முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளருமாகிய ஏ.பீ.எம். அஷ்ரப், இலங்கை நிருவாக சேவையின் விஷேட தரத்திற்கு 01.07.2021 திகதி முதல் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
1998 மார்ச் 2ஆம் திகதி இலங்கை நிருவாக சேவையின் மூன்றாம் தர உத்தியோகத்தராக உள்வாங்கப்பட்ட அஷ்ரப், 1995 -– 96ஆம் வருடங்களில் நடைபெற்ற அகில இலங்கை மட்டத்திலான இலங்கை நிருவாக சேவைக்கான போட்டிப் பரீட்சையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1998ஆம் ஆண்டு முதல் கடந்த 24 வருடங்களில் பொலிஸ் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வனாத்தவில்லுவ, புத்தளம் மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலகங்கள், துறைமுக அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் ஆகியவற்றில் சேவையாற்றியுள்ளார். ஓய்வூதிய திணைக்களம், கிண்ணியா பிரதேச செயலகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றினூடாக இவர் ஆற்றிய சேவைகள் நன்கறியப்பட்டவையாகும். மேலும் உலக வங்கி நிதியுதவியில் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளினூடாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் (40000 மில்லியன் ரூபாய்) பெறுமதியான உட்கட்டமைப்புத் திட்டங்களை வரைவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் இவர் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஜாமிஆ நளீமியாவில் 1987–94 காலப்பகுதியில் கற்று முதல் தரத்தில் சித்தியெய்தி அங்கு விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ள அஷ்ரப், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டதாரியுமாவார். சுமார் 13000 மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் முதலாமிடத்தில் சித்தியெய்தியதோடு (Second upper) வகுப்பும் பெற்றுள்ளார். மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2009–11 இல் MBA பட்டமும் பெற்றுள்ளார்.
இஹல கொட்டியாவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 7 ஆம் வகுப்பு வரை கற்று பின் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் முதல்நிலை மாணவராக தேறியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் அனுராதபுர மாவட்டத்தில் இஹல கொட்டியாவ என்ற குக்கிராமத்தின் ஆதம்பாவா– ஹபீலா உம்மா தம்பதியரின் மகனாவார்.
இலங்கை நிருவாக சேவையில் பல முஸ்லிம் உத்தியோத்தர்கள் விஷேட தரத்தில் பதவியுயர்வு பெற்றிருந்தாலும் விஷேட தரத்திற்குரிய பதவிகளான மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண பிரதம செயலாளர், இராஜாங்க அமைச்சு செயலாளர், அமைச்சு செயலாளர், A தர திணைக்களத் தலைவர் போன்ற பதவிகள் எதுவும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli