கூரகல தப்தர் ஜெய்லானியில் பள்ளியாக இயங்கும் கொட்டிலை அகற்றுக
ஸியாரம் மாத்திரம் இருக்கலாம் என்கிறார் தம்மரதன தேரர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“கூரகல – ஜெய்லானியில் பள்ளிவாசலாக இயங்கிவரும் தகரக் கொட்டிலை அகற்றிக்கொள்ளுமாறு அதன் நிர்வாக சபையிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால் பள்ளிவாசல் நிர்வாகமோ, வக்பு சபையோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. விரைவில் அது அகற்றப்படாவிட்டால் பலாத்காரமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என நெல்லிகல சர்வதேச பெளத்த நிலையத்தின் ஸ்தாபகரான வத்துரகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
ஜெய்லானி பள்ளிவாசல் பிரதேசத்தை அண்மித்து பாரிய அளவில் பெளத்த தாது கோபுரம் உட்பட தர்ம மண்டபம்,வீதிக்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகள் என்பன கூரகல விஹாரை வளாகத்தில் இடம் பெற்று வரும் நிலையில் அப்பகுதியிலுள்ள தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் நிலைமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கூரகல பிரதேசம் பெளத்தர்களின் புனித பிரதேசம் மாத்திரமல்ல தொல்பொருள் பிரதேசமாகும். இப்பகுதியிலே தகர கொட்டிலில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இக்கொட்டிலை அகற்றிக்கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை மகஜர் மூலம் கோரியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்குள்ள ஸியாரத்தை வைத்துவிட்டு பள்ளிவாசலாக இயங்கும் தகர கொட்டிலை அகற்றும் படி வேண்டியிருக்கிறேன்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்னால் ஒரு மண்டபம் வேறாக அமைத்துக் கொடுக்க முடியும். கூரகல பிரதேசம் சிவனொலிபாத மலை போன்று அனைத்து மக்களும் வந்து தங்கள் மதவழிபாடுகளை நடத்தும் வகையில் அமையவேண்டும்.
பள்ளிவாசல் நிர்வாகமோ அல்லது வக்பு சபையோ இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படும். பள்ளிவாசலின் புதிய நிர்வாகத்துக்குள் பிரச்சினை நிலவுவதாக அறிகிறேன் என்றார்.
நிர்வாக சபை உறுப்பினர் ஏ.எம்.ஜே.எம்.ஜவுபர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், வக்பு சபையே அதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.இது தொடர்பில் தாம் நடவடிக்கை முன்னெடுப்பதாக வக்புசபை எம்மிடம் தெரிவித்துள்ளது.
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மற்றும் ஸியாரம் சுமார் 800 வருடகால வரலாறு கொண்டவையாகும். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முஸ்லிம்கள் இங்கு விஜயம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூரகல புனித பிரதேச நிர்மாணப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். எதிர்வரும் வெசாக் அரச தேசிய நிகழ்வு கூரகலயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli