உள்ளக மோதல்களுக்கு தூபமிடப்படுகிறதா?

0 615

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்த நெருக்­கு­வா­ரங்கள் தற்­போது புதிய வடி­வத்தை எடுத்­துள்­ளன. இது­வரை முஸ்­லிம்­களை வெளிப்­புற சக்­திகள் மூலம் சீண்டி வந்த தரப்­பினர், தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே கருத்து முரண்­பா­டு­களைத் தோற்­று­விப்­ப­தற்­கான முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்த சந்­தே­கத்தை சமூ­கத்தில் உள்ள பலரும் தற்­போது எழுப்பத் தொடங்­கி­யுள்­ளனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி’ தோற்­று­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து, முஸ்லிம் சமூ­கத்தின் உள்­ளக விவ­கா­ரங்­களில் இந்த செய­லணி தீவிர அக்­கறை காட்­டு­வதைக் காண முடி­கி­றது. அர­சாங்­கத்தின் பூரண அனு­ச­ர­ணை­யோடு இந்த வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்குள் நிலவும் தீர்க்க முடி­யாத பல்­வேறு பிரச்­சி­னைகள் இந்த செய­லணி மூலம் பூதா­க­ர­மாக்­கப்­ப­டு­கின்­றன.

உலமா சபை­யினால் கடந்த காலங்­களில் வழங்­கப்­பட்ட பத்வா, காதி நீதி­மன்­றங்கள் மீதான விமர்­சனம் மற்றும் இஸ்லாம் பாட புத்­த­கங்­களில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் என்­ப­வற்றை உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம். எதிர்­கா­லத்தில் மேலும் பல கருத்து முரண்­பாட்­டுக்­கு­ரிய விட­யங்கள் சந்­திக்குக் கொண்டு வரப்­ப­டலாம். இவற்றை முஸ்லிம் சமூகம் எவ்­வாறு சாது­ரி­ய­மாக எதிர்­கொள்ளப் போகி­றது என்­பதே விடை காணப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் தலை­வ­ராக ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து குறித்த செய­லணி தொடர்பில் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் பலத்த விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஏற்­க­னவே நாட்டில் இனங்­க­ளுக்கு மத்­தியில் முரண்­பா­டு­க­ளையும் வன்­மு­றை­க­ளையும் தோற்­று­விப்­ப­தற்கு முன்­னின்ற ஒருவர் எவ்­வாறு இவ்­வா­றா­ன­தொரு செய­ல­ணிக்குத் தலைமை தாங்­கலாம் என்ற கேள்­வியை பலரும் முன்­வைத்­தனர். இன்றும் அதே கேள்­விகள் தொட­ரவே செய்­கின்­றன. இந்த செய­ல­ணிக்கு ஞான­சார தேரர் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் கார­ண­மாக, அதன் முன் தோன்றி கருத்­துக்­களை முன்­வைக்க முஸ்­லிம்கள் முன்­வ­ர­வில்லை. விரல்­விட்டு எண்ணக் கூடிய ஓரிரு முஸ்லிம் அமைப்­பு­களும் தனி நபர்­க­ளுமே இந்த செய­லணி முன் பிர­சன்­ன­மாகி தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர். இதனை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கருத்­தாக செய­லணி கருத முடி­யாது.

இதே­வேளை இச் செய­லணி தொடர்­பான முஸ்லிம் சமூ­கத்தின் சந்­தே­கங்கள் மற்றும் அதி­ருப்­தி­களை வெளிப்­ப­டுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கையெ­ழுத்து வேட்டை ஒன்­றையும் ஆரம்­பித்­துள்­ளது. இக் கையெ­ழுத்­துக்கள் மகஜர் ஒன்­றுடன் இணைக்­கப்­பட்டு செய­ல­ணிக்கு அனுப்பி வைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த செய­ல­ணியை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்கக் கூடாது என்றும் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி தமது அபிப்­பி­ரா­யங்­களை முஸ்­லிம்கள் முன்­வைக்க வேண்டும் என்ற கோரிக்­கை­களும் ஆங்­காங்கே முன்­வைக்­கப்­பட்டு வரு­வ­தையும் காண முடி­கி­றது,
எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இச் செய­லணி முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான செய­ல­ணி­யாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ளக் கூடாது என்­பதே எமது கரி­ச­னை­யாகும்.

முஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்து பேசி தீர்­மா­னிக்க வேண்­டிய விட­யங்­களை அதி­கார பலம் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­கு­மாயின் அது இருக்­கின்ற நெருக்­க­டி­களை மேலும் பூதா­க­ர­மாக்­கவே வழி­வ­குக்கும். அதனை விடுத்து, சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வதன் மூலமே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முற்­பட வேண்டும்.
இதற்­கப்பால் , முஸ்லிம் சமூ­கத்­தினுள் நீண்ட கால­மாக நிலவும் மார்க்க ரீதி­யான கருத்து முரண்­பா­டு­களை பயன்­ப­டுத்தி சில தீய சக்­திகள் குளிர்­காய முற்­ப­டு­வ­தையும் வெளிப்­ப­டை­யா­கவே காண முடி­கி­றது. டாக்டர் சாபி விட­யத்தில் முன்­னின்று பொய்­களைப் பரப்­பி­ய­வர்கள் இன்று முஸ்லிம் சமூ­கத்தின் மனித உரி­மைகள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்­கி­யுள்­ளமை வேடிக்­கை­யா­னது. எவ்­வாறு தேர்­தலில் வாக்­கு­களை கொள்­ளை­ய­டிக்க டாக்டர் சாபியை எதி­ரி­யாக காட்டி முஸ்லிம் சமூ­கத்­தையே குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தினார்களோ அதேபோன்றுதான் அடுத்த தேர்தலுக்காகவும் முஸ்லிம் சமூகத்தையே தூண்டி, சீண்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் அங்கமாகவுள்ள சகல தரப்புகளும் இந்த யதார்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு விரோதமானவர்களைப் பழி தீர்க்கிறோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவுக்குள் தள்ள களமமைக்க கூடாதென வினயமாக வேண்டுகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.