஆம் ஆண்டு நிந்தவூர் எழுத்தாளர் சங்கத்தின் உப தலைவராக செயற்பட்ட இவர், தமிழ் உலகுக்கு புகழ் சேர்க்கும் வகையில் இவ்வூரில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் தமிழ் இலக்கிய பெருவிழா ஒன்றை அமைப்பின் நிர்வாகிகளுடன் முன்னின்று நடத்தி, சாதனை நிலைநாட்டியிருந்தமை அவரது கலை, இலக்கிய பங்களிப்பின் பெறுமானத்தை பறைசாற்றுகின்றது எனலாம்.
சுமார் 60 வருட கால எழுத்து, கலை, இலக்கிய துறைகளில் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக கடந்த 2016ஆம் ஆண்டு கலாசார, பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் இவர் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி, கலாசாரம், சமூக சேவை, கலை, இலக்கியம், ஊடகம் என்று அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து, பல்துறை ஆளுமையாகத் திகழ்ந்த நிலையில் சமூகத்திற்காக உன்னத சேவையாற்றி, மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள மர்ஹூம் ஏ.எல்.எம்.அமீன் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவரது மகத்தான சேவைகள் என்றும் நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.
அன்னாரது ஜனாஸா பெரும் திரளானோரின் பங்குபற்றுதலுடன் நிந்தவூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் உட்பட அரசியல் பிரமுகர்கள், ஊடக, கலை, இலக்கிய, சிவில் சமூக அமைப்புகள் பலவும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டிருந்தன.- Vidivelli