2022 பெரும் நெருக்கடிகளின் வருடம்!

0 451

எம்.எல்.எம்.மன்சூர்

சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட வர­லாற்றில் ஒரு போதும் இல்­லாத விதத்தில் மூன்று முக்­கி­ய­மான நெருக்­க­டி­க­ளுக்குள் சிக்­குண்ட நிலையில், கொந்­த­ளிப்­புக்­களும், பதற்­றங்­களும் தீவி­ர­ம­டைந்து வரும் ஒரு பின்­பு­லத்தில் இலங்கை 2022 புத்­தாண்டை சந்­தித்துள்ளது.
‘வர­லாற்­றி­லி­ருந்து பாடங்­களை படிக்­கா­த­வர்கள், அந்தத் தவ­றுக்கு கடு­மை­யான ஒரு விலையை செலுத்­தியே ஆக வேண்டும்’ என்­பது நியதி. பல்­வேறு இனங்­க­ளையும், மதங்­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்லும் ஓர் ஐக்­கிய தேச­மாக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கெனக் கிடைத்த பெருந்­தொ­கை­யான வாய்ப்­புக்­களை ஆட்­சி­யா­ளர்கள் தவற விட்­டதன் பலனை இன்று எல்­லோரும் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

1958 இல் பண்­டா­ர­நா­யக்க அந்த வாய்ப்பை தவற விட்டார். சிங்­கள மக்­களின் அமோக ஆத­ர­வுடன் மஹிந்த ராஜ­பக்ச 2010 இல் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட பொழுது, இட­து­சாரி வேட்­பாளர் சிரி­துங்க ஜய­சூ­ரிய அவரைப் பார்த்து ‘ஒரு வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க வாய்ப்பு உங்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கின்­றது. அதனைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளுங்கள்’ என்ற வேண்­டு­கோளை விடுத்­தி­ருந்தார். ஆனால், அவர் அதனை காது கொடுத்துக் கேட்­க­வே­யில்லை.

2010–2015 ஆட்சி எந்தத் திசையில் பய­ணிக்க வேண்­டு­மென மக்கள் எதிர்­பார்த்­தார்­களோ அதற்கு மாறான திசையில் அதனைப் பய­ணிக்கச் செய்து, முழு நாட்­டையும் நெருக்­க­டிக்குள் தள்ளி விட்டு 2015 இல் அவர் வெளி­யே­றினார்.

இதில் பிரே­ம­தாச மட்டும் ஓர­ள­வுக்கு விதி­வி­லக்­கா­னவர் என்று சொல்­லலாம். தனது குறு­கிய பதவிக் காலத்தின் போது, அவர் எடுத்த ஒரு சில துணி­க­ர­மான முடி­வுகள் – தமிழ் மொழிக்கு அரச கரு­ம­மொழி அந்­தஸ்து, வாகனத் தக­டு­களில் சிங்­கள ‘ஸ்ரீ’ எழுத்தை நீக்கி ‘––’ ஐ அறி­முகம் செய்து வைத்­தமை மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் சிறு கட்­சி­க­ளுக்கு அனு­கூ­ல­ம­ளிக்கும் விதத்தில் வெட்டுப் புள்­ளியை 5% ஆக குறைத்­தமை போன்ற முடி­வுகள் – இன்­றைய சூழ்­நி­லையில் நினைத்துப் பார்க்கக் கூட முடி­யா­தவை. மகா சங்­கத்­தி­ன­ருடன் மிக நெருக்­க­மான உற­வு­களை பரா­ம­ரித்து வந்த அதே வேளையில், அவரால் வர­லாற்று மைல்­கற்­க­ளாக கரு­தப்­படக் கூடிய அத்­த­கைய முடி­வு­களை மேற்­கொள்ள முடிந்­தது (அப்­பாவின் அந்தத் துணிச்­சலில் 10% கூட மக­னிடம் இருந்து வர­வில்லை என்­பதை புறம்­பாக சொல்லத் தேவை­யில்லை.)

மீண்டும் ஒரு முறை நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வாய்ப்பு 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்­ச­வுக்குக் கிடைத்­தது. சிங்­கள மக்கள் திரண்­டெ­ழுந்து, தமது மாபெரும் தலை­வ­ராக அவரைத் தெரிவு செய்­தி­ருந்­தார்கள். ஆனால், வர­லாற்றுப் புகழ்­மிக்க ருவன்­வெலி சாய வளா­கத்தில் பதவிப் பிர­மாணம் செய்து கொண்ட பொழுது, தான் சிங்­கள பௌத்த மக்­களின் ஜனா­தி­பதி என்ற விட­யத்தை எவ்­வித தயக்­கமோ, கூச்­சமோ இல்­லாத விதத்தில் அவர் சொல்லிக் கொண்டார்.

‘ஜனா­தி­பதி ருவன்­வெ­லி­சா­யவில் பதவிப் பிர­மாணம் செய்யும் பொழுது, தான் சிங்­கள மக்­களின் ஜனா­தி­பதி என்று கூறி­யதன் மூலம் நாட்டில் வாழ்ந்து வரும் பல்­வேறு இனங்­க­ளையும் சேர்ந்த மக்­க­ளுக்கு மத்­தியில் வெறுப்­பையும், குரோ­தத்­தையும் விதைத்தார். கல­கொட அத்தே ஞான­சார தேரர் போன்ற ஒரு­வரை ஒரே நாடு – ஒரே சட்டம் செய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மனம் செய்­ததன் மூலம் மீண்டும் ஒரு முறை சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் அவ­நம்­பிக்­கை­யையும், அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்’ என்று கடந்த வாரம் ஒரு கடு­மை­யான விமர்­ச­னத்தை முன்­வைத்­தி­ருந்தார் ஜனா­தி­ப­தியின் முன்­னைய தீவிர ஆத­ர­வா­ளர்­களில் ஒரு­வ­ரான விஜ­ய­தாச ராஜ­பக்ச.

தென்­னா­சி­யாவின் ஏனைய நாடு­களும், அதே போல உலகின் பல நாடு­களும் கொவிட் பெருந்­தொற்­றை­ய­டுத்து பொது­வாக பொரு­ளா­தாரச் சரிவு தொடர்­பான பிரச்­சி­னை­களை சந்­தித்து வரு­கின்­றன. ஆனால், இப்­பொ­ழுது இலங்கை ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டி­யையும், அர­சியல் நெருக்­க­டி­யையும், சமூக நெருக்­க­டி­யையும் எதிர்­கொண்டு வரு­கின்­றது. இந்த நெருக்­க­டிகள் ஒன்­றை­யொன்று போஷித்து, ஒன்­றுக்­கொன்று பக்­க­ப­ல­மாக இருந்து வரு­பவை. ஆகவே, இவற்றை தீர்த்து வைப்­ப­தற்கு ஒற்றைப் படை­யான தீர்­வுகள் எவையும் இருந்து வர­வில்லை.

இப்­பொ­ழுது அரங்­கேறி வரும் மற்­றொரு கூத்து அர­சாங்­கமே எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட்டு வரும் வினோதம். மக்கள் உண்­மை­யி­லேயே பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளையும், விலை­வாசி உயர்வு தொடர்­பான நெருக்­க­டி­க­ளையும் எதிர்­கொண்டு வரு­கின்­றார்கள் என்­ப­தனை அமைச்­சர்­களே ஏற்றுக் கொள்­கி­றார்கள். ‘இந்த அர­சாங்கம் தோல்வி கண்­டுள்­ளது’ என்று ராஜாங்க அமைச்­சர்கள் சொல்­கி­றார்கள். அமைச்­ச­ரவை முடி­வு­க­ளுக்கு எதி­ராக அமைச்­சர்­களே வழக்குத் தொடுத்­தி­ருக்­கின்­றார்கள். எதை­யுமே புரிந்து கொள்ள முடி­யாத நிலையில் தலை மயிரைப் பிய்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் மக்கள்.

அடுத்த முக்­கி­ய­மான விடயம் 2022 இல் நிச்­ச­ய­மாக ஓர் ஆட்சி மாற்றம் ஏற்­பட முடியும் என்ற விதத்தில் பர­வ­லாக நிலவி வரும் எதிர்­பார்ப்­புக்கள். குறிப்­பாக, சிறு­பான்மை மக்­க­ளுக்கு மத்­தியில் இந்த எதிர்­பார்ப்பு உச்ச கட்­டத்தில் இருந்து வரு­வ­துடன், அது அவர்­க­ளுக்கு ஒரு வித­மான புள­காங்­கித உணர்­வையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

ஆனால், வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட முடியும் என்ற எதிர்­பார்ப்பு ஒரு ‘Wishful Thinking’ மட்டும் தான். அதா­வது, ஒரு காரியம் நடக்க வேண்­டு­மென உள்­ளூர எதிர்­பார்த்துக் கொண்­டி­ருப்­ப­வர்கள், யதார்த்­தத்தில் அது நடந்து விட்­டதைப் போல நினைத்து சந்­தோ­சப்­படும் நிலை­யையே ‘Wishful Thinking’ என்று சொல்­கி­றார்கள்.

ராஜ­பக்­சாக்­களின் வர­லாற்­றையும், கடு­மை­யான நெருக்­க­டி­களை அவர்கள் கையாளும் விதத்­தையும் உன்­னிப்­பாக நோக்கும் பொழுது, இந்த ஆண்டில் அப்­ப­டி­யான ஓர் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு அறவே வாய்ப்­பில்லை என்றே கூற வேண்டும். ஆட்­சியை யாரோ ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைத்து விட்டுச் செல்லும் அள­வுக்கு அர­சியல் நுணுக்கம் அறி­யா­த­வர்கள் அல்ல அவர்கள். அர­சியல் யாப்பின் பிர­காரம் கோட்­டா­பய ராஜ­பக்ச 2024 நவம்பர் மாதம் வரையில் ஜனா­தி­பதி பத­வியை வகிக்க முடியும். அதே போல, மஹிந்த ராஜ­பக்ச மற்றும் அவ­ரு­டைய அமைச்­ச­ரவை 2025 ஆகஸ்ட் மாதம் வரையில் செயற்­பட முடியும். அதற்­கான பணிப்­பாணை அவர்­க­ளிடம் இருக்­கின்­றது.

2022 இல் நிச்­ச­ய­மாக ஓர் ஆட்சி மாற்றம் ஏற்­படும் என்று சொல்­ப­வர்கள் முன்­வைக்கும் ஒரு வாதம் ‘அர­சாங்­கத்தை எல்­லோரும் எதிர்க்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள். கோட்­டா­ப­யவை தீவி­ர­மாக ஆத­ரித்த பிக்­கு­களே இப்­பொ­ழுது கடு­மை­யாக அவரை விமர்­சித்து வரு­கி­றார்கள்’ என்­பது. மேலோட்­ட­மாக பார்த்தால் இது செல்­லு­ப­டி­யாகும் ஒரு வாதம் போல் தான் தெரி­கி­றது.

முதலில், இந்த அர­சாங்­கத்தை எதிர்த்து வரும் முக்­கிய தரப்­புக்கள் யார் என்று பார்ப்போம்:

-பிர­தான எதிர்க்­கட்­சி­யான SJB யின் அர­சாங்க எதிர்ப்பு முழுக்க முழுக்க ஒரு சந்­தர்ப்­ப­வாத எதிர்ப்­பா­கவே உள்­ளது. அதா­வது, அர­சாங்க கட்சி – எதிர்க்­கட்சி என்ற விதத்­தி­லான மாமூல் எதிர்ப்பு. சஜித் பிர­மே­தாச அர­சாங்­கத்தின் பல­வீ­னங்­க­ளையும், தோல்­வி­க­ளையும் பட்­டி­ய­லிட்டுக் கொண்டே போகிறார். ஆனால், இன்­றைய நெருக்­க­டியை தீர்த்து வைப்­ப­தற்கு தன்­னிடம் இருக்கும் மாற்று வழிகள் எவை என்­பது குறித்து அவ­ருக்கே தெளி­வில்லை. ஒரு விதத்தில் இன்­றைய நெருக்­க­டியின் வேர்கள் 1977 இல் ஜே ஆர் ஜய­வர்­தன அதி­ர­டி­யாக பொரு­ளா­தா­ரத்தை திறந்து விட்ட நிகழ்ச்­சி­நிரல் வரையில் பின்­னோக்கிச் செல்­பவை. தென்­னா­சி­யாவில் முதன் முத­லாக பொரு­ளா­தா­ரத்தை வெளி­யு­ல­கிற்கு திறந்து விட்ட நாடு இலங்கை. அதற்கு 17 ஆண்­டு­க­ளுக்குப் பின்­ன­ரேயே 1991 இல் இந்­தியா திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையை அமுல் செய்­தது.

