(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அரசின் திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும், ஆதரவு வழங்கிவரும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் நிகழ்கால சமூக, பொருளாதார மற்றும் முஸ்லிம் சமூகத்தின் காணிப்பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இப்பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு வினவியபோது ‘பேச்சு வார்த்தைக்காக நேரம் ஒதுக்கித்தரும்படி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளோம்.விரைவில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது’எனத் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் காணிப்பிரச்சினை உட்பட பல முக்கிய பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாதுள்ளது. அவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான எமது கடமையாகும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தினால் கொண்ட வரப்பட்ட 20 ஆம் திருத்த சட்டத்தையும், அதன்பின்பு நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தையும் ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக நிதியமைச்சர் பஷில் ராஜபகஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
குறிப்பிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுவரும் ஏற்கனவே வரவு செலவு திட்ட இறுதிவாக்கெடுப்பிற்கு முன்னைய தினம் நிதியமைச்சருடனும், பிரதமருடனும், பேச்சு வார்த்தை நடத்தியிருந்தனர்.இந்தப் பேச்சுவார்த்தையின் போதும் அவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளைக் கலந்துரையாடியிருந்தனர்.
முஸ்லிம் சமூகம்சார் பிரச்சினைகளை அரசாங்கத்துடனும், நிதியமைச்சருடனும் தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.- Vidivelli