ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் நெருக்கடிகளின் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை தொடர்பில் இவ்வாரமும் கவனம் செலுத்துகிறோம்.
பனம்பலான ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் 11 கிராம அலுவலர் பிரிவுகளுடன் 240 சதுர கிலோமீற்றர் அதாவது (59,280 ஏக்கர்) நிலப்பரப்புக் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
அதேவேளை அதனோடு அருகிலமைந்த பகுதி: கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகம் எனவும் அது 18 கிராம அலுவலர் பிரிவுகளுடன் 686 சதுர கிலோமீற்றர் (அதாவது 169,442 ஏக்கர்) நிலப்பரப்பும் கொண்டமைந்ததாக உருவாக்கப்பட்டது.
இந்த புதிய கோறளைப்பற்று தெற்கு –- கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உருவாகும்போது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி எனும் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 5 கிராம அலுவலர் பிரிவுகளும் சுமார் 155 சதுர கிலோமீற்றர் (38,285 ஏக்கர்) எடுக்கப்படுகிறது.
அதேநேரம் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 13 கிராம அலுவலர் பிரிவுகளும் 686 சதுர கிலோமீற்றர் (169,442 ஏக்கர்) நிலப்பரப்பு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டு 2002 இல் கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்படுகிறது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலிருந்து வாழைச்சேனை 206, வாழைச்சேனை 206பி, வாழைச்சேனை 206டி, பிறைந்துரைச்சேனை 206ஏ, பிறைந்துரைச்சேனை 206சி, மாவடிச்சேனை 208ஏ, செம்மண்ணோடை 208டி ஆகிய 7 கிராம அலுவலர் பிரிவுகள் இணைப்புச் செய்யப்படுகின்றன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் கீழ் இருந்த தியாவட்டவான் 210சி எனும் கிராம அலுவலர் பிரிவையும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைப்பதாக பனம்பலான ஆணைக்குழு சிபார்சு செய்தது.
அதேவேளை கோறளைப்பற்று வடக்கு எனும் வாகரை தமிழ் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து புணாணை கிழக்கு 211பி எனும் 128 சதுகிலோமீற்றர் (31616 ஏக்கர்) பரப்பளவு கொண்ட கிராம அலுவலர் பிரிவையும் புதிதாக உருவாக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட ரிதீதென்ன 211எச் மற்றும் காரமுனை 211ஜி-2 எனும் 104 சதுர கிலோமீற்றர் பரப்பளவு (25688 ஏக்கர்) கொண்ட கிராம அலுவலர் பிரிவுகளையும் சேர்த்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவு உருவாக்கப்பட்டது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் மொத்த சனத்தொகை –24,647.
ப
னம்பலான ஆணைக்குழுவினால் நாட்டில் உருவாக்கப்பட்ட 08 பிரதேச செயலகங்களில் 07 பிரதேச செயலகங்கள் அந்த ஆணைக்குழுவின் சிபாரிசு மற்றும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் நிலப்பரப்பு மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளுடன் உறுதிப்படுத்தப்பட்டு இன்றளவும் இயங்கி வருகின்றன.
ஆனால், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மாத்திரம் பனம்பலான ஆணைக்குழு மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு ஏற்ப வழங்கப்பட்ட 240 சதுர கிலோமீற்றர் பரப்பளவு மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளும் இதுவரையில் நில அளவை செய்யப்படாமலும், எல்லை நிர்ணயம் செய்யப்படாமலும் உள்ளது.
மேற்படி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் அது தன்னகத்தே கொண்டுள்ள 24647 சனத்தொகையுடன் 11 கிராம அலுவலர் பிரிவுகளையும் 240 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் கொண்டதாக உருவாக்கப்பட வேண்டுமென பனம்பலான ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது.
அமைச்சரவை அங்கீகாரம்
பனம்பலான ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய, 2000.07.13ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு அமைவாக 2002.05.24ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று தெற்கு – கிரான் ஆகிய பிரதேச செயலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படாமையினால் தோன்றியுள்ள நிருவாக
முரண்பாடுகள்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கென பரிந்துரைக்கப்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகளில் 08 கிராம அலுவலர் பிரிவுகளை மாத்திரம் இணைப்புச் செய்து 2002.05.24ஆம் திகதி இப்பிரதேச செயலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த 8 கிராம அலுவலர் பிரிவுகளும் சுமார் 12 சதுர கிலோமீற்றர் பரப்பளவினை மாத்திரமே கொண்டமைந்துள்ளன.
கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச செயலகத்தின் அதிகாரப் பரப்பிலிருந்து இணைப்புச் செய்யப்படவேண்டிய 3 கிராம அலுவலர் பிரிவுகளும் இதுவரையிலும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைப்புச் செய்யப்படவில்லை.
அதேவேளை, பனம்பலான ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட புதிய கிராம அலுவலர் பிரிவுகளான புணானை கிழக்கு 211பி, ரிதிதென்ன 211எச், காரமுனை ஜி-2 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் நில அளவை செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.
