மூலம்: திசரணி குணசேகர
தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்
அமெரிக்காவில் விடுமுறையை கழித்துவிட்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வந்த விதம் கேட்ட வரத்தை வாரி வழங்கும் கற்பக தருவின் பாணியிலாகும். 2022 இன் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அவர் முன்வைத்த கபினட் பத்திரம் ஒரு (தன்சல) தான சாலையை ஒத்ததாகும். அரசாங்க உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உதவி பெறுவோர் இராணுவத்தினர் போன்ற தீர்க்கமான சமூகப் பிரிவினருக்கு விசேட கொடுப்பனவுகளும் பொதுவாக மக்களுக்கான சலுகைகளும் அந்தப் பத்திரத்தில் அடங்கியிருந்தன.
அரசியல்வாதிகள் (மற்றவர்களது பணத்தில்) வாரி வழங்குவது தேர்தலொன்று நெருங்கும் போதாகும். ராஜபக்ச குடும்பத்தினரின் வள்ளல் தன்மையின் பின்னணி 2022 ஒரு தேர்தல் வருடம் என்று எதிர்வு கூறுகின்றதா?
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எவ்வளவுதான் பெருமையடித்த போதிலும் இந்த நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைத்ததாக இல்லை. சீனாவிலிருந்து எமக்கு கிடைத்தது டொலர் அல்ல யூஆன் ஆகும். அவற்றில் ஒரு பகுதியை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்காகப் பயன்படுத்தலாம், ஆயினும் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் துறைமுகத்தில் காத்திருக்கும் அத்தியாவசியப் பொருட்களடங்கிய கொள்கலன்களை விடுவித்து பொருட் பற்றாக்குறையையும் டொலர் பிரச்சினையையும் போக்க எவ்வித வழியும் அதனால் கிடைக்கவில்லை.
இந்தியாவிடம் எப்படியாவது கடனை பெற்றுக் கொள்வது ராஜபக்ச ஆட்சிக்கு முக்கியத்துவமானதாக இருப்பதற்கான காரணம் இதுவே. இதற்குப் பகரமாக திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள விடயம் அரசியல் பரப்பில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமாவது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது இந்தியாவின் மற்றுமொரு கோரிக்கையாக இருந்திருக்கலாம். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா இதற்கு முன்னரும் பல தடவைகள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் நட்பு பலத்தில் கர்வம் கொண்டிருந்த இலங்கை அந்தக் கோரிக்கைகளுக்கு பெரிய அளவில் இதுவரை செவி சாய்க்கவில்லை.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இந்தியாவின் உதவி கிடைக்காவிட்டால் ஜனவரி இறுதியாகும் போது இலங்கையின் சென்மதி நிலுவை இருப்பு அடிமட்டத்தை தொட்டுவிடும் ஆபத்தில் உள்ளது. இந்நிலையில் மாகாண சபைத்தேர்தலை அவசரமாக நடத்தும் நிலைக்கு இலங்கை தவிர்க்க முடியாதபடி தள்ளப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. 2022இன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அரசாங்க சம்பளம் பெறுவோரின் உள்ளங்களை மகிழ வைத்ததன் இரகசியம் அடுத்துவரும் மாகாணசபைத் தேர்தல் தான் என்று அனுமானிப்பது யதார்த்தமானதே.
சிங்களப் பெரும்பான்மை கொண்ட ஒரு சில மாகாண சபைகளிலேனும் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பது ராஜபக்சாக்களின் நோக்கமாக இருப்பது தெரிகிறது. எதிர்க்கட்சிகள் மிகக் குறைந்தபட்ச ஒருமைப்பாட்டுக்குத் தானும் வர முடியாத அளவுக்கு பிளவு பட்டுள்ள நிலையில் இந்த இலக்கை அடைவது சாத்தியமாகும் என்பது ராஜபக்சாக்களின் இலக்காகவுள்ளது. சலுகைப் பொதி வழங்கப்பட்டமை இந்த நோக்கத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நாட்டின் நாலாபுறத்திலும் ராஜபக்ச அரசாங்கத்திற்குப் பலத்த எதிர்ப்பு காணப்படுகின்றது. இந்த எதிர்ப்பு ராஜபக்ச குடும்பம் பொதுஜன ஐக்கிய முன்னணிக் கட்சிக் கூட்டணிக்குள்ளும் கசிந்துள்ளது. பிரதேச சபைகளில் பொதுஜன ஐக்கிய முன்னணி வரவு செலவுத் திட்டங்களில் தோல்வியடைவது ஒரு பொதுக்காரணியாகவுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் இத்தகைய வரவு செலவுத்திட்டத் தோல்விகள் ஜாஎல நகரசபை, இரத்தினபுரி பிரதேசசபை, மாவனல்லை பிரதேசசபை, லிந்துல நகரசபை (இரண்டாவது தடவையாக) என்றவாறு பரவலடைந்தது. சுசில் பிரேம ஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை உள்ளக குழப்பத்தின் முக்கிய எதிரொலியாகும்.
ஆயினும் இந்த எதிர்ப்புகள் எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் அளவுக்கு விரிவடையுமா என்பது தெரியாது. அப்படியொரு மாற்றம் தானாக நிகழ முடியாது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விரக்தியும் கோபமும் அடைந்துள்ள வாக்காளர்களை தம் பக்கம் இழுத்துக் கொள்ளும் வகையிலான ஒரு தெளிவான வேலைத்திட்டம் எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டும். அவ்வாறின்றேல் ராஜபக்சாக்களிடமிருந்து சரியும் வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கு போவதை விடுத்து “எவருக்கும் வாக்களிக்காத” வகைக்குள் சென்றுவிடும்.
2022இல் மாகாண சபைத் தேர்தல் நடத்த வேண்டியேற்பட்டால் அதை எப்படியாவது வெற்றிபெறுவது ராஜபக்சாக்களின் பிரதான நோக்கமாக அமையும். இதற்காக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் பெறுபேற்றை 2022இல் கண்டுகொள்ள முடியும்.
சிறு பிள்ளைகள் சவர்க்கார நுரையை ஊதி குமிழ்களை உருவாக்கி மகிழ்வது போன்று ராஜபக்சவினர் பல்வேறு பட்டம் பதவிகளின் மீது அபார ஆசை கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் அதிர்ஷ்டம் அத்தகைய பதவி பட்டங்களை உருவாக்குவதில் அபார திறமையும் கொண்டவர்களாக பிக்குமார்கள் காணப்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது அத்தகைய பட்டங்களை வழங்குவதற்கு பல பிரிவினர் முன்வந்தனர். த்ரி சிங்களாதிபதி என்று பட்டம் வழங்கினர். சர்வதேசத்தை வென்ற பெருந் தலைவர் என்று போற்றினர். சூரியனாக சந்திரனாக வர்ணித்தனர்.
இப்போது கோத்தாபய ராஜபக்சவின் யுகம். கோட்டை கல்யாணி சமாதி தர்ம மகா சங்க சபையினர் அவருக்கு ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண என்ற பட்டத்தை வழங்கியுள்ளனர். முக்கிய விடயம் அப்பட்டத்தை ஏற்று அவர் ஆற்றிய உரையாகும். என்னை இந்த நாட்டின் முதற் குடிமகனாக்க அர்ப்பணங்களை மேற்கொண்ட சிங்கள பௌத்தர்களின் அந்த மரபுரிமையை பாதுகாப்பது எனக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான பொறுப்பு என கண்டிப்பாக நம்புகின்றேன் என்று கூறினார்.
அரசியல்வாதிகளுக்கு தொங்குவதற்கு கயிறுகள் இல்லாமல் போகும்போது எஞ்சி நிற்பது நாடு, இனம், மதம் என்பவையே. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Black Lives Matter ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிர்விளைவை காட்டும் வகையில் வெள்ளை மாளிகைக்கு அண்மையில் உள்ள ஒரு மாதா கோயிலுக்குச் சென்று பைபலை (தலைகீழாக) தூக்கிப் பிடித்துக் காட்டினார். தேர்தல்கள் நெருங்கும் போது நரேந்திர மோடி முஸ்லிம் விரோத, பாகிஸ்தான் விரோத கோஷங்களை முன்னெடுப்பார். துருக்கியின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் அளவுக்கு அர்துகானின் இஸ்லாமிய பக்தி அதிகரிக்கிறது.
2022 ஒரு தேர்தல் ஆண்டாயின் அந்தச் சவாலை எதிர்கொள்ள சிங்களக் கொடியையும் பௌத்த கொடியையும் தூக்கிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதை கோத்தாபயவின் பேச்சு உறுதிப்படுத்துகின்றது.
ஏனைய இனத்தவர்களுக்கும் மதத்தவர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதுடன் நின்றுவிடாது பிக்குமார்களின் கைகால்களை உடைப்பதாக பயமுறுத்திய கலகொட அத்தே ஞானசார தேரரை நாட்டின் சட்டத்தை மாற்றுவதற்கு தலைமைப் பொறுப்பில் நியமித்தமை சிங்கள பௌத்த மரபுரிமையைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியா என்று கேட்கத் தோன்றுகின்றது. அமைச்சர் பசில் ராஜபக்ச பாரிவள்ளல் போல செயற்படும்போது கோத்தாபய துட்டகைமுனுவின் வகிபாகத்தை ஏற்றிருப்பதாக அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. மாற்று முகவராக ஞானசார தேரர் போன்றோரைப் பயன்படுத்தி தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் ஒரு தீச்சுவாலையை ஏற்றி சிங்கள பௌத்தர்களின் கவனத்தை ஈர்க்கச் செய்வது அரச குடும்பத்தின் நோக்கமாக இருக்கலாம்.
சலுகைகள் மூலம் ‘நாட்டுப்பற்று’ நாடகம் மூலம் உரிய பெறுபேறு கிடைக்காதபோது வன்முறைகள் கையாளப்படலாம். மிரிஹானையில் பால்மா வாங்க வரிசையில் இருந்தவர்கள் மீதான நடவடிக்கை இதற்கு உதாரணமாகும். முக்கியமான விடயம் பால்மா வாங்க வரிசையில் காத்திருந்த சிலர் ஜனாதிபதிக்கு கூக்குரல் இட்டார்கள் என்பதல்ல பொலிசாரின் நடவடிக்கை யாகும். மக்கள் ஏன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பதைத் தேடிப் பார்க்கும் படி ஜனாதிபதி இட்ட கட்டளையின் படி பொலிஸார் ஜுப்லி மைற்கல் அருகேயுள்ள கடைக்குச் செல்கின்றனர். உண்மையில் ஜனாதிபதி இந்நாட்டில் தானா இருக்கிறார்? கடந்த சில மாதங்களாக இந்த நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு இதுவரை தெரியாதா? பொலிஸாரை அனுப்பி விசாரித்து தான் அறிய வேண்டுமா அப்படித் தெரியாவிட்டால் அதிலிருந்து எழும் துணை வினாக்கள் எவை?
நாட்டில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு இருப்பதும் சில இடங்களில் எரிவாயு லொறி வந்து நின்றவுடன் அதிலிருந்து சில சிலிண்டர்கள் திருடப்பட்டதும் பல இடங்களில் நடைபெற்றன சில இடங்களில் பொலிஸ் பாதுகாப்புடன் சிலிண்டர் விநியோகம் நடந்ததும் அவருக்குத் தெரியாதா?
சீமெந்துத் தட்டுப்பாடு பற்றி, அரிசி விலையேற்றம் பற்றி, நாளாந்தம் உக்கிரமடையும் உணவுத் தட்டுப்பாடு பற்றி அவருக்கு உண்மையில் தெரியாதா? கியூ வரிசையில் இருப்பதற்காக காரியாலயங்களில் லீவு கோரும் உத்தியோகத்தர்கள் பற்றிய செய்தி அவரை எட்டவில்லையா? அப்படி எட்டாமல் யாராவது தடுத்தார்களா? பால்மா தட்டுப்பாடுக்கான ஒரு காரணம் வர்த்தக நிலையங்களில் விநியோகத்தில் உள்ள தாமதம் என்று கண்டறியப்பட்டமையும் பெலவத்த பால்மா முகவர் நிலையங்களை அதிகரிக்க பொலிசார் சிபாரிசு செய்தமையும் அறியமுடிந்தது. சரி! அவ்வாறாயின் இப்போது பால்மா தட்டுப்பாடு நீங்கி விட்டதா? இப்போது கியூவில் நிற்பது தேசத்துரோகிகள் அரசை கவிழ்க்க சதி செய்யும் கிளர்ச்சியாளர்கள். ஆகவே அவர்களை எப்படிக் கவனிக்க வேண்டும் என்பது பொலிசாருக்குத் தெரியாதா?
பால்மா கியூ வரிசை பற்றி தனது முகநூலில் பகிர்ந்து கொண்ட தில்ருக்ஷி பெரேரா என்ற பெண்ணை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்காக அழைத்து ஜனாதிபதியை அவமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஜனாதிபதியை அவதிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்தார்.
