மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மத்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது மகள் மரீனா மஹாதீர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. அவர் எம்முடன் சிரித்துப் பேசினார்” என நேற்று மாலை அவரது மகள் தெரிவித்துள்ளார்.
டாக்டர் மஹாதீரின் உடல்நிலை குறித்து உலகெங்கும் பகிரப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் மரீனா வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் மஹாதீரின் உடல்நிலை குறித்து மலேசியாவின் தேசிய இருதயநோய் சிகிச்சை நிலையம் அவ்வப்போது விபரங்களை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
96 வயதான டாக்டர் மஹாதீர், கடந்த சனிக் கிழமை (ஜனவரி 22) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்தில் அவர் மூன்றாவது முறையாக தேசிய இருதயநோய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவின் சிற்பி என வர்ணிக்கப்படும் மஹாதீர் முகம்மத், இரண்டு தடவைகளில் மொத்தமாக 24 வருடங்கள் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1981 முதல் 2003 வரை பிரதமராக பதவி வகித்த அவர், 2018 ஆம் ஆண்டு தனது 92 ஆவது வயதில் மீண்டும் பிரதமராக தெரிவானமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli