பாராளுமன்றில் இனிவரும் காலங்களில்சீர்கேடுகளுக்கு இடமளியோம்

அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி  என்கிறார் சபாநாயகர் கரு

0 822

மறைக்கல்வியினூடாக சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் நன்னடத்தைகளை போன்று நாட்டின் மீயுயர் நிறுவனமாகிய பாராளுமன்றினூடாகவும் நன்னடத்தைகளை சிறுவர்கள் கற்றுக்கொள்ள கூடிய சூழல் விரைவில் ஏற்படுத்தப்படும். எனவே பாராளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றது போன்ற சீர்கேடாக செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சகல நடவடிக்கைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி  வைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவலர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப் பரிசில்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பாராளுமன்ற நலன்புரி சங்கத்தினரால் இரண்டாவது முறையாகவும் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்நிகழ்வில் பல பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இங்கு வந்து மாணவர்களின் பலரின் எண்ணப்போக்கு கடந்த சில நாட்களாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடம்பெற்ற பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறிய நடவடிக்கைகள் குறித்து காணப்படுகின்றது.

இன்றைய சிறுவர்கள் மிகவும் தெளிவானவர்கள். மீயுயர் நிறுவனமாகிய பாராளுமன்றில் இடம்பெற்ற இச்செயற்பாடுகளினால் இச்சிறுவர்கள் எம்மை கீழ்த்தரமாக நினைக்கவும் வாய்ப்புள்ளது. இவர்கள் மாத்திரமல்ல பலர் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சித்ததும், எம்மை புறமொதுக்கிய நடவடிக்கைகளையும் காணக்கிடைத்தது.

ஆனாலும், சார்க் அமைப்பும், சர்வதேசமும் ஏற்றுக்கொண்ட கெளரவமான பாராளுமன்றமாகவே இலங்கை காணப்படுகின்றது. இந்நிலைமையை நாம் தொடர்ந்தும் பாதுகாப்போம். எனவே கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அநாகரிகமான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்.

மறைக்கல்வியின் மூலம் விகாரைகளிலும் ஆலயங்களிலும் நன்னடத்தையை கற்றுக்கொள்ளும் இம்மாணவர்கள், பாராளுமன்றின் அமர்வுகளின் மூலமும் பாராளுமன்ற நடவடிக்கைகள் வாயிலாகவும் நன்னடத்தைக்குரிய செயற்பாடுகளை அறிந்துகொள்ள கூடிய நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.