சிங்கள நோயாளிகளினதும் எனது சமூகத்தினதும் பிரார்த்தனைகளால் அல்லாஹ் என்னைப் பாதுகாத்தான்
முதன் முறையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார் டாக்டர் சாபி
ஆங்கிலத்தில்: நமினி விஜேதாச
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
“சிறைக்கூடத்தில் 1.5 லீற்றர் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தலொன்றினை வைத்திருப்பதற்கு அனுமதித்தார்கள். அங்கு எவருக்கும் தலையணை வழங்கப்படவில்லை. என்னால் தரையில் தலையை வைத்து தூங்க முடியாது. அதனால் பிளாஸ்ரிக் போத்தலில் தண்ணீரை நிரப்பி பின்பு சிறிது தண்ணீரை குறைத்துவிட்டால் அந்தப் போத்தல் நெகிழக் கூடியதாக இருக்கும். நான் இந்த பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தலையே தலையணையாகப் பாவித்து 46 நாட்கள் சி.ஐ.டி.யில் உறங்கியிருக்கிறேன். அது எனக்கு பழக்கப்பட்டுவிட்டது.”
டாக்டர் சாபி சிஹாப்தீனுக்கு கடும் சோதனை 2019 மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமானது. டாக்டர் சாபிக்கு எதிராக சிங்கள மொழி பத்திரிகையொன்று முன்பக்கத்தில் தலைப்புச் செய்தியொன்றினை வெளியிட்டது. டாக்டர் சாபி சிஹாப்தீன் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் எனவும் அச்செய்தி குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த தேசிய தௌஹீத் ஜமா அத் குழுவினரே உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தினர். அத்தோடு டாக்டர் சாபி 4000 சிங்கள தாய்மார்களுக்கு சிகிச்சையின்போது கருத்தடை செய்ததாகவும் அச்செய்தி குற்றஞ்சாட்டியிருந்தது.
டாக்டர் சாபி சிஹாப்தீன் சிறை வைக்கப்பட்டிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக ஊடகமொன்றுக்கு பேசுவது இப்போதுதான். அவரும், அவரது குடும்பத்தினரும் நீண்ட காலம் பொறுமையுடன் இந்த நெருக்குதல்களை சகித்துக் கொண்டிருந்தமையை அவர் விளக்கினார். என்னை இறைவனும் பொறுமையும், நிதானமுமுள்ள சிங்கள மக்களின் பிரார்த்தனைகளும், சமூகத்தின் துஆ பிரார்த்தனைகளுமே பாதுகாத்தன என்றார் டாக்டர் சாபி.
சாபி சிஹாப்தீன் பெண்களின் இனப் பெருக்க சுகாதாரம் தொடர்பான சிரேஷ்ட வைத்திய அதிகாரியாவார். 2015 ஆம் ஆண்டு இவர் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்காக தான் சுகாதார அமைச்சில் வகித்த பதவியிலிருந்தும் இராஜினாமா செய்தார். ஆனால் அவரால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த இயலாமற்போனது.
தனது பதவிக்காலத்தில் தான் 8000 பெண்களுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்துள்ளதாக தேர்தலுக்கு முன்னர் டாக்டர் சாபி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவர்களில் 4000 பேருக்கு அவர் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாக குறித்த சிங்களப் பத்திரிகை குற்றம்சாட்டியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் கோமாளித்தனமானவையென அநேகமான வைத்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சில மருத்துவ நிபுணர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாகவே சவாலுக்குட்படுத்தியுள்ளனர்.
டாக்டர் சாபி சிஹாப்தீன் கலாவெவ எனும் முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்தவர். இக்கிராமம் அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பெரிய மற்றும் தொன்மையான முஸ்லிம் குடியேற்றமாகும். அவரது பாட்டனார் அக்கிராமத்தின் முதல் அரசாங்க உத்தியோகத்தராவார். பாட்டனார் விஜிதபுர ரஜமகா விகாரையின் இளம் பௌத்த பிக்குகளுக்கு பாலி மொழியைக் கற்றுக்கொடுத்தவர். டாக்டர் சாபியின் தந்தை பாடசாலை அதிபர். அவரது தாயார் குடும்பத்தலைவி.
மூன்று பிள்ளைகளில் இளையவரான இவர் டாக்டர். இவரது சகோதரியும் ஒரு டாக்டர். சகோதரர் கணக்காளராவார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று மருத்துவராக வெளியேறினார். 2003 இல் இமாரா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இமாராவும் ஒரு வைத்தியராவார். அத்தோடு பல்கலைக்கழகத்தில் அவரது ஜூனியருமாவார். திருமணத்தின் பின் மனைவியின் பிரதேசமான – குருநாகலில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தனர்.
டாக்டர் சாபி 2004 இல் சுகாதார அமைச்சில் இணைந்து கொண்டு மத்திய மாகாணத்தில் கடமையாற்றினார். அவர் தேர்தலில் களமிறங்குவதற்காக தனது பதவியை இராஜினமாச் செய்த போது தம்புள்ளை வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அத்தோடு தனியார் வைத்திய சேவையையும் ஆரம்பித்து நடத்தினார். குருநாகல் நகரத்தில் வைத்திய ஆய்வு கூடமொன்றினையும் ஸ்தாபித்து நடத்தினார். அத்தோடு வாகன வர்த்தகம் மற்றும் ஆடைத் தொழிற்துறையிலும் ஈடுபட்டார்.
அவர் தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து குருநாகல் நகரில் சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்காக உடன்படிக்கை யொன்றில் கைச்சாத்திட்டார். நண்பர்கள் பல மில்லியன் ரூபாய்களை டாக்டர் சாபியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டனர். இக் காலப்பகுதியில்தான் டாக்டர் சாபி கைது செய்யப்பட்டார். தற்போது இந்தப் பணம் சி.ஐ.டியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் இலக்காக மாறியுள்ளது.
தேர்தலில் டாக்டர் சாபி 54000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டாலும் அவ்வாக்குகள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்ளப் போதுமானதாக இருக்கவில்லை.
தேர்தல் நடைபெற்று 16 மாதங்களின் பின்பு சுகாதார அமைச்சு டாக்டர் சாபியையும் மேலும் இருவரையும் மீண்டும் சேவையில் இணைத்தது. டாக்டர் சாபி 2018 பெப்ரவரி முதல் 2019 மே மாதம் வரை குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது முதல் எல்லாப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் மத்தியில் பதற்றநிலைமை உருவாகியிருந்தது. பிரபலமான முஸ்லிம் சமூக தலைவர்கள் ஆதாரமற்ற, சந்தேகத்துக்கிடமான விடயங்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். சிலர் விடுதலை செய்யப்படும்வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். தான் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக வதந்திகள் பரவுவதை டாக்டர் சாபி சிஹாப்தீன் அறிந்து கொண்டார். அவரது மனைவி நாட்டைவிட்டு வெளியேறி நிலைமை சீரானதும் மீண்டும் நாடு திரும்பலாம் எனக் கூறியிருந்தார்.
“நான் மிகவும் பீதியடைந்திருந்தேன். ஏன் என்னை கைது செய்யவேண்டும்” என எனக்கு நானே கேள்வியெழுப்பிக்கொண்டேன்’’
நான் எனது நாட்டை விட்டும் வெளியில் சென்று வாழ விரும்பவில்லை. ஏனென்றால் எனது நாட்டின் மீது நான் மிகவும் அன்பு செலுத்துகிறேன். ஏற்கனவே நாட்டிலிருந்தும் வெளியேறி வேறு நாடொன்றில் வாழ்வதற்கு எனக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
இன்றும்கூட ஏழை நோயாளர்களின் ஆசிகளும், பிராத்தனைகளுமே என்னைப் பாதுகாத்தன, காப்பாற்றின என என்னால்கூற முடியும். ஏனென்றால் அவர்களுக்காக நான் கடுமையாக உழைத்தேன். துன்பங்களினால் நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் வேதனைகளைத் தீர்த்து வைத்தால் அவர் தனது மனதினால் எங்களுக்குப் பிரார்த்திப்பார்.
‘கடமைக்குச் செல்வது, கடமையை நிறைவேற்றுவது அதன்பின்பு வெளியேறுவது’ இதுதான் டாக்டர் சாபி சிஹாப்தீனின் கொள்கை. அவர் வீண் பேச்சுக்களில் தனது நேரத்தைச் செலவிடமாட்டார்.
வைத்தியசாலை பணியாளர்கள் ஸ்கேன், பரிசோதனைகள், சத்திரசிகிச்சை என்பனவற்றுக்காக ‘சாபி மஹத்தயா’ வையே நாடிச் செல்வார்கள்.
செல்வாக்குள்ள சிலர் டாக்டர் சாபியை போலியான அருவறுக்கத்தக்க வகையில் விமர்சிக்க ஆரம்பித்தனர். சில சந்தர்ப்பங்களில் வார்த்தைகள் பரிமாறப்பட்டன. அவர் பிடிவாதக்காரர், எவருக்கும் அடங்காதவர் எனக் கருதப்பட்டார்.
