உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 19 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள, மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம், நேற்றைய தினம் வெளியான த மோர்னிங் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய முதல் நேர்காணல் இதுவாகும். அதனை விடிவெள்ளி வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம்.
நேர்காணல் : பமோதி வரவிட்ட
நன்றி : த மோர்னிங்
நீங்கள் எப்போது கைது செய்யப்பட்டீர்கள், கைது செய்யப்படுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை கூறமுடியுமா?
நான் 16 மே 2020 அன்று கைது செய்யப்பட்டேன். நான் புத்தளத்தில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் கற்பித்தேன். – அது ஒரு தனியார் பாடசாலை. நான் அங்கு கற்பித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் எனக்கு தங்குமிடத்தை வழங்கினர். நான் மூன்று மாதங்கள் விடுதியில் தங்கியிருந்த பிறகு, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு முடக்கப்பட்டதால் வீட்டிற்குச் சென்றேன். நான் வீட்டிற்குச் செல்லும் போதுதான், சேவ் த பேர்ள்ஸ் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம் பேசு பொருளானது. அவர்கள் (பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் [TID] அதிகாரிகள்) நான் தங்கியிருந்த கட்டிடத்தை சோதனை செய்தனர். எனது உடைகள், எனது சொந்த புத்தகங்கள், நான் வாசித்த புத்தகங்கள் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்திருந்தேன். அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
அதன் பிறகுதான் எனது வீட்டுக்கு வந்து என்னைக் கைது செய்தனர். நான் 2019 ஜூன் அல்லது ஜூலையில்தான் அப் பாடசாலையில் பணிபுரியத் தொடங்கினேன். நான் அந்த தங்குமிடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தேன். 2012 முதல் 2019 வரை, நான் பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய நிறுவனத்தில் படித்தேன், அங்கு நான் அரபு, இஸ்லாமிய ஆய்வுகள், இலக்கியம் மற்றும் சமூகவியல் பாடங்களைக் கற்றேன். நான் எனது உயர்தரத்தையும் அங்கேயே செய்தேன். நான் 2019 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பில் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்தேன், அதனை முடிப்பதற்காக இன்னும் காத்திருக்கிறேன். நான் பாடசாலையில் தரம் 9,10 மற்றும் சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் தமிழ் இலக்கியம் கற்பித்தேன்.
நீங்கள் சேவ் த பேர்ள்ஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தீர்கள் என்பது அவர்களது ஆரம்பக் குற்றச்சாட்டு. அது உண்மையா? நீங்கள் அவர்களுடன் எந்த வகையிலேனும் தொடர்புபட்டிருக்கிறீர்களா?
நான் சேவ் த பேர்ளுடன் எந்த வகையிலும் தொடர்புபடவில்லை. நான் வசித்த விடுதிக் கட்டிடம் சேவ் த பேர்ள்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது, ஆனால் பாடசாலை நிறுவனம் நான் தங்குவதற்காக வழங்கிய இடம் என்ற அடிப்படையில்தான் அதில் தங்கியிருந்தேன். நான் கைது செய்யப்பட்ட பிறகுதான், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் இதுபற்றி விசாரித்தபோதுதான், சேவ் த பேர்ள்ஸ் பற்றி அறிந்தேன். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்ட செய்தியின் மூலம் தான் அவரைப் பற்றியும் நான் அறிந்து கொண்டேன்.
‘நவரசம்’ நூலை எப்போது வெளியிட்டீர்கள்?
2017 ஜூலையில் நவரசம் புத்தகத்தை வெளியிட்டேன். அதற்கு முன் கவிதைகளை எழுதி தொகுத்தேன். அதுவே என்னுடைய முதல் புத்தகம். எனக்கு 26 வயதுதான் ஆகிறது.
உங்களை கைது செய்யும் போது அதிகாரிகள் என்ன சொன்னார்கள்?
என் வீட்டுக்கு வந்ததும் நவரசம் பற்றி நிறைய கேள்விகள் கேட்டு அலுமாரியில் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் பார்த்தார்கள். என்னிடம் அப்போது நவரசம் நூலின் சுமார் 105 பிரதிகள் இருந்தன, அவற்றையும் மேலும் வேறு 50 புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர். அவர்கள் என்னைக் கைது செய்தபோது, “சிறிய விசாரணை” என்றுதான் சொன்னார்கள். ஒரு மொழிபெயர்ப்பாளருடன் நான்கு அல்லது ஐந்து அதிகாரிகள் வந்திருந்தனர்.
உங்களால் என்ன மொழிகளைப் பேச முடியும்?
எனக்கு மொழிகளை மிகவும் பிடிக்கும். என்னால் தமிழ் மற்றும் அரபு மொழிகளை பேச முடியும். என்னால் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை சமாளிக்க முடியும். – ஆனால் அவற்றை சரளமாக பேச முடியாது.
கைது செய்யப்பட்ட பிறகு உங்களை எங்கே அழைத்துச் சென்றார்கள்?
அவர்கள் என்னை கைது செய்த பின்னர் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவின் முகாமுக்கு அழைத்துச் சென்றனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நினைத்தவாறே, அரசுக்கும், அதிகாரிகளுக்கும் ஒத்துழைக்கும் நோக்கத்தில்தான் விசாரணைக்குச் சென்றேன். அதனால்தான் அவர்களுடன் சென்றேன். அந் நேரத்தில் எனக்கென்று சட்டத்தரணிகள் எவரும் இருக்கவில்லை.
நீங்கள் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவின் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் என்ன நடந்தது?
நான் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ‘பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு’ என்ற பெயர்ப் பலகையைக் கண்டு, அச்சமடைந்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பாடசாலையின் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு நான் என்ன கற்றுக் கொடுத்தேன் என்பது பற்றி என்னிடம் கேள்விகளை எழுப்பினர். ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் பயங்கரவாதம் பற்றிய வீடியோக்களை மாணவர்களுக்கு காண்பித்ததாகவும், சஹ்ரானை ஆதரித்து நான் விரிவுரைகளை நடத்தியதாகவும் அவர்கள் என் மீது குற்றம் சாட்டினர். நவரசம் புத்தகம் சஹ்ரானுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், அவருடைய கருத்துகளை ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
மறுநாள் காலை வரை இதைப் பற்றி என்னிடம் கேட்டார்கள். எனக்கும் பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினேன். தீவிரவாதிகளுக்கு எதிராக நான் எனது நூலில் எழுதியுள்ளவற்றைப் படிக்கும்படி கேட்டுக் கொண்டேன். தொடர்ந்தும் என்னிடம் நிறைய விசாரித்தார்கள். என்னிடம் கிறிஸ்தவ புத்தகங்கள், இந்து புத்தகங்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் இருப்பதாகவும் ஆனால் என்னிடம் பௌத்த சமயம் சார்ந்த புத்தகங்கள் இல்லை என்றும் சொன்னார்கள். இதற்கான காரணம் என்ன என்றும் கேட்டனர். நான் இரண்டு அல்லது மூன்று பௌத்த நூல்களைப் படித்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவை எனக்குச் சொந்தமானவையல்ல என்று கூறினேன். பௌத்த புத்தகங்கள் என்னிடம் இல்லாததால் நான் தீவிரவாதி என்று அதிகாரிகள் கூறினர்.
வவுனியாவில் எவ்வளவு காலம் உங்களை தடுத்து வைத்து விசாரித்தார்கள்?
வவுனியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் என்னிடம் சிங்களத்தில் கேள்விகள் கேட்டார்கள், அதை ஒரு மொழிபெயர்ப்பாளர் தமிழில் மொழிபெயர்த்தார். காலை வரை என்னிடம் விசாரித்தார்கள் – என்னை தூங்குவதற்கும் அனுமதிக்கவில்லை. நான் மிகவும் சோர்வாக இருந்தபோது, அவர்கள் என்னை அதிகாலை 5.30 மணியளவில் தூங்க அனுமதித்தனர், ஆனால் விசாரணைக்காக காலை 8 மணிக்கு மீண்டும் என்னை எழுப்பினர். நவரசம் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் சேகரித்து அவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு நான், இப் புத்தகம் நாடெங்கிலும் விநியோகம் செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளதால் அதனை மீள சேகரிக்க எந்த வழியுமில்லை என்று கூறினேன்.
பின்னர் என்னை ஒரு வாகனத்தில் ஏற்றி எனது வீட்டின் அருகே அழைத்துச் சென்றனர். புத்தகத்தின் சுமார் 10 பிரதிகளை அயலவர்களிடம் இருந்து சேகரித்தோம். அப்போது இராணுவத்தில் இருந்து இரண்டு பேர் வந்தனர். அவர்கள் என்னை கடுமையாக நோக்கி, “நீ சஹ்ரானுடன் தொடர்புபட்டிருக்கிறாய். உன்னை கொழும்புக்கு அழைத்துச் சென்று நான்கு வருடங்கள் இருட்டு அறையில் அடைக்கப் போகிறோம். உனக்கு என்ன நடந்தது என்று கூட யாருக்கும் தெரிய வராது” எனக் கூறினார்கள்.
எனக்கு எதுவும் தெரியாது என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது. என்னை பயமுறுத்துவதற்காக இரண்டு மொழிகளிலும் கதைத்தார்கள். நான் சஹ்ரானின் வகுப்பிற்குச் சென்றதாகவும் ஏன் அங்கு சென்றேன் என்றும் ஏன் நவரசம் புத்தகத்தை எழுதினேன் என்றும் கேட்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நான் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது எனக்கென சட்டத்தரணிகள் இருக்கவில்லை.
கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு என்ன நடந்தது?
கொழும்பில், மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க, என்னை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கும் என்னை பயங்கரவாதி என்று குற்றம் சாட்டினர். நான் 18 மே 2020 முதல் 31 மே 2020 வரை 14 நாட்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது மாடியில் கழித்தேன். தீவிரவாத புத்தகம் ஒன்றை எழுதியுள்ளேன் என்றும் அந்த புத்தகத்தின் மூலம் மாணவர்களிடம் பயங்கரவாத கருத்துக்களை பரப்பி வருகிறேன் என்றும் கூறினர்.
இது சஹ்ரானுடன் தொடர்புடையது என்றும், அவனது குண்டுத்தாக்குதல்கள் நல்ல விடயங்கள் என்றும் மாணவர்களுக்கு நான் கற்பித்ததாக கூறினார்கள். நான் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும், நான் பயங்கரவாதத்திற்கு எதிரானவன் என்றும், எனது எழுத்துக்கள் அனைத்தும் அதற்கு எதிரானது என்றும் அவர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன். இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் நான் திரும்பத் திரும்பச் சொன்னேன். அவர்கள் என்னை கைவிலங்கிட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தினார்கள்.
இந்த நேரத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி என்னை வற்புறுத்தினார்கள். என்னை 15 அல்லது 20 ஆண்டுகள் சிறையில் அடைப்போம் என்று மிரட்டினார்கள். அப்போது, எனக்கு திருமணம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. நான் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணையும் கைது செய்வோம் எனக் கூறி என்னை மிரட்டினர். இவ்வாறுதான் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் கேட்டு மிரட்டினார்கள்.
இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள அல்லது ஒரு சட்டத்தரணியைப் பெற்றுக் கொள்ள நீங்கள் அனுமதிக்கப்பட்டீர்களா?
நான் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, வீட்டாரைத் தொடர்பு கொள்ள எனக்கு அனுமதி கிடைத்தது.- அதாவது நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று சொல்ல எனக்கு அனுமதி கிடைத்தது. அதைவிட அவர்கள் வேறு எதுவும் சொல்ல என்னை அனுமதிக்கவில்லை. – நான் எங்கே இருக்கிறேன் என்பதும் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் விசாரணை மேற்கொள்ளும்போது, எனக்கென சட்டத்தரணிகள் இல்லை என்றும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், என்னை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு தடுத்து வைத்திருக்கலாம் என்றும் சொன்னார்கள். என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல் 10 வருடங்கள் கூட வைத்திருக்கலாம் என்றும் சொன்னார்கள்.
14 நாட்களுக்குப் பிறகு, நான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு மூன்று மாதங்கள் கைவிலங்கிடப்பட்டு வைக்கப்பட்டேன். அந்த மூன்று மாதங்களில், அவர்கள் விரும்பும் போதெல்லாம், சில நேரங்களில் நள்ளிரவில் கூட என்னை விசாரிப்பார்கள், சில சமயங்களில் அவர்கள் என்னை விசாரிப்பதற்காக கட்டாயப்படுத்தி தூக்கத்திலிருந்து எழுப்புவார்கள். நான் தூங்கும் போது கூட, என் கை ஒரு மேசையின் காலுடன் சேர்த்து இணைத்து விலங்கிடப்பட்டிருக்கும். இவ்வாறு மொத்தம் சுமார் ஐந்து மாதங்கள நான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்தேன்.
நான் காலையிலும் மாலையிலுமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டேன். அந்த 14 நாட்களில், கைகளை பின்னால் கட்டியபடி மண்டியிட வைத்தார்கள். மேலும் நான் ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது அல் கைதாவுடன் தொடர்பு வைத்துள்ளதாக ஒப்புக்கொள்ளும்படி கடுமையான வார்த்தைகளால் மிரட்டினார்கள். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் ஏனையவர்களை அடிப்பார்கள். “நாங்கள் சொல்வதைச் செய்வாயா அல்லது இப்படி அடி வாங்கப் போகிறாயா?” என்று கேட்பார்கள்.
உண்மையாகவே அவர்கள் உங்களிடம் என்னதான் கேட்டார்கள்?
நான் பாடசாலையில் கற்பிக்கும் போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லா எனக்கு சம்பளம் வழங்கியதாக நான் கூற வேண்டும் என அவர்கள் விரும்பினர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும், அவரை என் வாழ்நாளில் பார்த்தது கூட இல்லை என்றும் கூறினேன். பின்னர் புத்தக வெளியீட்டு விழாவின் போது ரிசாத் பதியுதீன் வந்து தீவிரவாத சிந்தனை கொண்ட இப் புத்தகத்தை வெளியிட பணம் கொடுத்ததாக சொல்லச் சொன்னார்கள். எனக்கு அவரையும் தெரியாது என்றும் புத்தகத்தை வெளியிட்டது நான்தான் என்றும் கூறினேன்.
பின்னர் ஜமாத்தே இஸ்லாமி மாணவர் இயக்கத்திற்கு எதிரான ஆதாரங்களை தருமாறு என்று கேட்டனர். எனக்கு அவர்களுடன் தொடர்பில்லை, நான் அந்த அமைப்பின் உறுப்பினரும் இல்லை என்றேன். இறுதியாக, ஜாமிஆ நளீமியா நிறுவனம் எனக்கு தீவிரவாத சிந்தனைகளை கற்பித்ததாகவும், நான் அதனை மாணவர்களுக்கு போதித்ததாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் என்னை வற்புறுத்தினர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த மாதங்களில், அவர்கள் என்னை என் குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேச அனுமதிப்பார்கள். நாம் பேசிக் கொள்வது வெளியில் கேட்கும் வகையில் தொலைபேசியை செயற்படுத்துவார்கள். இந்த சமயத்தில் என்னைச் சூழ மூன்று அல்லது நான்கு அதிகாரிகள் நிற்பார்கள். அவர்கள் நான் பேசுவதையெல்லாம் கேட்டு, குறிப்பெடுத்துக் கொள்வார்கள். வழக்கு தொடர்பான எதையும் பேச அனுமதிக்கமாட்டார்கள். நான் நலமாக இருக்கிறேன் என்று மட்டுமே கூற அனுமதிக்கப்பட்டேன். நான் வழக்கு சம்பந்தமாக ஏதாவது பேச ஆரம்பித்தால், அவர்கள் தொடர்பை துண்டித்துவிடுவார்கள்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் ஆறாவது மாடியில் 100 நாட்களும், அதற்குப் பிறகு இரண்டாவது மாடியில் 40 நாட்களும் கழித்தேன். நான் இப் பிரிவில் மாத்திரம் மொத்தம் ஐந்து மாதங்கள் மற்றும் நான்கு நாட்கள் இருந்தேன்.
இக் காலப்பகுதியில் உங்கள் குடும்பம் என்ன செய்தது?
நான் கைது செய்யப்பட்ட பின்னர் எனது குடும்பத்தினர் சில பயங்கரவாத புலனாய்வு அதிகாரிகளைச் சந்தித்து என்னை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல் 14 நாட்களில் நான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக அவர்கள் எனது பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால் நான் சொன்னபடி அவர்கள் வாக்குமூலத்தை எழுதவில்லை. அவர்கள் என்ன எழுதினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை,
ஏனென்றால் நான் தமிழில் கூறுவதை, மொழிபெயர்ப்பாளர் சிங்கள மொழி பேசும் அதிகாரிக்கு சிங்களத்தில் கூறுவார், பின்னர் அந்த அதிகாரி பதிவு செய்யும் அதிகாரி தமிழில் என்ன எழுத வேண்டும் என சிங்களத்தில் கட்டளையிடுவார். ஜாமிஆ நளீமியா கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் போது எனக்கு தீவிரவாத சிந்தனைகள் வந்ததாகவும், அதனை மாணவர்களுக்கு நான் கற்பித்ததாகவும் வாக்குமூலத்தில் எழுதப்பட்டிருந்தது. வாக்குமூலத்தைப் படிக்க நான் அனுமதிக்கப்படவில்லை, அதில் கையெழுத்திடச் சொன்னபோது, நான் கையெழுத்திடாவிட்டால் 20 ஆண்டுகளுக்கு வீட்டிற்கு அனுப்ப மாட்டோம் என்று மிரட்டினர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, நான் வீட்டிற்குச் செல்ல வேண்டுமானால், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) சி.பி. ரத்நாயக்கவிடம் வாக்குமூலம் அளிக்குமாறும், நீதிபதி ஒருவருக்கு முன் வாக்குமூலம் அளிக்குமாறும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு, எனது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்புகளை எடுக்க விடாமல் தடுத்ததுடன், என்னை அதிகம் திட்டவும் ஆரம்பித்தனர். அவர்கள் என் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாங்கள் சொல்வது போன்று நடந்து கொள்ளுமாறு என்னிடம் கூறுமாறும் இன்றேல் என்னை 20 வருடங்கள் சிறைக்கு அனுப்புவோம் என்று கூறினார்கள். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரே தந்தையிடம் இவ்வாறு கூறியிருந்தார்.
சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் என்னை ஏஎஸ்பியிடம் அழைத்துச் சென்றனர். நான் அங்கு அழைத்துச் செல்லப்படுவதை அறிந்திருக்கவில்லை. – எனது கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் கால்நடைகளைப் போல அழைத்துச் செல்லப்பட்டோம். – எங்களுக்கு அங்கு எந்த உரிமையும் அங்கு வழங்கப்படவில்லை. அங்கு ஏஎஸ்பி ரத்நாயக்க, “மகன், உனக்கு எங்கிருந்து தீவிரவாத சிந்தனைகள் வந்தன, அவற்றை மாணவர்களுக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தாய்?” எனக் கேட்டார். எனக்கு யாரும் தீவிரவாதக் கருத்துக்களைக் கற்பிக்கவில்லை என்றும், நான் யாருக்கும் தீவிரவாதத்தைக் கற்பிக்கவில்லை என்றும் தமிழில் பதிலளித்தேன். என் உம்மாவையும் வாப்பாவையும் நேசிப்பது குற்றம் என்றால், நான் அதைச் செய்தேன் என்று, என் மீது வழக்குத் தொடுத்து என்னைக் கொல்லுங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதன்பின், நீதிபதி முன் வாக்குமூலம் அளிக்கும்படி என்னை வற்புறுத்த முயன்றனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் எனக்கு சரியாக உணவு வழங்கவில்லை, அவர்கள் என்னை வீட்டாருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை. அவர்கள் மற்ற கைதிகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிப்பார்கள், நான் ஒப்புக்கொண்டால் மட்டுமே எனக்கு தொலைபேசி அழைப்பெடுக்க அனுமதிக்கப்படும் என்று கூறுவார்கள். ஒப்புக்கொள்ளாவிட்டால் 15 அல்லது 20 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்பார்கள். அவை சிறைக் கூண்டுகளில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தன. தேவையான மருந்துப் பொருட்கள் தரப்படவில்லை.
