எம்.எப்.எம்.பஸீர்
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைத்தமை தொடர்பில் பிரதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய – பனாமுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அந்த குண்டினை வைக்க சதி செய்ததாக அல்லது உதவி ஒத்தாசை புரிந்ததாக கூறி பிலியந்தலை பகுதியில் வைத்து ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் அந்த இரு கைதுகள் தொடர்பிலும் உறுதிப்படுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மறுத்துவிட்டார். விசாரணையாளர்கள் அது தொடர்பில் தன்னை தெளிவுபடுத்தவில்லை என அவர் இது தொடர்பில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஊடக செய்திகளுக்கு அமைய, இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரத்தில் பிரதான சந்தேக நபர்கள் இருவர் உள்ளனர். பொரளை பொலிஸாரும் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் முன்னெடுத்த ஆரம்ப கட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நால்வரில் உள்ளடங்கும் சகல பரிசுத்தவான்கள் தேவாலய வேதியர் (தேவாலய உதவியாளர்) ஒருவர். மற்றையவர் இவ்விரு பொலிஸ் நிலையங்களுக்கும் அப்பால் சென்று இரகசிய விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு தெற்கு வலய குற்றத் தடுப்புப் பிரிவினர் எம்பிலிப்பிட்டி – பனாமுர அன்னதான வீட்டில் வைத்து கைது செய்த 65 வயதான கம்பஹா – கடவத்தை பகுதியைச் சேர்ந்த நபராவார்.
இந்நிலையில், குறித்த குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், அதன் விசாரணைக் கோணம், கைதாகும் சந்தேக நபர்கள், வெளிப்படைத் தன்மையற்ற நடவடிக்கைகள், பொலிஸ் தரப்பும் அதற்கு பொறுப்பான அமைச்சரினதும் கருத்துக்கள் உள்ளிட்டவற்றையும் கத்தோலிக்க தரப்பினரினது கருத்துக்களையும் ஒன்று திரட்டி பகுப்பாய்வு செய்யும்போது, இந்த சம்பவத்தின் பின்னணியில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தொடர்பில் ஒருவர் இருப்பதாகவே தோன்றுகிறது.
சம்பவம் :
கடந்த 11 ஆம் திகதி பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தேவாலயத்திலிருந்தே மாலை நேரம் வழங்கப்பட்ட தகவலுக்கமைய அதிரடிப் படையின் உதவியுடன் குண்டு மீட்கப் பட்டிருந்தது. தேவாலயத்தில் உள்ள திருச்சொரூபம் அருகே இருந்தே கைக்குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது தீப்பிடித்து வெடிக்கும் வகையில் பசை நாடா, இறப்பர் வளையல்கள், தீ குச்சிகள் மற்றும் மணக் குச்சிகளைப் பயன்படுத்தி பொருத்தப்பட்டுள்ளதாக குண்டினை மீட்ட பின்னர் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவித்திருந்தார்.
விசாரணை :
இதனையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொரளை பொலிஸார், குறித்த தேவாலயத்தில் கடமையாற்றும் வேதியர் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். தேவாலய சி.சி.ரி.வி. கமராக்களின் பதிவுகளை மையப்படுத்தி அக்கைதுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
விசாரணைகள் உடனடியாக
சி.சி.டி.யிடம் கையளிப்பு :
இந்நிலையில் உடனடியாக விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, விசாரணைகளை சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் கையளித்தார். அதன்படி பொரளை பொலிசார் கைது செய்த மூவரும் சி.சி.டி.யினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மேலதிகமாக மற்றொருவரை சி.சி.டி.யினர் கைது செய்தனர்.
அதன்படி 29,25,41,55 வயதுகளை உடைய, தெமட்டகொடை மாலிம்பட மற்றும் மருதானை பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
தேவாலயத்தில் பணியாளராக கடமையாற்றிய மருதானை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைக்குண்டை வைத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார். சந்தேக நபர் தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனை இதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர் ( வேதியர்) கடந்த 16 வருடங்களாக தேவாலயத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கடந்த 9 மாதங்களாக தேவாலய வளாகத்திலேயே தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குண்டினைப் பொருத்துவதற்குப் பயன்படுத்திய தடயப் பொருட்களையும் பொலிசார் அவரது தங்குமிடத்திலிருந்து கண்டெடுத்ததாகவும் கூறப்பட்டது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில், தேவாலயத்துடன் தொடர்பில்லாத ஒருவரும் இருந்த நிலையில், அவர் மட்டும் 72 மணி நேர விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனையோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சி.சி.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
13 வயது சிறுவன் :
இந்நிலையில் சி.சி.டி. முன்னெடுத்த விசாரணைகளில் 13 வயது சிறுவன் ஒருவன் அவர்களது பொறுப்பில் எடுக்கப்பட்டிருந்தான். அவன் குறித்த தேவாலயத்துக்கு அருகில் வசிப்பவன். அவனிடம் முன்னெடுத்த விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்பட்டதாகக் கூறி அவரை கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் சி.சி.டி.யினர் ஆஜர் செய்து குற்றவியல் சட்டக்கோவையின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய இரகசிய வாக்கு மூலம் வழங்க அச்சிறுவன் விரும்புவதாக கூறினர். அதன்படி அவனிடம் இரகசிய வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் வெளிப்படுத்தல் :
இவ்வாறான பின்னணியில் முழு விசாரணைகளையும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடக சந்திப்பொன்று மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அப்போதும் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள், சாட்சியாக கூறி பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டிருந்த சிறுவன் ஆகியோர் சம்பவம் பதிவான 11 ஆம் திகதி பி.ப.3.00 மணியிலிருந்து அவதானிக்கப்பட்ட தேவாலய சி.சி.ரி.வி. காணொளிகளுக்கு அமையவே கைது செய்யப்பட்டிருந்தமை அவ்வூடக சந்திப்பூடாக வெளிச்சத்துக்கு வந்தது. எனினும் அன்றைய தினம் மு.ப. 9.52 மணியளவில் தேவாலயத்துக்குள் நுழையும் நபர் ஒருவர் (ஊனமுற்றவர் போன்று வருகை தந்தவர்), கையில் ஒரு பொதியுடன் வந்து, பின்னர் குண்டு மீட்கப்பட்டிருந்த இடத்தில் ஏதோ சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், தேவாலய ஊழியர்கள் அப்பகுதிக்கு வரும் போது அங்கிருந்து தப்பிச் செல்வதையும் முழுமையான சி.சி.ரி.வி. காட்சிகளை ஆராயும் போது தெரிந்தது.
இதனால் பொலிஸ் விசாரணைகள் எந்த கோணத்தில் பயணிக்கிறது எனும் சந்தேகம் எழுந்தது.
அருட் தந்தையை கைது செய்ய முஸ்தீபு :
இந்நிலையில் இந்த விசாரணைகளில் குறித்த தேவாலய அருட் தந்தையை கைது செய்ய விசாரணைகள் இடம்பெறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் நீதி மன்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகளில் கூறப்பட்டிருந்தன. இதுதேவாலய அருட் தந்தைக்கும் தெரிந்தே நடந்த அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உட்படுத்தும் நடவடிக்கை எனும் கோணத்தில் தகவல்கள் பரப்பப்பட்டன.
சி.சி.ரி.வி. காட்சிகளால் உடைந்த
விசாரணை விம்பம் :
எவ்வாறாயினும் கடந்த 11 ஆம் திகதி அந்த தேவாலயத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் முழுமையான சி.சி.ரி.வி. காட்சிகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் அருட் தந்தையைக் கைது செய்யும் கோணத்தில் முன்னெடுத்த விசாரணையின் விம்பம் உடைந்து சுக்கு நூறானது. விசாரணைகள் முழுமையில்லை என்பதையும், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களுக்கும் குறித்த குண்டு விவகாரத்தில் நேரடி தொடர்புகள் இல்லை என்பதையும் அந்த அறிவியல் சான்றுகள் பறைசாற்றியதால் பொலிஸார் குழப்பமடைந்தனர்.
உயர் பொலிஸ் அதிகாரி :
எவ்வாறாயினும் சம்பவ தினம் பி.ப. 3.00 மணி முதல் சி.சி.ரி.விகளை ஆராயுமாறு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரே விசாரணையாளர்களுக்கு அறிவித்திருந்த நிலையில், காலை நேர காட்சிகளைப் பார்த்ததும் அந்த அதிகாரி குழப்படைந்துள்ளார். தன் தவறுகளை மறைக்க அவர், விசாரணை அதிகாரிகள் சிலரை இடமாற்றியுள்ளார்.
இரகசிய வாக்கு மூலம் பொலிஸ் அமைச்சருக்கு கிடைத்தது எப்படி ?
