(தலைமன்னார் நிருபர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் பிரதேச சபையின் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியுள்ளது.
மன்னார் பிரதேச சபை அ.இ.ம.கா. தவிசாளர் முஜாஹிர் சமர்ப்பித்த 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரு தடவைகளும் தோல்வியடைந்ததை அடுத்து ஏற்பட்ட தவிசாளர் வெற்றிடத்திற்கான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போது, அனைத்து கட்சிகளினது ஒத்துழைப்புடன் மு.கா. உறுப்பினர் எம்.ஐ.எம்.இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போது 21 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தேர்தல் விதிமுறைகளை தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து தேர்தலில் நிற்பவர்களின் பெயர்களை முன்மொழிய வேண்டிக் கொண்டார்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஐ.எம். இஸ்ஸதீனை அதே கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஜே.இன்சாப் தவிசாளராக முன்மொழிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் வழிமொழிந்தார். அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஐ.எம். இஸ்ஸதீனை தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்துள்ளனர்.
புதிய தவிசாளர் கடந்த காலங்களில் உப தவிசாளராகவும் பதவிவகித்தார். ஏற்கனவே, மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியின் பணிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்த வேளையில்; மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கான தேர்வு 29.09.2021 அன்று இடம்பெற்றது. இதன்போது, எம்.ஐ.எம். இஸ்ஸதீனும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜே.ஈ.கொன்சன் குலாஸும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் ஆகியோர் தவிசாளருக்கான போட்டியில் இறங்கியிருந்தனர்.
இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.எம். இஸ்ஸதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்புடன் அதிகபடியான வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இருந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எஸ்.எச்.எம்.முஜாஹிர் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய மீண்டும் தவிசாளராக பதவியேற்றதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தனது புதிய பொறுப்பில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இவ்வாறன நிலையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.ஐ.எம். இஸ்ஸதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.-Vidivelli