தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகம் ஒத்துழைத்தால் நெருக்கடிகளை தீர்க்கலாம்
முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் அன்சார் தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு எதிராக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையை அதன் நிர்வாக சபை ஒத்துழைத்தால் மாத்திரமே தீர்த்து வைக்க முடியும். சு-முகமான தீர்வுகாண முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும்,வக்பு சபையும் தயார் நிலையில் உள்ளன.
பள்ளிவாசல் நிர்வாக சபை ஒத்துழைப்பு வழங்காதுவிடின் புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்கும் நிலைமை ஏற்படலாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘ஜெய்லானி பள்ளிவாசல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு புதிய நிர்வாக சபை அழைக்கப்பட்டும் நிர்வாக சபையைச் சேர்ந்த மூவர் மாத்திரமே அதில் கலந்து கொண்டார்கள். நிர்வாக சபையை மீண்டும் அழைத்து கலந்துரையாடி சுமுக தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஜெய்லானி புனித தலம் வக்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட சட்டரீதியானதாகும். இந்நிலையில் இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,வக்பு சபை என்பவற்றுக்கு மாத்திரமல்ல பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகசபை ஏகோபித்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜெய்லானி பள்ளிவாசலும் அதனோடிணைந்த பகுதிகளும் முஸ்லிம்களின் தொன்மைமிகு புனித தலங்களாகும். சட்டரீதியானதாகும். அதனை அகற்றும்படி எவருக்கும் உத்தரவிட முடியாது என்றார்.- Vidivelli