இருப்பினும், புணாணை கிழக்கு 211பி கிராம அலுவலர் பிரிவின் ஒரு பகுதி தற்காலிமாக, நிலத் தொடர்பற்ற வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு நிருவகிக்கப்படுகின்றது.
அதேவேளை, வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவு எல்லைகள் யுத்த காலத்தில் சட்ட ரீதியற்ற முறையிலும் நில அளவைத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திற்கு முரணாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கோரிக்கைகள்
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்தக் கிராமங்களின் எல்லைகள் அமைதல் வேண்டும்.
வாழைச்சேனையைக் குறுக்கறுக்கும் மாதுறு ஓயாவின் கிளை ஆறு, வாழைச்சேனை மீன்பிடித்துறை முகத்திலிருந்து தியாவட்டவான் வரையுமான நீர் வளம் என்பன சட்டரீதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படல் வேண்டும்.
ஏற்கெனவே பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினை வர்த்தமானி அறிவித்தல் விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை மாவட்ட நிருவாகத்தினால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இறுதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2012ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையிலும் பனம்பலான ஆணைக்குழுவின் சிபாரிசினை முழுமையாக ஏற்று அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், இவ்விதந்துரைகள் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படாமையால் தோன்றியுள்ள பிரச்சினைகள்
நிருவாக இலகுபடுத்தல் கொள்கையில் உருவாக்கப்பட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் தியாவட்டவான் கிராமத்தில் அமைந்துள்ளது.
இக்கிராமத்திற்கு அருகிலுள்ள கேணிநகர், ஆலங்குளம், வட்டவான், நாவலடி ஆகிய கிராமங்களில் வாழும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருந்தும் அவர்கள் சுமார் 40 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து வாகரையில் அமைந்துள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
தமது பிரதேச செயலக நிருவாக கருமங்களுக்காக சுமார் 01 கிலோமீற்றர் தூரமுடைய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குச் செல்ல முடியாது, சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாகரைப் பிரதேச செயலகத்துக்குச் சென்று சேவைகளைப் பெறவேண்டியிருப்பது மிகுந்த கஸ்டத்தையும், அதிக செலவினத்தையும், மன உளைச்சலையும் நேர விரயத்தையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, ரிதிதென்ன கிராமத்திலிருந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் சுமார் 22 கிலோ மீற்றர் தூர இடைவெளியிலேயே அமைந்துள்ளது.
ரிதிதென்ன முஸ்லிம் கிராமவாசி ஒருவர் காணி தொடர்பான சேவையொன்றைப் பெற அருகிலுள்ள கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினைக் கடந்து, சுமார் 70 கிலோ மீற்றர் பயணம் செய்து வாகரையிலுள்ள தமிழ்ப் பிரதேச செயலகத்திற்குச் சென்று சேவையினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
இதன்மூலம் தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் இப்பிரதேச மக்கள் பல தடவைகளில் அதிகாரிகளிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் பொது மக்களின் எந்தவித சிரமத்தையும் மாவட்ட செயலக நிருவாகம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 12 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் வசிக்கின்ற சுமார் 35,000 மக்கள், அடர்த்தியான குடியிருப்புக்கள் காரணமாக மிகுந்த இடநெருக்கடி மற்றும் பாரிய சுற்றாடல், சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நாளாந்தம் சேரும் குப்பை கூழங்களை புதைப்பதற்குக் கூட போதிய இடவசதியில்லாமல் அவர்கள் அவஸ்தையுறுகின்றனர்.
குடிநீர் மாசடைந்து வருகின்றது. தொற்றுநோய்கள் பாரிய அச்சுறுத்தலாக உள்ளன.
அத்துடன் பொது வசதிகள், பொழுதுபோக்கு மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்த இட வசதியின்மையாலும் பிரதேச மக்கள் – குறிப்பாக இளந்தலைமுறையினர் உடல், உள ரீதியாக ஆரோக்கியமற்ற நிலையிலும் மன அழுத்தத்துடனும் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் அபிவிருத்திக்கான நிலப்பற்றாக்குறை மற்றும் இட வசதிப் பற்றாக்குறையால் வீடு, காணிகளின் விலைகளும் கட்டுப்பாடற்று அதிகரித்துச் செல்வதும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
எனவே அமைச்சரவைத் தீர்மானத்தின்படி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், அதற்குரித்தான 240 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடன் சட்டபூர்வமாக இயங்குவதற்கும் நில அளவை செய்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன நல்லிணக்கம், சமூக உரிமைகள், சுமுகமான நிருவாகம், சிவில் உரிமை என்பனவற்றைப் பேணுவதற்கும் அப்பிரதேச மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, பிரதேச மக்களுக்குச் சாதகமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உரிய இடங்களுக்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பித்து வேண்டுகோள் விடுத்துள்ளது.- Vidivelli