1977க்குப் பின்னர் நிகழ்ந்த இந்த முக்­கி­ய­மான மாற்­றத்­தை­ய­டுத்து கடந்த 40 ஆண்டு கால­மாக கிட்­டத்­தட்ட இரண்டு தலை­மு­றை­யினர் திறந்த பொரு­ளா­தார கொள்கை அமுல் செய்­யப்­பட்ட ஒரு சூழ்­நி­லையில் வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றார்கள். அந்தக் கட்­ட­மைப்­புக்கு தம்மை பரிச்­ச­யப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இலங்­கையில் தீவி­ர­மாக அதி­க­ரித்து வரும் மிகை நுகர்வுக் கலா­சா­ரத்தில் முற்று முழு­தாக தம்மை அமிழ்த்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

வளை­குடா நாடு­க­ளி­லி­ருந்து எரி­பொருள், ஜப்­பா­னி­லி­ருந்து பாவித்த வாக­னங்கள், நியூ­சி­லாந்­தி­லி­ருந்து பால் மா, இந்­தி­யா­வி­லி­ருந்து முச்­சக்­கர வண்­டிகள், பருப்பு மற்றும் இன்­ன­பிற சாமான்கள், பாகிஸ்­தா­னி­லி­ருந்து வெங்­காயம் என்ற ஒரு நடை­மு­றைக்கு 40 ஆண்டு கால­மாக பழகிப் போயி­ருக்­கி­றது இலங்கைச் சமூகம். அதற்கு வெளியில் நின்று அவர்­களால் சிந்­தித்துப் பார்க்­கவே முடி­யாது. தேசிய பொரு­ளா­தா­ர­மொன்றை வலு­வாகக் கட்­டி­யெ­ழுப்பி, இந்த நச்சுச் சூழ­லி­ருந்து படிப்­ப­டி­யாக நாங்கள் வெளி­யேற வேண்­டு­மென்ற கோரிக்­கையை 1980 களுக்குப் பிறகு எந்­த­வொரு தலை­வரும் முன்­வைத்­தி­ருக்­க­வில்லை.

ஆடம்­பரப் பொருட்­க­ளையும் உள்­ள­டக்­கிய விதத்தில் கட்­டற்ற நுகர்பொருள் இறக்­கு­ம­திகள், 24 மணி­நேர மின்­சாரம் மற்றும் ஏனைய சௌக­ரி­யங்கள் என்­ப­வற்றை வாழ்க்­கையின் ஆதார அம்­சங்­க­ளாக ஆக்கிக் கொண்­டி­ருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் தலை­மு­றை­யி­ன­ருக்கு தான் ஒரு சுய­சார்பு பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்ற வேண்­டு­கோளை இப்­பொ­ழுது சந்­தைப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது. அது ஒரு லேசான காரி­ய­மல்ல.

விமல் வீர­வங்­ச உள்­ளிட்ட சிங்­கள தேசி­ய­வா­திகள் எதிர்­கொண்­டி­ருக்கும் திரி­சங்கு நிலை இந்தப் பின்­பு­லத்­தி­லி­ருந்தே தோன்­று­கின்­றது. அவர்கள் சிங்­கள தேசி­ய­வாதம் என்ற பெரு­மித உணர்வை புதிய தலை­மு­றை­யி­ன­ருக்கு ஊட்டும் அதே வேளையில், நுகர்வு கலா­சா­ரத்­தி­லி­ருந்தும், மித மிஞ்­சிய அள­வி­லான இறக்­கு­ம­தி­களில் தங்­கி­யி­ருக்கும் நிலை­யி­லி­ருந்தும் அவர்­களை வெளியில் கொண்டு வர வேண்­டிய சவாலை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இங்­குள்ள முரண்­பாடு இது தான் – ஒரு புறத்தில் கட்­டற்ற வர்த்­த­கத்தை ஊக்­கு­விக்கும் நவ லிப­ரல்­வாத பொரு­ளா­தா­ரத்­திற்கு முழு­மை­யான ஆத­ரவு. மறு­புறம், தேசிய பொரு­ளா­தா­ரத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் வணி­கர்­களின் வியா­பா­ரங்­களை முடக்க வேண்­டு­மென்ற மறை­முக அஜென்டா. துற­வ­ரத்தை உச்ச மட்­டத்தில் போதிக்கும் சமயம் ‘ஆசை­களை ஒழி’ என்­கி­றது. மறு­பு­றத்தில், தம்மை துற­விகள் என்று சொல்லிக் கொள்­ப­வர்கள் மூன்­றரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான சொகுசு வாக­னங்­களில் பவனி வரும் எதிர்­முரண்.