நீங்கள் சட்டத்தரணியை அணுகிய பிறகு என்ன நடந்தது?
நான் எனது சட்டத்தரணியை முதன்முறையாகச் சந்தித்தபோது, எனக்கு சரியான உணவு அல்லது வசதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக, அவர்கள் என்னிடம் வாக்குமூலம் கேட்பதைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. ஏதேனும் சட்டத்தரணியிடம் முறையிட்டால் என்னை அடிப்பார்கள் என்று தெரிந்ததால் வேறு எதுவும் நான் பேசவில்லை. ஆனால் சட்டத்தரணி சென்றவுடனேயே என்னை கைவிலங்கிட்டு, திட்டிவிட்டு அன்று முழுவதும் அப்படியே வைத்திருந்தார்கள். பின்னர் அவர்கள் என்னை கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள ஒரு சிறையில் ஒரு மாதம் வைத்தார்கள்.- மனிதர்கள் இருக்க முடியாத இடம் அது. அங்கு மிகவும் சூடாக இருக்கும், உங்களால் சுவாசிக்க முடியாது. ஒரு மிருகம் கூட அதில் வாழ முடியாது.
அதன் பின்னர் அவர்கள் என்னை இரண்டு மாதங்களுக்கு தங்காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு சென்று தடுத்து வைத்தனர். பின்னர் என்னை மீண்டும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் ஆறாவது மாடிக்கு மாற்றினர். பின்னர் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு விளக்கமறியல் சிறையில் அடைத்தனர். காவலர்கள் என்னைப் பார்த்து உரக்க கத்துவார்கள், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று திட்டுவார்கள். எங்களால் அங்கு குளிக்க முடியவில்லை, சரியான உணவு இல்லை. ஒரு அறையில் அதிகபட்சமாக 25 அல்லது 30 பேர் மட்டுமே இருக்க முடியும், ஆனால் ஒரு அறையில் சுமார் 50 பேர் இருந்தனர்.
இப்போது என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? எழுதுவதை நிறுத்தப் போகிறீர்களா?
இந்த நாட்டில் பேசவோ எழுதவோ முடியாது. எழுதுவது என் பொழுதுபோக்கு. எங்களால் எழுத முடியாவிட்டால் எங்களால் வாழ முடியாது. எங்களால் கால்நடைகளைப் போல வாழ முடியாது. நான் எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும் எழுதிக் கொண்டே இருந்தேன், விடுதலையான பிறகு இன்னும் அதிகமாக எழுதுகிறேன். – அநீதிக்கு எதிராக தொடர்ந்து எழுதுவேன்.
பயங்கரவாத தடைச் சட்டம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். அவர்கள் மக்களைக் கைதுசெய்து விட்டு பின்னர் குற்றச்சாட்டுக்களைச் சோடிக்கிறார்கள். இந்த சட்டம் இருக்கும் வரை எங்களால் வாழ முடியாது.
எனது சட்டத்தரணிகள் குழுவிற்கும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழுவிற்கும் ஏனைய மனித உரிமை அமைப்புகளுக்கும், ஊடகங்கள் மற்றும் எனக்காக குரல் கொடுத்து எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
-Vidivelli