(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவரான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்ட மா அதிபரின் இணக்கப்பாட்டுடன், அவருக்கு நேற்று முன்தினம் (11) கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே பிணையளித்து உத்தரவிட்டார்.
சட்ட மா அதிபரின் இணக்கப்பாடு, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் கையெழுத்துடன் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், நெருங்கிய உறவினர்கள் மூவரின் சரீரப் பிணையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்பட்டார்.
இவ் வழக்கில் ஹஜ்ஜுல் அக்பர் சார்பில், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையிலான குழுவினர் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர். இவ்வழக்கின் இறுதி முன்வைப்புகள் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்றிருந்தன.
இதன்போது அல்ஹசனாத் சஞ்சிகையில் ஆக்கங்களை எழுதியதை முன்வைத்து ஹஜ்ஜுல் அக்பர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி சுஹைர், இது நாட்டின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் சுட்டிக்காட்டினார்.
தனது கருத்தை வெளிப்படுத்தியமைக்காக ஒருவரை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பயங்கரவாத தடைச் சட்டமா? கருத்துச் சுதந்திரமா? என்று நோக்கும் போது கருத்துச் சுதந்திரமே அரசியலமைப்பின் படி உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளது. அதனடிப்படையில், மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் வெளியிடப்பட்ட அல் ஹசனாத் சஞ்சிகையில், தனது கருத்துக்களை முன்வைத்தமையை அடிப்படையாகக் கொண்டு ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்யப்பட்டமையானது அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந் நிலையிலேயே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை பிணையில் விடுவிப்பதற்கு தாம் ஆட்சேபனையை முன்வைக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மன்றுக்கு அறிவித்தது.
எனினும் கடந்த 2021 டிசம்பர் 17 ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதி நாளாகும். அதனைத் தொடர்ந்து நடவடிக்கைகளுக்கு வருட இறுதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது, இந் நிலையிலேயே மீண்டும் புதிய ஆண்டில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வழக்கு நேற்று முன்தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2019 ஆகஸ்ட் 25 ஆம் திகதி சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை கைது செய்திருந்தது. ஏப்ரல் 21 தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை, அடிப்படைவாத குழுக்களுக்கு இலங்கைக்குள் மீள பயங்கரவாதத்தை உருவாக்க அதனை கட்டியெழுப்ப உதவியமை மற்றும் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை முதல் தடவையாக கைது செய்திருந்தனர்.
முதல் தடவை கைது செய்யப்பட்டு சி.சி.டி.யினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை விசாரித்த போது, அவ்விசாரணைகளில் திருப்தி இல்லாமல், அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அங்கும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னரேயே, ரி.ஐ.டி.யினரின் கோரிக்கைக்கு அமையவே அவர் தடுப்புக் காவலில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும் கடந்த 2021 மே 12 ஆம் திகதி அவர் மீளவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அது முதல் தொடர்ந்து தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந் நிலையில் அவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம், ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே சட்ட மா அதிபரின் இணக்கத்துடன் நேற்று முன்தினம் அவருக்கு பிணையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli