உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடாத்தப்பட்டு ஆயிரம் நாட்கள்
கொழும்பு மறை மாவட்ட பேராயர் தலைமையில் ராகமையில் நினைவு அஞ்சலி
(எம்.எம்.சில்வெஸ்டர், ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டு 1000 ஆவது நாள் நாளைய தினம் (14) ராகம- தேவத்தை தேசிய பெசிலிக்காவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அன்றைய தினம், கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையில் சகல மறை மாவட்ட ஆயர்கள் மற்றும் துணை ஆயர்களின் பங்குபற்றுதலுடன் விசேட ஜெப வழிபாடு ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று 1000 நாட்களாகின்றது. எனினும், பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதான நீதி இதுவரை வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாகவும் தற்போது நாட்டில் மக்கள் எதிர்கொள்கின்ற சமூக, பொருளாதார நெருக்கடிகள் குறித்து கடவுளிடம் வேண்டிக்கொள்வதற்கான தேசிய மட்டத்திலான விசேட ஜெப வழிபாடொன்றை நடத்த இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.
2022 ஜனவரி 14 ஆம் திகதி (நாளை) காலை 10 மணிக்கு ராகம- தேவத்தை தேசிய பெசிலிக்காவிலுள்ள இலங்கை மாதா கெபியிலிருந்து பெசிலிக்கா வரை அருகில் ஆயர்கள், குருவானவர்கள், அருட் சகோதரர்கள் , அருட் சகோதரிகள் என மக்கள் அனைவரும் ஜெபமாலை மற்றும் ஜெபங்கள் உச்சரித்து பவனி செல்வார்கள்.
அதன் பின்னர், தேவத்தை பெசிலிக்காவின் திறந்தவெளியில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட நாட்டின் சகல மறைமாவட்ட ஆயர்களின் தலைமையில் விசேட செப வழிபாடு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், இந்த செபவழிபாடு நண்பகல் 12 மணியளவில் நிறைவடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நினைவு ஜெப நிகழ்வுகளில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலினால் உயிர்நீத்தவர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் அத்தாக்குதலில் காயங்களுக்குள்ளாகி மாற்றுத் திறனாளிகளாகியுள்ளவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நினைவு அஞ்சலி நடைபெறும் ராகம பெசிலிகா ஆலயத்தைச் சூழ பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 3 காவல் துறையினர், 39 வெளிநாட்டவர்கள் உட்பட 253 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர்.
கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ்தவ ஆலயங்களிலும் சங்கிரிலா, சினமன் கிரேண்ட் மற்றும் கிங்ஸ்பெரி உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli