வெவ்வேறு விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழப்பு

0 631

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற மோட்டார் வாகனங்களுடன் தொடர்புடைய விபத்துக்களில் மாத்திரம்  சிக்கி ஐந்து  பேர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை  6 மணிமுதல் நேற்றுக் காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்ளேயே இந்த ஐந்து  பேரும் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிள்  கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மற்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவரும் , மோட்டார் சைக்கிள் பாதசாரிகளின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதிற்கும் 78 வயதியற்கும் இடைப்பட்டோர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,   இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கள்  வெலிகட , மீரிகம , தம்புத்தேகம, கஹடகஸ்திகிலிய  மற்றும் மாபாகே ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

வெலிகட விபத்து

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதில் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 23 வயதுடைய   ஹனூக்க பண்டார  எனப்படுபவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் மொரகஸ்முல்ல – ராஜகிரிய வீதியில்  நேற்று இரவு 12.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மீரிகம விபத்து

அத்துடன், மீரிகம பகுதியில் நேற்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்  31 வயதுடைய மீரிகம பகுதியை சேர்ந்த சமில் சரங்க மனோஜ் எனப்படுபவர் உயிரிழந்துள்ளார்.

மீரிகம – நால்ல வீதியின்  கஹாதவ பகுதியிலிருந்து நால்ல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலொன்றில் மோதி விபத்துக்குள்ளானமையினாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவித்துள்ளது.

தம்புத்தேகம விபத்து

தம்புத்தேகம  பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள்  சாலையில் பயணித்த பெண்ணெருவர்  மீது மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த பெண் யாய 05 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 68 வயதடைய ராஜாங்கணை பகுதியை சேர்ந்த  ரங்மணிக்கா எனப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹடகஸ்திகிலிய விபத்து

கஹடகஸ்திகிலிய பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில்  மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய  ரத்மல்கஹவாவ பகுதியை சேர்ந்த சசித் சன்ன  வீரசிங்க எனப்படுபவர் உயிரிழந்துள்ளார்.

மாபாகே விபத்து

மேலும், மோட்டார் சைக்கிள், பாதையில் பயணித்த நபர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.20 மணியளவில் மாபாகே பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ராகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 74 வயதுடைய ராகம பகுதியை சேர்ந்த ஜெரல் பார்டினன்ஸெ எனப்படுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன், தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாபாகே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவங்களுடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை விபத்து ஏற்பட்ட  பிரதேசங்களுக்குரிய  பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.