கலாநிதி எம்.ஏ.எஸ்.எப். ஸாதியா
தலைவர், மொழித்துறை, இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் கலாநிதி அல்லாமா ம.மு. உவைஸ் நூற்றாண்டு விழா தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில்18.01.2022 செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணிக்கு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகிறது.
தமிழ் மொழிக்கு இருக்கிற உன்னதமான பண்புகளில் ஒன்று அது பல்வேறு சமயங்களின் இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டதாகும். பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மொழியிலே வந்திருக்கின்றன. இவ்வகையில் இஸ்லாமிய சமயம் சார்ந்த தமிழில் வந்த இலக்கியங்களை மீள் கண்டுபிடிப்புச் செய்து அதற்கென்ற தனிப்பாரம்பரியத்தை உருவாக்கிய பெருமை பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் அவர்களைச் சாரும்.
இவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர். பெரும்பாலும் வடக்கு, கிழக்கிலே இருந்து தமிழ்ப்பணியாற்றுவதைவிட தென்னிலங்கைப் பாரம்பரியத்திலிருந்து வந்து தமிழ்ப்பணி ஆற்றுவது என்பது இன்னொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாணந்துறை ஹேனமுல்லையைச் சேர்ந்த உவைஸ் பாரம்பரிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் மஹ்மூது லெப்பை. தாயார் செய்னம்பு நாச்சியார். இவர் பிறந்த ஹேனமுல்லையை ‘ஊர்மனை’ என்றும் அழைப்பர். இவர் வாழ்ந்த வீட்டுக்கு ‘மர்கஸ்’ என்று பெயர்.
கிராமத்துப் பாடசாலையிலேயே உவைஸ் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். அவரது தந்தையார் வியாபாரத்தில் ஈடுபாடு காட்டினாலும் சமயப் பணிகளிலும் ஈடுபட்டார். உவைஸ் அரசினால் நடத்தப்பட்ட கனிஷ்ட பாடசாலை தராதரப் பரீட்சையில் தோற்றி சித்தி எய்தினார். அது அக்காலத்து வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. அவருடைய சக முஸ்லிம் மாணவர்களும் தமிழ் மாணவனும் அப்பரீட்சையில் சித்தி அடையவில்லை. மேலும் பல பிரச்சினைகளால் உவைஸ் தொடர்ந்து கற்கக்கூடிய வாய்ப்பு நழுவப் பார்த்தது. உயர் கல்வி கற்பதற்கான பாடசாலை வசதிகளும் அங்கு இருக்கவில்லை. ஆனால் உவைஸின் தந்தையாருக்கு மகனைப் படிப்பிக்க வேண்டுமென்று ஆசை இருந்தது. கொழும்புக்கு படிப்பிக்க அனுப்புவதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை.
மிக சிரமத்துக்கு மத்தியில் சரிக்காலிமுல்லையில் உள்ள ஆங்கில மொழிப் பாடசாலையான தக்ஷலா வித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டார். அந்தக் கட்டணம் செலுத்தும் பாடசாலையில் பல சவால்களுக்கு மத்தியில் கல்வியைத் தொடர்ந்து சிரேஷ்ட தராதரப் பரீட்சையிலும் சித்தியடைந்தார். பாடசாலையில் தமிழை ஒரு பாடமாகக் கற்காத உவைஸ் பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சைக்காக தமிழை சுயமாகக் கற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இரண்டாவது முறையே பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவர் அங்கு தமிழையும் சிங்களத்தையும் பொருளியலையும் கற்றார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலாநந்தரின் வழிகாட்டலில் தனது கலைமாணிப் படிப்பைப் பூர்த்தி செய்தார். அக்காலகட்டத்தில் தமிழ் கலைமாணி பயின்ற ஒரே மாணவர் உவைஸ் ஆவார். அப்போது உவைஸின் பொருளாதார சூழ்நிலைமை காரணமாக அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸின் கல்விச் சகாய நிதியோடு அவர் தனது பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் உதவி விரிவுரையாளராக இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றினார். அக்காலகட்டத்திலே அவர் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றித் தேடத் தொடங்கினார். அதனையே தனது முதுமாணிக் கற்கைக்கும் தேர்வு செய்தார். அவரது இப்பணிக்கு தூண்டுகோலாக பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் விளங்கினர்.
‘முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு’ என்ற தலைப்பில் உவைஸ் தனது முதுமாணிப் பட்டத்தை மேற்கொண்டார். பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றிய அவர் 1953இல் இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்டதும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆசிரியராக சேர்ந்து கொண்டார். அக்காலத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் வித்தியோதய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் ‘தற்கால கீழைத்தேய மொழித் துறையின் தலைவராக கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் இலங்கை வானொலியிலும் பத்திரிகைகளிலும் இஸ்லாமியத் தமிழிலக்கியம் குறித்து பேசியும் எழுதியும் வந்தார். இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடுகளில் பங்குபற்றினார். இலங்கை வானொலியில் அவர் உரையாற்றியவை பின்னர் ‘வழியும் மொழியும்’, ‘உமறுப் புலவர் ஓர் ஆலிமா’ ஆகிய நூல்களாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் பெற்ற உவைஸ் சிங்கள – தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபாடு காட்டினார். மாட்டின் விக்கிரமசிங்கவின் ‘கம்பெரலிய’ என்ற சிங்கள நாவலை தமிழில் ‘கிராமப் பிறழ்வு’ என மொழிபெயர்த்து வெளியிட்டார். 1964இல் அதனை சாகித்ய மண்டலய வெளியிட்டது. உத்தியோக மொழித் திணைக்களத்தின் மூலம் பல தமிழ் -சிங்கள நூல்களை மொழிபெயர்த்து வழங்கினார்.
கலாநிதி ஐ.ஏ.எஸ்.வீரவர்தன (பொருளியல்துறை முதுநிலை விரிவுரையாளர்) எழுதிய ‘இலங்கையின் பொருளாதார முறை’ என்ற நூலை சிங்களத்திலிருந்து மொழிபெயர்த்தார். சி.என்.தேவராஜன் எழுதிய தமிழ் நூல் ஒன்றை ‘வாணிஜ அங்க கணிதய’ என சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பேராசிரியர் எப்.ஆர்.ஜயசூரியவின் ‘ஆர்திக விக்கிரகய’ என்ற நூலையும் ‘பொருளியல் பாகுபாடு’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இதேபோல ஆங்கிலத்தில் இருந்தும் தமிழில் இருந்தும் இஸ்லாமிய நூல்கள் பலவற்றை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தார்.
உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாது கொழும்பில் அதன் நான்காவது மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடாத்தி முடித்தார். அப்போது அவர் முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் என்ற ஆய்வேட்டைச் சமர்ப்பித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்காக அவர் ஆற்றிய தொண்டு அவரை கடல் கடந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக அழைத்துச் சென்றது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்கென்று இருக்கை அமைத்து அதன் முதன்மைத் தமிழ் பேராசிரியராக பேராசிரியர் உவைஸ் அவர்களை இருத்தியது. இந்நிகழ்வு 1979 ஒக்டோபர் 15இல் இடம்பெற்றது. இதன்பின்னர் இஸ்லாமியத் தமிழிலக்கியமே அவர் மூச்சானது. தொடர்ந்து அப்பணியில் ஈடுபட்டார். குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் வழங்கும் அரபுச் சொற்களுக்கென ‘அரபுத்தமிழ் அகராதி’ ஒன்றை வெளியிட்டார். இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றினைக் கூறும் ஆறு தொகுதிகளை வெளியிட முனைந்தார். இப்பணிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்புத்துறை மேற்கொண்டது. இப்பணிகளில் பேராசிரியர் பீ.எம்.அஜ்மல்கான் அவருக்கு உதவியாக இருந்தார்.
கி.பி.1700 வரையிலான இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு, காப்பிய வரலாறு, சிற்றிலக்கிய வரலாறு, இஸ்லாமிய ஞான இலக்கியங்கள், அரபுத் தமிழ் இலக்கியம், பழங்கால வசனநடையும் தற்காலக் கவிதையும் முதலியன முறையே ஆறு தொகுதிகளாக வர திட்டமிடப்பட்டது. இதில் அவர் வாழும் போதே நான்கு தொகுதிகள் வெளிவந்தன.
இத்தகு வியத்தகு பணிகளை ஆற்றிய உவைஸ் அவர்களை 1992இல் இலங்கை அரசு தேசிய வீரர் தினத்தில் தேசிய விருது வழங்கி கௌரவித்தது. அவர் இலங்கை நாட்டுக்கும் மொழிக்கும் கலாசாரத்துக்கும் சமூகத்துக்கும் அரிய பணிகளை ஆற்றினார். முஸ்லிம்களின் ஆற்றல் மிக்க இலக்கியப் பணிகளை – முஸ்லிம்களின் பண்பாட்டில் எழுந்த இலக்கியப் பணிகளை தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். தமிழினதும் சிங்களத்தினதும் அறிவுத்துறையை இரு மொழிகளுக்கும் பெயர்ப்புச் செய்வதில் அக்கறை செலுத்தினார். எல்லா சமூகத்துக்கும் பயனுள்ள மனிதராக அவர் வாழ்ந்தார்.
பேராசிரியரின் குடும்ப வாழ்வு மிக்க மகிழ்ச்சிகரமானது. அவர் பேருவளை சீனன்கோட்டை செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சித்தி பாத்துமாவை மணமுடித்து ஐந்து பிள்ளைகளை பேறாகப் பெற்றார். அதில் பாத்திமா நிலுபர் என்ற பெண்ணையும் முஹம்மது அஹ்ஸன், முஹம்மது அஜ்மல் இஷ்பஹானி, முஹம்மது அஹ்கம் சப்ரி, முஹம்மது அர்ஷத் யுஸ்ரி ஆகிய ஆண் பிள்ளைகளையும் பெற்றார். முறையே இரண்டாவது பிள்ளையே பெண் பிள்ளையாகும். அவரது பிள்ளைகள் கொழும்பின் தலைசிறந்த கல்லூரிகளில் கல்வி கற்றனர். ஆனால் அவர்கள் கல்வித்துறையினைத் தொடராது வியாபாரத் துறையில் பிரசித்தம் பெற்று இன்று பொருளாதாரத்தில் மிக உயர்ந்தும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் திகழ்கின்றனர். ‘அவர் இனிய பண்பும் இரக்க சுபாவமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மார்க்கப்பற்றும் மிக்கவர்’ என அவரது நண்பர் பேராசிரியர் தில்லைநாதன் குறிப்பிடுவார். அத்தகைய மகானின் இழப்பு கல்விச் சமூகத்துக்கு மாத்திரமன்றி மானிடத்தை நேசிக்கும் அனைவருக்கும் பேரிழப்பாகவே அமைந்தது.
அவரது மரியாதையை உணர்ந்த அவரது பிள்ளைகள் அவரை என்றும் கௌரவப்படுத்தி வருகின்றனர். அவர் மறைந்தவுடன் ‘மர்கஸில்’ இருந்த அவரது இஸ்லாமியத் தமிழிலக்கிய நூலகத்தை அப்போதைய அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் துணையோடு தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். 2017இல் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையோடு இணைந்து அவர் நினைவாக வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தரங்கமொன்றை ஒழுங்கு செய்தனர். இன்று அவரது நூற்றாண்டு நிறைவை அதே பல்கலைக்கழகத்தோடு இணைந்து கொண்டாடுகின்றனர். அந்நிகழ்வில் அவரை கௌரவிக்கும் முகமாக இந்நாட்டின் பிரதம மந்திரி கலந்து கொள்வதோடு அவரது நினைவு முத்திரை ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘கல்விக்கு உதவி செய்தவர் உலகில் மறைந்து விடுவதில்லை’ என்பதற்கு பேராசிரியர் உவைஸ் அவர்கள் மிகப்பெரும் உதாரணம். இஸ்லாமியத் தமிழிலக்கியம் இருக்கும் வரை உவைஸ் என்றும் நம்மோடு வாழ்வார். பல்பண்பாடும் பல்மொழியும் இணைந்த உறவுகள் வாழும் வரை உவைஸ் அதற்கு நமக்கு வழிகாட்டியாவார். பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் நாமம் என்றும் வாழ்க!- Vidivelli