ஜனாதிபதிக்கு அவதூறு ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் எழுதும் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதானால் இந்த நாட்டின் பொலிஸ் படை அதற்கு போதியதாக இருக்காது, இவ்வாறு செய்ய பொலிசாருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என ‘வாஹல தந்திரி’ என்பவர் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஆதாரம் காட்டி சட்டத்தரணி திஸ்ஸ வேரகொட அறிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உத்தியோகபூர்வ தடைகள் முடியாதவிடத்து வேறு வகைகளைக் கையாளும் முறை இப்போதே வடக்கு கிழக்கில் அரங்கேற்றப்படுகிறது. ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுவது சராசரி நிகழ்ச்சியாக மாறியுள்ளது. கடந்த நவம்பர் 29ஆம் திகதி விஸ்வலிங்கம் விஸ்வச் சந்திரன் முள்ளிவாய்க்கால் பெயர் பலகையைப் புகைப்படம் எடுக்கும்போது இராணுவத்தினரால் தாக்கப்பட்டார். இந்திய வற்புறுத்தலின் படியேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டி ஏற்பட்டால் சட்டத்தினாலும் அதற்கப்பாலும் தேவையானதை செய்ய ராஜபக்ச நிர்வாகம் தயங்காது என்பது இப்போது தெரியவந்துள்ளது. பிரச்சினை என்னவென்றால் இவ்வளவும் நடந்தும் இந்தச் சவாலை எதிர்கொள்ள எதிர்க்கட்சி ஆயத்தமா? என்பதாகும்.
மாற்று வழி என்பது தனி நபரோ குழுவோ அல்ல, வேலைத் திட்டமே.
ராஜபக்சாக்களை வழிபடும் அடிவருடிக் கூட்டத்தை விட்டால் மற்றவர்களின் ஏகோபித்த முடிவாக இருப்பது இந்த அரசாங்கம் (Fail) தோல்வி என்பதாகும். எதிர்க்கட்சி என்ன செய்கிறது என்பதும் மக்களின் ஆச்சரியமான கேள்வியாக உள்ளது.
இந்தப் பிரச்சினைகளின் மூலகாரணம் 2019 இல் ராஜபக்ச குடும்ப ஆட்சி மேற்கொண்ட வரிக் கொள்கையாகும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு அரசாங்க வரி வருமானம் குறைய இது காரணமாக அமைந்தது. பொதுமக்களுக்கு இதனால் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. சில வர்த்தக நண்பர்களைத் திருப்திப்படுத்துவதே அரசின் நோக்கமாக இருந்தது.
இதுபற்றி எதிர்க்கட்சிக்கு ஒரு தெளிவான போக்கு, ஒரு நோக்கு இருந்திருக்க வேண்டும். அதுபற்றி பொது மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். வெற்றுக் கோசங்கள் வாய்வீச்சு விமர்சனங்கள் கவர்ச்சியான வாக்குறுதிகள் மட்டுமே எதிர்க்கட்சியின் உத்தியாக இருப்பின் ராஜபக்சாக்களிடமிருந்து சரியும் வாக்குகள் இவர்களுக்கு வந்து சேர வாய்ப்பில்லை. சிலபோது காவியுடைத் தீவிரவாதிகளிடம் நாடு முழுமையாக சிக்கும் ஆபத்துக் கூட உண்டு.
பசில் ராஜபக்சவின் சலுகைப் பொதியை வழங்க அரசாங்கத்திடம் பணம் உள்ளதா என்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை. ஏனென்றால் பணம் அச்சிடும் யந்திரம் அவர்கள் கைவசமுள்ளது. இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தமைக்கான அடுத்த பிரதான காரணம் கட்டுக்கடங்காத அளவுக்கு பணம் அச்சிடப்பட்டமையே. இன்றைய பிரச்சினையில் இருந்து வெளிவர அரசாங்கச் செலவுகளைக் குறைப்பது என்ற விடயம் முக்கிய இடத்தைப் பெற வேண்டும். பொருத்தமற்ற விதத்தில் உள்ள பாதுகாப்புச் செலவு குறைக்கப்பட வேண்டும். அதனைப் பகிரங்கமாக கூறும் பலம் அல்லது அரசியல் ஞானம் எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.
இவை தொடர்பாக பரந்த கலந்துரையாடல்கள் சமூகத்தின் பல மட்டங்களிலும் நடைபெற வேண்டும் அதனை எதிர்க்கட்சி வழிநடத்த வேண்டும். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க முன்னர் இந்தப் பொருளாதார வீழ்ச்சி என்னும் படுகுழியில் இருந்து மீளும் வழி பற்றிச் சிந்திக்க வேண்டும்.
நாம் இதுவரை செய்தது தலைவனைத் தெரிவு செய்து அவரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதாகும். ஆனால் அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ராஜபக்சாக்களுக்கு அந்த மாற்று வழி தெரியவில்லை. அவர்களால் முடியவில்லை. அடுத்தது சஜித், ரணில், அனுர என்று தனிமனிதர்களைச் சுற்றிச் சிந்திப்பதைவிடுத்து விழுந்த அதளபாதாளத்தில் இருந்து கரையேறும் வழி வகைகள் பற்றியும் அதற்கான வேலைத்திட்டம் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.- Vidivelli