யு.எல். முஸம்மில்,
குருநாகல்
மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பழக்கம் என்ற தலைப்பில் கடந்த வார விடிவெள்ளியில் ஆக்கம் ஒன்று வெளிவந்திருந்தது. அந்த ஆக்கத்தைப் படிக்கும்போது பாடசாலைகளில் இருந்தும் மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது.
இதனுடன் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தம். குருநாகல் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் அமைந்துள்ள சிறிய பாடசாலையொன்றில் நடந்த சம்பவம் இது. ஒவ்வொரு வகுப்பிலும் மிகச் சிறிய தொகை மாணவ, மாணவிகளை கொண்ட அந்தப் பாடசாலையின் இரண்டாம் வகுப்பு பாட நேரத்தின்போது மாணவி ஒருவரின் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருந்ததை அவதானித்த அந்த வகுப்பு ஆசிரியை மாணவியிடம் சில விபரங்களை கேட்டுள்ளார். அதன்போது அந்த மாணவி வழங்கிய பதில் ஆசிரியையை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. அதாவது தான் பாடசாலை வரும்போது எனது தந்தை வீட்டில் வாங்கி வைத்திருந்த டொபிகள் சிலவற்றை எடுத்து வந்ததாகவும் அதை ஏனைய மாணவியருக்கும் வழங்கிவிட்டு தான் இரண்டு டொபிகளை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். தான் அந்த டொபியை சாப்பிட்டதில் இருந்து தலை சுற்றுவது போல் உள்ளது என்றும் அந்த டொபி அவ்வளவு சுவையானதாகவும் இல்லை என்றும் ஆசிரியையிடம் கூறியுள்ளார். அத்தோடு தான் சாப்பிட்ட டொபியின் தாள்களை கொண்டு வந்து வகுப்பாசிரியையிடமும் காண்பித்துள்ளார். இதுபோன்ற டொபியை எனது வாப்பா அடிக்கடி சாப்பிடுவார், எமது சாச்சாவும் இந்த டொபியை சாப்பிடுவதை கண்டுள்ளேன், வாப்பா சாப்பிட்டுவிட்டு வைத்திருந்த டொபிகளில் சிலவற்றைத் தான் நான் கொண்டுவந்து இவர்களுக்கும் கொடுத்தேன், நானும் சாப்பிட்டேன் என்றும் மேலும் கூறியுள்ளார்.
அந்த டொபி தாள்களைப் பெற்றுக்கொண்ட ஆசிரியை தனக்கும் அதுபற்றிய தெளிவு இல்லாமையால் அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுடன் இவ்விடயம் பற்றி கலந்துரையாடியுள்ளார். அப்போதுதான் அது ஒரு போதைப்பொருள் என்பது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
அப்படியாயின் பெற்றோர்தான் குழந்தைகளுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்துகிறார்களா? முன்னர் வீடுகளில் தந்தை சிகரட் குடிப்பதை பார்த்த பிள்ளைகளும் பழகிய காலம் கடந்து, இப்போது தந்தை பயன்படுத்தும் போதைப் பொருட்களை பிள்ளைகளும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது எவ்வளவு ஆபத்தான விடயம்?
இதுபோன்றுதான் இதே மாவட்டத்தில் உள்ள பிரபலமான முஸ்லிம் பாடசாலையொன்றில் நடந்த சம்பவமும் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. மாணவர்கள் தமது இடைவேளையின் போது விளையாட்டரங்கில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் இருந்த ஒரு மாணவன் புதிதாக வந்த சிறிய வகுப்பு மாணவனை நோக்கி ஓடோடி வந்து திடீரென தனது கையில் இருந்த ஏதோ ஒன்றை அந்த மாணவனின் வாயில் திணித்து விட்டு ஓடியுள்ளான். பின்பு அந்த மாணவன் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். என்ன நடந்தது என விசாரித்ததில் அந்த மாணவனின் வாயில் போதைப்பொருள் திணிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் தெரியவந்தது. இதனைச் செய்தவன் யார் என்பதை அந்த மாணவனால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியாயின் மாணவர்கள் மூலமாகவே திட்டமிட்டு ஏனைய மாணவர்களையும் போதைக்கு அடிமையாக்கும் சதிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
இவை நான் சுட்டிக்காட்டிய இரண்டு விடயங்கள் மட்டுமே. பாடசாலைகளில் இதுபோன்று பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. மிகவும் கவலைக்குரிய செய்தி என்னவென்றால் இஸ்லாம் போதைப்பொருளை ஹறாமாக்கி, கடுமையாக தடை செய்துள்ளது. இவைகளின் விளைவுகள் பற்றி தாராளமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் அறிவுறுத்தப்படுகின்றது. பள்ளிவாசல் மிம்பர் மேடைகளில் தெளிவு படுத்தப்படுகின்றது. ஊடகங்களிலும் வெளிச்சமிட்டு காட்டப்படுகின்றன. எனினும் நல்லறிவைப் போதிக்கும் எமது பாடசாலைகளிலிருந்தே போதைக்கு அடிமையாகுபவர்கள் உருவாகிறார்கள் என்பதை அறிகையில் கவலையே மேலெழுகிறது.
எனவே இந்த விடயத்தில் பாடசாலைகளில் ஊடுருவியுள்ள போதைப் பழக்கத்தை துடைத்தெறிய எல்லோருமாக இணைந்து ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இன்றேல் எமது சமூகமே போதையில் மூழ்கிவிடும். அந்தப் போதையிலிருந்து நம்மையும் நமது பிள்ளைகளையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.-Vidivelli