இந்த கைக்குண்டு விவகாரத்தில் சரியான விசாரணைகள் நடக்கவில்லை என்பதை ஆதாரத்துடன் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளிப்படுத்திய நிலையில், குழப்படைந்த பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களுக்கு அது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 14 ஆம் திகதி தெரண தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பான அவரது கருத்துக்களில் இவ்வாறு கூறப்பட்டது.
‘மாலை 5.00 மணியளவில் குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் 4 சந்தேக நபர்களைக் கைது செய்தனர். அந்த சிறுவனுக்கு 14 வயது. தேவாலயத்தில் 8 மாதங்களாக வேலைபார்க்கும் தமிழர் ஒருவர் அந்த பொதியை வழங்கியதாக அச்சிறுவன் நீதிவானிடம் தெரிவித்தார். குண்டுடன் கூடிய பொதியை வழங்கிய நபரே, திருச் செரூபம் அருகே அதனை வைத்துள்ளார். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அக்குண்டை சுற்றி இறப்பர் வளையல் போடப்பட்டு, அதன் பின் கழற்றப்பட்டு மணக் குச்சி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 15 தீ குச்சிக்களும் பொருத்தப்பட்டு மணக் குச்சி பற்றியெரிந்து முடிந்தவுடன் தீ குச்சிகள் பற்றி குண்டு வெடிக்கும் வகையில் அது தயாரிக்கப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட நபரின் அறையில் பசை நாடா இருந்தது. மணக்குச்சி இருந்தது. தீக்குச்சிகள் இருந்தன. இந்நிலையில் அவ்வாறான ஒருவரைக் கைது செய்ததும் தேவாலயத்தில் உள்ளோரைக் கைது செய்து கொடுமைப்படுத்துவதாக கூறுவது எந்தளவு சிறுபிள்ளைத்தனமானது. காலையில், ஊனமுற்ற ஒருவரைப் போன்று ஒருவர் தேவாலயத்துக்கு வந்தது உண்மை. அந்நபர் தொடர்பில் விசாரணை நடக்கிறது. இங்கு பொலிஸாருக்கு கொடுக்க வேண்டிய சி.சி.ரி.வி. காட்சிகளை ஊடகங்களுக்கு வழங்கினால் சந்தேக நபர்கள் தலைமறைவாகலாம்.
கேள்வி : சி.சி.ரி.வி. காணொளிகளில் மாலை 3.00 மணிக்கு முன்னைய காட்சிகளை பொலிஸார் ஏன் பார்க்கவில்லை என கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார் அல்லவா?
அமைச்சர் : சந்தேக நபர்களை அவசரமாக கைது செய்யவே சி.சி.ரி.வி. காட்சிகள் பி.ப. 3.00 மணியிலிருந்து பார்க்கப்பட்டன. சம்பவம் எமக்கு 5.00 மணிக்கே அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் காலை நேர காட்சிகளை பார்க்க வேண்டாம் என எங்கும் பொலிஸார் கூறவில்லை. காலை நேர காட்சிகளை அழிக்குமாறும் பொலிஸார் கூறவில்லை. அதேபோல் நாம் மக்களுக்கு ஒரு விடயத்தை கூற வேண்டும். அப்பலோ வைத்தியசாலை மலசல கூடத்தில் குண்டு வைத்த நபரும், தேவாலய குண்டு வைப்பின் பின்னணியிலும் யாரேனும் ஒரு சதிகாரர் உள்ளார். அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உள்ளாக்க பொலிஸாரை, இராணுவத்தை அசெளகரியத்துக்கு உட்படுத்த இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த சூத்திரதாரியை மிக விரைவில் நாம் கைது செய்வோம்.’ என தெரிவித்திருந்தார்.
இங்கு அமைச்சர் ‘தேவாலயத்தில் 8 மாதங்களாக வேலைபார்க்கும் தமிழர் ஒருவர் அந்த பொதியை வழங்கியதாக அச்சிறுவன் நீதிவானிடம் தெரிவித்தார்.’ என குறிப்பிடுகின்றார். நீதிவானிடம் வழங்கப்பட்ட இரகசிய வாக்கு மூலம் குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்கு மூலம். அத்தகைய வாக்கு மூலம் மிக இரகசியமானது. அது பதிவு செய்யப்படும் போது பொலிஸாரோ வேறு எவருமோ அருகில் இருக்க முடியாது. நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில், நீதிவான் மட்டுமே இருக்க அது பதிவு செய்யப்படும்.
அப்படியானால் நீதிவானிடம் சிறுவன் கூறியது அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எப்படி தெரிந்தது.
அதற்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று, நீதிவான் அதனை சரத் வீரசேகரவுக்கு கூறியிருக்க வேண்டும் அல்லது நீதிவானிடம் வழங்கிய வாக்கு மூலம் சிறுவனுக்கு பொலிசாரால் கற்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
அப்படியானால் மட்டுமே நீதிவானுக்கு வழங்கிய வாக்குமூலத்தை அமைச்சரால் இவ்வாறு பகிரங்கமாக கூற முடியும்.
சட்டத்தரணி ஹிஜாஸுக்கு எதிரான இரகசிய வாக்கு மூலம் :
இதனை ஒத்த உதாரணங்கள் கடந்த காலங்களில் ஏராளம் உள்ளன. உதாரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் என முதலில் கைது செய்யப்பட்டு பின்னர் அடிப்படைவாதத்தை போதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 3 சிறுவர்கள் வழங்கியதாக கூறப்படும் இரகசிய வாக்கு மூலங்களைக் குறிப்பிடலாம்.
மதுரங்குளி பாடசாலையின் 3 மாணவர்கள் சி.ஐ.டி.யினரால் கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் வாக்கு மூலம் பெறப்பட்டது. அன்றைய தினம் இரவும், மறு நாளும் ஊடகங்களில், அம்மாணவர்கள் வழங்கிய இரகசிய வாக்கு மூலம் எனக் கூறி சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
நீதிவானுக்கு வழங்கும் வாக்கு மூலம் சாட்சி பெறுமதியுடைய இரகசிய வாக்கு மூலம் என்பதால், அங்கு கூறியவை எவ்வாறு வெளியில் செல்ல முடியும் என அதன் பின்னர் ஹிஜாசின் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்ப அது குறித்து விசாரணைகளுக்கும் உத்தரவிடப்பட்டன. எவ்வாறாயினும் அப்போது சட்டத்தரணிகளால், அந்த இரகசிய வாக்கு மூலம் பொலிஸாரால் சொல்லிக்கொடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும் அதனாலேயே அவை ஊடகங்களுக்கு சென்றுள்ளன எனவும் நீதிமன்றுக்கு கூறப்பட்டது.
கொட்டகெத்தன பெண்கள் கொலை,
சிறுமி சேயா விவகாரம் :
அதேபோல் பொலிஸார் வேண்டுமென்றோ அல்லது குற்றவிசாரணையை உடனடியாக முடிப்பதற்காக அப்பாவிகள் மீது பழியை போட்டு, அவர்கள் பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியதாக கூறிய சம்பவங்கள் பலவும் உள்ளன.
உதாரணத்துக்கு இரத்தினபுரி கொட்டகெத்தன தொடர் பெண்கள் கொலைகளை கூறலாம். அதில் தன் தாயை கொலை செய்ததாக கூறி மகனைக் கைது செய்த பொலிஸ் , அம்மகன் பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலம் என ஒரு கதையையே தயாரித்திருந்தது. எனினும் பின்னர் சி.ஐ.டி.யினர் ஒருவரைக் கைது செய்து முன்னெடுத்த டி.என்.ஏ. சோதனைகளில் பல உண்மைகள் வெளிப்பட்டு, குற்றவாளியாக சித்திரிக்கப்பட்ட சிறுவன் விடுவிக்கப்பட்ட வரலாறு உள்ளது.
அதேபோல் கொட்டதெனியாவ சிறுமி சேயா படுகொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளியைக் கைது செய்ய முன்னர், 17 வயது பாடசாலை மாணவன் ஒருவனையும், கொண்டயா எனும் நபர் ஒருவரையும் கைது செய்து அவர்கள் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியதாக பொலிசார் கொண்டு சென்ற நாடகம் எமக்கு ஞாபகத்தில் இல்லாமலில்லை.
எனவே பொலிஸார் கடந்த காலங்களில் குற்றம் ஒன்று தொடர்பில் எழுதிய கதை, திரைக் கதை, வசனம், இயக்கம் போன்றன சமூக மட்டத்தில் பரவலாக பேசு பொருளானவையே.
இவ்வாறான நிலையிலேயே, பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு விவகாரத்திலும் பொலிஸாரின் நடவடிக்கைகள் அந்த வரலாறுகளை மீள ஞாபகப்படுத்துவதாக உள்ளன.
