பொரளை தேவாலய குண்டு விவகாரம்: மாறுபட்ட வாக்குமூலங்கள் அளிக்கும் பிரதான சந்தேக நபர்
ஓய்வுபெற்ற வைத்தியர் கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை -ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில், அக்குண்டை அங்கு கொண்டு சென்று வைத்தவர் என நம்பப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வாக்கு மூலத்துக்கு அமைய ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், இந்த விவகாரத்தில் இரகசிய விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு தெற்கு வலயத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் பிலியந்தலையில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் அவரையும், ஏற்கனவே எம்பிலிபிட்டிய – பனாமுர பகுதியில் வைத்து கைது செய்த பிரதான சந்தேக நபரான கடவத்தையைச் சேர்ந்த 65 வயது நபரையும் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரித்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
அதன்படி, இந்த விவகாரத்தில் தற்போதைக்கு மொத்தமாக 5 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருவதாக அறிய முடிகிறது. இதில் மூவர் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பிலும், ஏனைய இருவரும் கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளின் பொறுப்பிலும் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாமுர பகுதியில் அன்ன தான வீடொன்றில் வைத்து, அரச உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்கும் இந்த சிறப்புக் குழு பிரதான சந்தேக நபரை கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கம்பஹா – கடவத்தை – மங்கட வீதி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில், முதலில் முஸ்லிம் ஒருவர் குண்டை வைக்க தனக்கு 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்ததாக கூறியுள்ள நிலையில், பின்னர் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற வைத்தியர் ஹேரத்தின் ஆலோசனையில் அச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக கூறியுள்ளார்.
இந் நிலையிலேயே பிரபல சமூக செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான ஓசல ஹேரத்தின் தந்தையான குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் தன்மீதான குற்றச்சாட்டை குறித்த வைத்தியர் மறுத்துள்ளார்.
இந் நிலையில், பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ள, கடவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், தானே நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை மலசல கூடத்தில் வைக்கப்பட்ட குண்டினையும் கொண்டு சென்றதாக கூறியுள்ளதாகவும் அது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் அந்த சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளை திசை திருப்ப இவ்வாறு திரிபுபடுத்தி விடயங்களை கூறுகின்றாரா என்ற சந்தேகமும் உள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட வைத்தியரின் வீட்டிலிருந்து 4 கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், வாயு ரைபிள், 2 வாள்கள், ஒரு ரம்போ கத்தி என்பனவும் மீட்கப்ப்ட்டதாக பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர். இந் நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த போதும், அவை விளையாட்டு துப்பாக்கிகள் என கைது செய்யப்பட்டவரின் மகனும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஓசல ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சிரேஷ்ட சட்டத்தரணி கிரிஸ்மால் வர்ணகுலசூரிய, கலாநிதி அஜந்தா பெரேரா உடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தி கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘எனது தந்தையை தேவாலய குண்டு விவகாரத்தில் தொடர்புபடுத்தி கைது செய்துள்ளனர். இது அடிப்படையற்ற செயற்பாடு. தற்போது அவரை எங்கு தடுத்து வைத்துள்ளனர் என்பது கூட தெரியாது. சட்டத்தரணிகளுக்கு கூட அவரைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று ஊடகங்களில், எனது தந்தையின் வீட்டிலிருந்து ஆயுத களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. அது தவறு.
அவை ஆயுதங்களே இல்லை. அவை எனது அறையிலிருந்தே எடுக்கப்பட்டன. அவை விளையாட்டுப் பொருட்கள். விளையாட்டு துப்பாக்கிகள். அவற்றை வைத்து ஊடகங்கள் ஊடாக தவறான கருத்தினை சமூக மயப்படுத்த முனைகின்றனர். இதன்பின்னணியில் வேறு நோக்கங்கள் உள்ளன. ‘ என தெரிவித்தார்.-Vidivelli