தன்னைப்பற்றிய இந்த விமர்சனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘நான் எவருக்கும் தலை வணங்குவதில்லை. எனது சொந்த கடமையிலே நான் அக்கறையாக இருக்கிறேன். என்றாலும் இது இந்தளவுக்கு எனக்கு பாதிப்பை ஏற்படுத்துமென நான் ஒரு போதும் நினைக்கவில்லை” என்றார்.
பத்திரிகையில் செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து டாக்டர் ஷாபி சட்டவிரோத கருத்தடைகளில் ஈடுபடுவதாக பிரபல மகப்பேற்று வைத்தியர் ஒருவர் முகநூலில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். இதனையடுத்து டாக்டர் சாபி சிஹாப்தீனுக்கு சமூக வலைத்தளங்களில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மே 24 ஆம் திகதி அவர் கடமைக்குச் செல்ல அச்சமுற்றார். வைத்தியசாலை வளாகத்துக்கு வெளியே அவருக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கப்பட்டது.
அன்று இரவு அவர் தனது 12 வயது மகனுடன் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தார். நோன்பு திறந்ததன் பின்பே தொழுகைக்காக அங்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு பொலிஸார் வருகை தந்துள்ளதாக தகவல் ஒன்று கிடைத்தது. அவர் உடனே வீட்டுக்குச் சென்றார். பொலிஸாருடன் பேசினார். தான் அநியாயமான முறையில் இலக்கு வைக்கப்பட்டிருப்பதை விளக்கினார். பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். முகநூலில் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்த வைத்தியருக்கு எதிராக முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்கென்றே டாக்டர் ஷாபியை பொலிசார் அழைத்துச் சென்றனர்.
பொலிஸ் நிலையம் சென்றதும் டாக்டர் சாபி தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்தவற்கு முயற்சித்தார். ஆனால் பொலிஸாரால் அவரது முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பொலிஸார் அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டரின் வீடு பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. வீட்டிலுள்ள சிசிரிவி கமராவை செயலிழக்கச் செய்யுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர். அவர்கள் பிள்ளைகளின் கணினிகள், மடிக்கணினி , சிறிய பெட்டி (Brief case) மற்றும் பழைய கையடக்கத் தொலைபேசிகள் என்பனவற்றை கையகப்படுத்திக் கொண்டனர். அவரது மனைவியின் குர்ஆனைக்கூட பொலிஸார் பிடுங்கியெடுத்தனர்.
பின்பு டாக்டரை பொலிஸ் பாதுகாவலுடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சட்டத்தரணி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பொன்றினை மேற்கொள்வதற்குக் கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. அவரது கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். பொலிஸ் உத்தியோகத்தர் அவரை அங்கிருந்தும் வெளியேற அனுமதிக்கவில்லை. அத்தோடு அவரது முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு விரும்பவுமில்லை. அவர் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பது அவருக்கு புரியவில்லை.
தன்னை வீடு செல்ல அனுமதிக்குமாறும் நாளை திரும்பி வருவதாகவும் டாக்டர் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் வேண்டினார். அவ்வாறு அனுமதிக்க முடியாதென பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்தார். எவரும் அவரை வந்து பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
‘நான் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டேன். அவர்கள் என்னை தடுத்து வைத்திருப்பார்களா? வீடு செல்ல அனுமதிப்பார்களா? எனக்கு பொலிஸ் நடைமுறை தெரியாது. இதுபற்றி கேட்பதற்கும் ஒருவரும் இருக்கவில்லை. நான் உதவியற்றவனானேன்’ என்று டாக்டர் சாபி அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தார்.
அடுத்த தினம் காலை டாக்டர் சாபி சிஹாப்தீனுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்குவதற்கு அவரது இரு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலிடத்து உத்தரவுக்கமைய விசாரணைகளுக்காக அவரை பொலிஸில் தடுத்து வைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தார்கள். பின்பு அவர் குற்றவியல் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் அவர் கதிரையொன்றில் அமரச் செய்யப்பட்டார். அவரது சட்டத்தரணிக்கு அப்போதும் அனுமதி வழங்கப்படவில்லை.
குற்றவியல் விசாரணை பிரிவில் பலவந்தமான கருத்தடை சிகிச்சை பற்றி கேள்வி எழுப்பப்படவில்லை. ஆனால் அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப வரலாறு தொடர்பாகவே விசாரணை செய்யப்பட்டது. இவரது கைது தொடர்பில் வெளியில் செய்திகள் பரவின. ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்தனர்.
‘இதன் பின்பே, என்னை கைது செய்வதற்காக பொலிஸில் பேசிக் கொள்ளப்பட்டதை நான் கேட்டேன்’ என்றார் டாக்டர் சாபி.
‘அவர்கள் என்னை சி.ஐ.டியிடம் ஒப்படைக்கவுள்ளதாக அறிந்து கொண்டேன். என்ன காரணத்துக்காக என்று எனக்குத் தெரியவில்லை. எனது கைவிரல் அடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. எனது ஆடைகள் களையப்பட்டு உடல் பரிசோதிக்கப்பட்டது. இது எனக்கு உளவியல் ரீதியான அதிர்ச்சியை தந்தது’ என்றார் அவர்.
டாக்டர் சாபி சி.ஐ.டி. பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு கைவிலங்கிடப்பட்டார். அது மே மாதம் 25 ஆம் திகதி சுமார் பிற்பகல் 6 மணியளவில் நடந்ததாகும். அவர் சட்ட வைத்திய அதிகாரி (JMO) யிடமும் அழைத்துச் செல்லப்பட்டார்.
பொலிஸார் அவர் பணியாற்றிய குருநாகல் போதனா வைத்தியசாலைக்கும் அவரை அழைத்துச் சென்றார்கள்.
‘முழு உலகத்தின் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டேன்’ என்கிறார் அவர்.
‘அனைவரும் என்னைப் பார்த்தார்கள். என்மீது மரியாதை செலுத்தியவர்கள். எனக்கு கௌரவம் வழங்கியவர்கள் அனைவர் முன்னிலையாக அங்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். எனது நிலையைப் பார்த்து, சில ஊழியர்களின் விழிகளில் கண்ணீர் கசிந்தது’ என்றார் டாக்டர் சாபி.
அவர் கொழும்பிலுள்ள சி.ஐ.டி.யின் நான்காம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சி.ஐ.டி யின் தலைமைக் காரியாலயத்தின் நான்காம் மாடியின் அமைப்பை நினைவு கூர்ந்தார். அங்கு அதிகமானோர் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 அறைகள் உள்ளன. பிரபல போதைப்பொருள் கடத்தல் காரன் மாகந்துரே மதூஸ் என்பவனும் அங்கு இருப்பதாக டாக்டரிடம் தெரிவிக்கப்பட்டது.
‘நான் அதிர்ச்சிக்குள்ளானேன். மாகந்துர மதூஸின் மட்டத்தில் நான் நடத்தப்படுவதற்கு இந்த சமூகத்துக்கு நான் என்ன குற்றம் செய்து விட்டேன்’ என்ற கவலை என்னுள் எழுந்தது. ‘நான் அழவில்லை. அழுவதினால் பயனில்லை. எனது இலக்கு அங்கிருந்து எப்படியேனும் வெளியில் வருவதே. எனக்கு தீங்கு விளைவிக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கை என்னிடமிருந்தது. இறைவன் என்னைப் பாதுகாப்பான். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் இருக்கிறான். அவர்கள் என் கையில் விலங்கிட்டபோதும் அல்லாஹ்வே நினைவுக்கு வந்தான்’ என்றார்.
டாக்டர் சாபி சிஹாப்தீன் 46 தினங்களை சிஐடியில் கழித்தார். ஜூலை 25 ஆம் திகதி அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. பிணை வழங்கப்பட்ட பின்பும் அவர் கேகாலை சிறைச்சாலையில் இரு வாரங்களைக் கழித்தார். அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பலகட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். சில வேளைகளில் சாட்சியாளர்கள் சி.ஐ.டி.க்கு அழைத்து வரப்பட்டு வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
‘எனக்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் என்னுடன் தொடர்புபடாதவை. சோடிக்கப்பட்டவை என்று பிடிவாதமாகக் கூறினேன். குற்றச்சாட்டுக்கள் என்னுடன் தொடர்புபட்டவை அல்ல என்று விசாரணைகளில் தெரிவித்தேன். இம்முறை அவர்கள் நிலைமையை விளங்கிக் கொண்டார்கள்’ என்றார் டாக்டர் சாபி.
டாக்டரின் குடும்பம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. அவர் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்று இரவு குடும்பத்தினர் வீட்டை விட்டும் வெளியேறினர். அவரது மனைவி இமாரா பிள்ளைகளை அவர்களது பாடசாலைகளிலிருந்தும் வெளியேற்றி கொழும்புக்கு வந்து சேர்ந்தார். ஆனால் முஸ்லிம்கள் கூட டாக்டர் சாபியின் மனைவிக்கு இடமளிக்கவில்லை. அவர் வாடகைக்கு பெற்றுக்கொண்ட வீட்டுத் தொகுதியில் 7 மாடிகள் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. அவரது நண்பரான குடும்பமொன்று இந்த தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருந்தது.
‘மனைவி மிகவும் பாரிய அளவில் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். முழுமையாக தொடர்ந்து பீதியில் இருந்தார். பிள்ளைகளுக்கு பாடசாலை தேட வேண்டியிருந்தது. அவரால் தொடர்ந்தும் குருநாகலையில் தனது வேலையைத் தொடர முடியாமலிருந்தது. அதனால் இடமாற்றத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. அவரிடம் கையில் பணம் இருக்கவில்லை.’
‘எனது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் மனைவியைத் துரத்திக் கொண்டிருந்தார்கள். எனது பிள்ளைகளை பாதுகாக்க முடியாமலிருந்தது. மனைவிக்கு வெளியில் பகிரங்கமாக பேசமுடியாமலிருந்த தான் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அச்சமடைந்தார். தான் கொலை செய்யப்படலாம் என்று மனைவி பீதியுற்றார்.
பிள்ளைகள் குருநாகலிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து கல்முனைக்கும் அதன் பின்பு மாற்றப்பட்டார்கள். இப்போது அவர்கள் கண்டியில் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
பல்வேறு போராட்டங்களை
எதிர்கொள்ள வேண்டிய நிலை
டாக்டர் சாபி சிஹாப்தீன் பலதரப்பட்ட நிறுவனங்கள் முன்னிலையிலும் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதையடுத்து சுகாதார அமைச்சு அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியது. அவர் பொதுச் சேவைகள் ஆணைக்குழுக்கு மேன்முறையீடு ஒன்றினை அனுப்பி வைத்தார். அதில் தன்னை மீளவும் பதவியில் அமர்த்தும்படியும் சம்பள நிலுவையைப் பெற்றுத் தரும்படியும் கோரியிருந்தார். இதனையடுத்து பொது சேவைகள் ஆணைக்குழு டாக்டர் சாபியின் சம்பள நிலுவையை வழங்கும்படி சுகாதார அமைச்சை அறிவுறுத்தியது. ஆனால் அவரை மீண்டும் சேவையில் அமர்த்தும் படி உத்தரவிடவில்லை.
பொது சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய டாக்டர் சாபி இறுதியாக கடமையாற்றிய குருநாகல் போதனா வைத்தியசாலை அவருக்கு அழைப்பாணை ஒன்றினை அனுப்பி வைத்தது. இந்த அழைப்பாணை டிசம்பரில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆரம்ப விசாரணையாக அவரிடம் வாக்குமூலம் கோரப்பட்டது. டாக்டர் சாபி சட்டவிரோதமான முறையில் கருத்தடை சிகிச்சை செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இரண்டரை வருடங்களின் பின்பே ஆரம்ப விசாரணைக்காக அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த வருடம் பொதுச் சேவைகள் ஆணைக்குழு டாக்டருக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரிகைகளை சமர்ப்பித்தது. கட்டிலின் பெயர் அட்டையில் மாற்றங்களைச் செய்தது, 2017 ஜூன் மாதத்துக்கும் 2019 மே மாதத்துக்குமிடையில் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக பதவி வகித்தமை, அவரது உத்தியோகபூர்வ தினசரி குறிப்புப் புத்தகத்தில் மனைவி பதிவொன்றினை பதிவு செய்வதற்கு அனுமதியளித்தமை என்பனவே குற்றச்சாட்டுகளாகும். அவர் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதில் வழங்கிய போதும் கண்டிக்கப்பட்டதுடன் அவரது சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்தோடு விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை டாக்டர் சாபி சிஹாப்தீன் ஜூன் 2019இல் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்தார். இம்மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இவருக்கு எதிரான பிரதான வழக்கு குருநாகல் நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அவர் மீது இன்னும் குற்றம் சுமத்தப்படவில்லை. குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றுக்கு தொடர்ந்தும் அறிக்கைகளை சமர்ப்பித்து வருகிறது.
இவர் கைது செய்யப்பட்ட பின்பு பாரியளவில் சட்ட விரோதமாக செல் வம் ஈட்டியதாகவும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் மேலதிகமாக குற்றம் சுமத்தப்பட்டார். வழக்கு நாளை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வுள்ளது. நன்றி: சன்டே டைம்ஸ்.
-Vidivelli