இரகசிய விசாரணையும் கைதும் :
இந்த கைக்குண்டு விவகார விசாரணைகள் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் நேரடி கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைகள் மிக இரகசியமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது கொழும்பு தெற்கு வலய குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் பங்களிப்பிலாகும்.
அதன்படியே இந்தகுண்டு விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் நபரை எம்பிலிப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாமுர பகுதியில் அன்னதான வீடொன்றில் வைத்து, அரச உளவுச்சேவையின் தகவலுக்கமைய விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய சிறப்புக் குழு கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கம்பஹா – கடவத்தை – மங்கட வீதி பகுதியைச் சேர்ந்த 65 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நபர் ஒருவர் வழங்கிய 50 ஆயிரம் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர் குண்டினை எடுத்து வந்து வைத்துச் சென்றதாக ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சி.சி.ரி.வி. காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், சம்பவ தினமான கடந்த 11 ஆம் திகதி மு.ப. 9.52 மணிக்கு தேவாலயத்துக்குள் நுழையும் சந்தேக நபர், கிரிபத்கொடை – அங்குலானைக்கிடையே பயணிக்கும் 154 ஆம் இலக்க பஸ் வண்டியில் வந்து அரச அச்சக கூட்டுத்தாபனம் முன்பாக உள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்குவதும் அங்கிருந்து தேவாலயத்துக்கு செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவாலய சொரூபத்துக்கு அருகே குண்டினை வைத்துவிட்டு அங்கு ஊது பத்திகளை பற்ற வைப்பதை ஒத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தேவாலய சி.சி.ரி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
பின்னர் தேவாலயத்தில் குண்டினை வைத்ததாக நம்பப்படும் குறித்த நபர், அங்கிருந்து வெளியேறி மெகசின் சிறைச்சாலைக்கு முன்பாக இருந்து முச்சக்கர வண்டியொன்றில் செல்வது தெரிய வந்துள்ள நிலையில், அதிலிருந்து சந்தேக நபரை தேடிய விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையிலேயே அரச உளவுச் சேவை அளித்த தகவலுக்கு அமைய, கொழும்பு தெற்கு வலயக் குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்ததாக அறிய முடிகிறது.
ஓய்வு பெற்ற வைத்தியரின் கைது :
இவ்வாறு கைது செய்யப்பட்ட 65 வயது நபர் துறைமுக பொலிஸ் நிலையத்தில் உள்ள கூண்டில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். இந்நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் நேற்று முன் தினம் (18) பிலியந்தலை பகுதியில் வைத்து ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரைக்கைது செய்ததாக பொலிஸார் உத்தியோகபூர்வமற்ற முறையில் அறிவித்தனர்.
பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற அந்த வைத்தியர், பிலியந்தலையில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றினை நடாத்துவதாகவும், அவரின் வைத்திய நிலையத்தில், குண்டை வைத்த நபர் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றியுள்ளதாகவும், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும்போது வைத்தியரும் பனாமுர அன்னதான வீட்டில் இருந்துள்ளதாகவும் பொலிசாரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் கைது செய்யப்பட்ட வைத்தியரின் இன அடையாளங்களை அவ் ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், நாரஹேன்பிட்டி அப்பலோ வைத்தியசாலை குண்டு விவகாரம், இந்த தேவாலய குண்டு விவகாரத்தின் பின்னணியில் இந்த வைத்தியரும் உள்ளதாக பொலிசார் கூறுவதாக ஊடகங்கள் கூறும் நிலையில், இன்னும் யாரையெல்லாம் பொலி சார் கைது செய்யப்போகிறார்கள் எனத் தெரியாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இவ்விசாரணைகள் தொடர்கின்றன.
குறைந்தபட்சம் கைது செய்யப்படும் நபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களைக் கூட பொலிசார் வெளிப்படுத்தாமல், ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு இரகசியமாக கதை சொல்லி அதை சமூகமயப்படுத்தும் நடவடிக்கையில் விசாரணையாளர்கள் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
உத்தியோகபூர்வமான எந்த தகவல்களும் வெளிப்படுத்தப்படாத நிலையில், இந்த குண்டு விவகாரமும் மக்களை திசை திருப்புவதற்கான ஒரு திரைக் கதையே என்பதும், அக்கதை பிசு பிசுத்துப்போயுள்ளமையும் தெளிவாக தெரிகிறது.-Vidivelli