எம்.ஏ.எம். அஹ்ஸன்
பாடசாலை மாணவர்கள் காலை உணவுக்காக துரித உணவுகள் எனப்படும் சிற்றுண்டிகளை சாப்பிடுவது சாதாரணமான கலாசாரமாக மாறியுள்ள நிலைமை தொடர்பாக ஆராய்ச்சியாளர்களும் சுகாதார அதிகாரிகளும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த ஆரோக்கியமற்ற பழக்க வழக்கம் குறித்து பாடசாலை மட்டத்தில் இருந்து மாற்றங்களை தோற்றுவிப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயேதான் இருக்கின்றன.
காலை உணவாக துரித உணவுகள் அல்லது சிற்றுண்டிகளை சாப்பிடும் மாணவர்கள் அதிக உடல் எடையுடையவர்களாக மாறுகின்றார்கள். இதனால் மாணவர்கள் இலகுவாக நோய்வாய்ப்படுவதுடன் கல்வியில் கவனம் செலுத்த முடியாத உடல் ரீதியான சவால்களை சந்திப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான தவறான உணவுப்பழக்கம் ஒன்றை தொடர்ச்சியாக வைத்திருப்பவர்கள் தமது உடல் மற்றும் உடல் திணிவுச்சுட்டிக்கு (பி.எம்.ஐ) இடையில் எதிர்மறையான உறவொன்றையே பேணுகிறார்கள். இந்த மோசமான உணவுக் கலாசாரம் மாணவர்களில் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்ற ஒரு விடயம் என்பதை பெற்றோர்களுக்கு சுகாதார வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றார்கள்.
துரித உணவுகள் அல்லது சிற்றுண்டிகள் என்பது ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவு மற்றும் பானங்கள் ஆகும். இந்த வகை உணவுகளுக்கு உதாரணங்களாக புரதம், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் தேவைக்கு அதிகமாக உள்ள உணவு வகைகளைக் குறிப்பிடலாம். கொழுப்பு அல்லது சீனி போன்ற மற்ற சேர்க்கைகளுடன் உள்ள உணவுகளையும் குறிப்பிட முடியும். மாணவர்கள் அதிகமாக உட்கொள்ளும் துரித உணவுகளில் பலவகையான குறுகிய உணவுகள் இருக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக ரோல்ஸ், கட்லெட்கள், வடை, சமோசா போன்றவற்றைக் குறிப்பிட முடியும். மிட்டாய்கள், பொரியல், இனிப்புகள், குக்கீகள், ஐஸ்கிரீம், சிப்ஸ் மற்றும் எண்ணெய்யில் ஆழமாக வறுத்தெடுத்த உணவு வகைகளும் இதில் உள்ளடங்கும்.
அதிக கலோரிகளை உட்கொள்ளும்போது அவர்கள் அதிக எடை அல்லது பருமனாக மாறுகிறார்கள் என்றுதான் சுகாதார ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் ஆரோக்கியமற்ற உணவுகள் அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு முக்கிய ஊக்கிகளாக இருக்கின்றன. கிழக்கு மத்தியதரைக் கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிக எடை விகிதம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
துரித உணவுகள் என்று சொல்லப்படும் உணவுகளில் தேவைக்கு அதிகமாக உப்பு மற்றும் கல்சியம் என்பன உள்ளதால் அது பசியைக் குறைக்கிறது. சந்தையில் துரித உணவுகள் போன்ற உணவுகள் குறைந்த விலையில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் கிடைக்கிறது. விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு குறித்த விளம்பரங்களை பார்த்து அவற்றை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். பிள்ளைகளின் இந்த உணவுப்பழக்கம் தொடர்பான கவனம் பெற்றோர்களுக்கு இல்லாததால் நீண்ட கால உடல் நல குறைபாடுகளை சந்திக்கிறார்கள்.
அதிக எடை அல்லது பருமனுடன் பிள்ளைகள் வளர்வதால் பிற்காலத்தில் தொற்றா நோய்களான இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற அச்சுறுதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளதையும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் இந்த ஆபத்தை குறைக்க பிள்ளைகளுக்கு அதிக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
துரித உணவுகளை காலை உணவாக உட்கொள்ளும் தவறான உணவுப் பழக்கத்துடன் இணைந்து நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் வேலைகளைத் தொடர்வதிலும் உடற்பருமன் அதிகரிக்கும் அபாய நிலை உள்ளது. நீண்ட நேரம் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுதல் மற்றும் தொலைக்காட்சி பார்த்தல் போன்ற பழக்கங்கள் இதற்கு உதாரணங்களாகும்.
இலங்கை தெற்காசியாவில் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட ஒரு மூன்றாம் உலக நாடாக இருக்கிறது. இலங்கையில் வயது வந்தோரிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பாதிப்பு முறையே 25.2 சதவீதம் மற்றும் 9.2 சதவீதம் என உள்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். கொழும்பின் நகர்ப்புறங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆசிய திணிவுச்சுட்டிகளின் அடிப்படையில் எடை குறைவாக இருப்பது, சாதாரண எடையுடன் இருப்பது, அதிக எடை மற்றும் உடல் பருமனுடன் இருப்பது என்பவை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் அதிக எடையுடன் உணவு தொடர்பான நீண்டகால நோய்களில் 18 தொடக்கம் 40 வீதமானவர்கள் இருப்பார்கள் என்பதுடன் அவர்களில் 20.9 சதவீதமானவர்களின் இறப்புக்கு துரித உணவுகள் போன்ற தவறான உணவுப்பழக்கமே காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உணவு மற்றும் போஷாக்குக் கொள்கைகளின் படி, பெரும்பாலான தேசிய பொது சுகாதாரத் திட்டங்கள் மற்றும் சிறுவர்கள் மீதான ஆய்வுகள் ஊட்டச்சத்து குறைபாடு நிலை குறித்து கவனம் செலுத்துகின்ற போதிலும் அது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இல்லாத நிலையிலே உள்ளது.
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானதொரு உணவு வேளை ஆகும். காலை உணவின் உள்ளடக்கங்கள் அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் வலுவான தொடர்பைக் கொண்டிருக்கின்றன. 12–-14 வயதுடைய பதின்ம வயது சிறுவர்கள் ஏனைய சிறுவர்களுடன் ஒப்பிடும்போது அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரிப்பைக் கொண்டுள்ளார்கள். மேலும் பதின்ம வயதுடையவர்கள் சிறந்த புரிதலைக் கொண்டவர்களாகவும் உணவுத் தேர்வில் சுதந்திரமானவர்களாகவும் கருதப்படுகின்றார்கள்.
2019 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நான்கு கலப்புப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களைக் கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அனைத்து சமூகங்களில் இருந்தும் 425 மாணவர்கள் இதில் பங்குபற்றினார்கள். நடத்தை, காலை உணவு மற்றும் சமூக பொருளாதார காரணிகள் பற்றிய கேள்விகள் அடங்கிய வினாத்தாள் ஒன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டு நிரப்புமாறு கோரப்பட்டது. இறுதி வினாக்கொத்தை தயாரிப்பதற்கு முன்னர் பல்வேறு வகையான துரித உணவுகளை உட்கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கண்டறிய தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 மாணவர்களைக் கொண்டு ஒரு ஆய்வுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆண் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு இடையில் எடை, உயரம் மற்றும் திணிவுச்சுட்டி ஆகியவற்றில் பாரியளவில் வேறுபாடுகள் எதுவும் ஆய்வு மாதிரியில் காணப்படவில்லை. மாணவர்களின் திணிவுச்சுட்டி நிலையின் 55 வீதமானவர்கள் சாதாரண வரம்பில் இருந்துள்ளார்கள். அதிக எடையுடன் 24 வீதமானவர்களும் எடை குறைவாக 21 வீதமானவர்களும் இருந்தார்கள். இதேவேளை கொழும்பு நகர்ப் பகுதியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறைக்கு அடிமையானதால் உடல் பருமன் அல்லது அதிக எடை போன்ற நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான மாணவர்கள் சிற்றுண்டிகளையே காலை உணவாக உட்கொள்வது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 22 வீதமான மாணவர்கள் வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு முறை சிற்றுண்டி உணவை உட்கொள்கிறார்கள். 44.7 வீதமானவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று சிற்றுண்டி உணவை உட்கொள்கிறார்கள். 33.3 வீதமான மாணவர்கள் காலை உணவாக சிற்றுண்டிகளை உண்ணாத மாணவர்களாக இருந்துள்ளார்கள்.
பகலில் பிரத்தியேக வகுப்புடன் இறுக்கமான அட்டவணையை எதிர்கொள்வதால் சரியான உணவை சாப்பிடுவதற்கு போதுமான நேரம் இல்லை என்றும் பெற்றோர்கள் தாமதமாக எழும்புவதால் காலை உணவை நேரத்திற்கு தயாரிக்க முடியவில்லை என்பதுமே மாணவர்கள் சிற்றுண்டிகளை நாடுவதற்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
சிற்றுண்டிகளை சாப்பிடுகின்றவர்கள் அது சுவையுடன் தங்களுக்கு இனிமையான உணர்வைத் தருவதாக நம்புகின்றார்கள். சிற்றுண்டிகளை தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தை மாணவர்களிடம் கேட்டபோது 73 வீதமானவர்கள் சுவையையும் 13.7 வீதமானவர்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் 7.7 வீதமானவர்கள் குறைந்த விலையையும் 6 வீதமானவர்கள் வேறு சில காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
பருமனான மற்றும் அதிக எடை கொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர் சிற்றுண்டிகளை காலை உணவாக உட்கொண்டவர்கள் ஆவர். உடல் பருமன், எடை குறைவு மற்றும் அதிக எடை ஆகியவற்றுக்கு இடையே புள்ளியியல் ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
பதிலளித்தவர்களில் மொத்தம் 87 வீதமானவர்கள் சிற்றுண்டிகளை உட்கொள்ளும் பழக்கம் பற்றி தமது பெற்றோர் அறிந்திருப்பதாகக் கூறியுள்ளனர். 8 வீதமானவர்கள் தாம் உண்பது குறித்தோ பெற்றோரின் விழிப்புணர்வு குறித்தோ தங்களுக்கு எந்த யோசனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். 5 வீதமானவர்கள் அவர்களின் பெற்றோருக்குத் தெரியாமல் இரகசியமாக சிற்றுண்டிகளை உட்கொள்வதாக கூறுகிறார்கள்.
ஆய்வில் கலந்துகொண்ட மாணவர்களில் 70 வீதமான மாணவர்கள் சிற்றுண்டிகள் அல்லது துரித உணவுகள் என்பன ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதை ஏற்கனவே உணர்ந்தவர்களாக இருந்தார்கள். மேலும் 28 வீதமான மாணவர்கள் சிற்றுண்டிகளை ஆரோக்கியமான உணவுகள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் ஆவர்.
லேபிள்களில் உள்ள பொருட்கள் பற்றிய பங்கேற்பாளர்களின் விழிப்புணர்வு திருப்திகரமாக இருப்பதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் சரியாக சாப்பிடவில்லை என்பதை ஒப்புக்கொண்டதுடன் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு வேலைப்பளுவுடன் இருப்பதாகவும் முடிவுகள் தெரிவிக்கின்றன.
முடிவுகளின்படி மாணவர்களின் திணிவுச்சுட்டி மற்றும் உடல் செயற்பாடு நிலைக்கு இடையே ஒரு தெளிவான உறவை ஏற்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மாணவர்களின் உடல் செயற்பாடுகளின் நிலைக்கும் அவர்களின் திணிவுச்சுட்டிக்கும் இடையே தெளிவான தொடர்பு இருப்பதனாலேயே ஆய்வாளர்கள் இவ்வாறு தெரிவிக்கிறார்கள். களுத்துறை மாவட்டத்தில் 14-–15 வயதுடைய பள்ளி மாணவர்களிடையே திணிவுச்சுட்டியின் நிலை மற்றும் உடல் செயல்பாடு நிலை ஆகியவற்றுக்கு இடையே இதேபோன்ற புள்ளிவிபரம் இருந்ததை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
மாணவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் ஆற்றல்கள் என்பன திணிவுச்சுட்டியுடன் நேரடியாக தொடர்புபடுகின்றது என்பதை மேற்கண்ட ஆய்வுகள் தெளிவாக காட்டுகின்றன. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் உணவுப்பழக்கம் தொடர்பாக விழிப்படைய வேண்டியது மிகக்கட்டாயமான ஒரு விடயம் என்பதை நாம் உணர வேண்டும். சிற்றுண்டிகளை காலை உணவாக உட்கொள்வதால் ஏற்படவிருக்கும் மிகத்தீவிரமான நீண்டகால எதிர்மறை விளைவுகளை கவனத்தில்கொண்டு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
பாடசாலைக் கல்விச் சூழல் சுகாதாரத்தை உறுதிப்படுத்திய ஒன்றாக இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலை மாணவர்கள் காலையில் ஆரோக்கியமான உணவுகளைத்தான் சாப்பிடுகிறார்களா என்பதை அவதானித்து உறுதிப்படுத்தும் பொறிமுறைளை பாடசாலைகளுக்குள் கொண்டு வந்தால் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை நாம் உருவாக்க முடியும்.-Vidivelli