பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பு நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர், இலங்கையுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள பல்துறை ஒத்துழைப்பினை விரிவுபடுத்துவது அவசியமாகும். இலங்கையர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியது அவசியம்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் உச்ச பலனை பெற்றுக் கொள்வதற்கு இரு நாடுகளுக்குமிடையில் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல், கருத்துப் பரிமாறல், இரு நாடுகளுக்குமிடையிலான சந்தை வாய்ப்பினை ஊக்கப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
பாகிஸ்தான் அரசாங்கம் பௌத்த சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் உள்ள பௌத்த மக்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கான திட்டங்களை விரிவுபடுத்துமாறும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் கல்வி,சுகாதாரம், தொழிநுட்பம்,சுற்றுலா மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைகளில் காணப்படும் உறவினை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதமர் இம்ரான் கானிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.-Vidivelli