ஜேவிபி யினாலும் கூட பாரி­ய­ளவில் மக்கள் ஆத­ரவை அணி­தி­ரட்ட முடி­யா­தி­ருப்­ப­தற்­கான இடை­யூறு இது­வா­கவே உள்­ளது. நாட்டு மக்­களில் 80% க்கு மேற்­பட்­ட­வர்கள் நவ லிப­ரல்­வாத பொரு­ளா­தா­ரத்­திற்கு தம்மை ஒப்புக் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள். அந்தப் பின்­ன­ணியில் தான் இறக்­கு­ம­திகள் தொடர்­பாக வரை­ய­றைகள் அறி­முகம் செய்து வைக்­கப்­படும் பொழுது, சந்­தையில் பொருட்­க­ளுக்குத் தட்­டுப்­பாடு ஏற்­படும் பொழுது அர­சாங்கம் இந்த அள­வுக்கு எதிர்ப்­ப­லை­களை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆகவே, SLFP/UNP/SJB/SLPP ஆகிய கட்­சிகள் அனைத்தும் முக்­கிய ஆத­ரவுத் தரப்­புக்­க­ளாக இருந்து வந்­தி­ருக்கும் இந்தப் பொரு­ளா­தார முறை எடுத்து வந்­தி­ருக்கும் திரிபு நிலை­களை விமர்­சிப்­ப­தற்கோ, குறை கூறு­வ­தற்கோ இரு பிர­தான அணி­க­ளுக்கும் எந்த வித­மான தார்­மீக உரி­மையும் கிடை­யாது.

ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு அடுத்த ஆண்டில் சஜித் பிரே­ம­தா­சவின் கையில் இலங்­கையை ஒப்­ப­டைத்­தாலும் கூட, அவரால் பெரி­தாக எத­னையும் செய்ய முடி­யாது. நிலைமை இருப்­ப­திலும் பார்க்க மோச­ம­டையக் கூடிய வாய்ப்பும் உள்­ளது. ஏனென்றால், தற்­போது அர­சாங்க கட்­சிக்குள் இருக்கும் கார­ணத்­தினால் ஓர­ள­வுக்கு அடக்கி வாசித்து கொண்­டி­ருக்கும் ஒரு சில தீவி­ர­வாத, இன­வாத / மத­வாத கோஷ்­டிகள் எதிர்க்­கட்சித் தரப்­புக்கு போகும் போது தமது செயற்­பா­டு­களை மேலும் துரி­தப்­ப­டுத்த முடியும். அப்­பொ­ழுது பிக்­கு­களின் உண்­ணா­வி­ர­தங்கள், போராட்­டங்கள் போன்­ற­வையும் புதி­தாக முளைக்க முடியும். எந்த விதத்­திலும் சஜித் பிரே­ம­தா­சவால் அத்­த­கைய நிலை­மை­களை கையாள முடி­யாது. அடா­வ­டித்­தனம் செய்யும் பிக்­கு­களை கையாளும் விட­யத்தில் அவர் கொண்­டி­ருக்கும் பல­வீனம் நாட­றிந்­தது.

இரண்­டா­வ­தாக, அர­சாங்­கத்தை கடு­மை­யாக எதிர்த்து வரும் மற்­றொரு தரப்பு ஜேவிபி,- முன்­னணி சோச­லிச கட்சி மற்றும் அவற்­றுடன் சம்­பந்­தப்­பட்ட தொழிற்­சங்­கங்கள். அவர்­க­ளு­டைய எதிர்ப்பு ஒரு விதத்தில் யதார்த்­த­மான நாட்டு நிலை­மையை கருத்தில் கொண்ட ஓர் எதிர்ப்­பாக இருந்து வந்­தாலும் கூட, உட­னடி எதிர்­கா­லத்தில் மக்­க­ளுக்கு மத்­தியில் ஜேவிபி போன்ற ஒரு கட்­சிக்கு பாரி­ய­ள­வி­லான ஒரு வாக்கு வங்கி தோன்றும் என்று சொல்ல முடி­யாது. ஆகக் கூடினால் 3 சத­வீ­தத்­தி­லி­ருந்து 10 சத­வீ­த­மாக தமது வாக்கு வங்­கியை அடுத்த ஆண்­டு­களில் அவர்­களால் அதி­க­ரித்துக் கொள்ள முடியும். அதற்கு அப்பால் போக முடி­யாது.

அநுர குமார திசா­நா­யக்க அபி­மா­னி­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் SJB ஆத­ர­வா­ளர்கள். ஜேவிபி யின் தீவிர ராஜ­பக்ச எதிர்ப்பை தமக்குச் சாத­க­மான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­வர்கள்.

அர­சாங்­கத்தை எதிர்த்து வரும் ஒரு மூன்­றா­வது தரப்பு, அர­சாங்­கத்தின் குறிப்­பாக, கோட்­டா­பய ராஜ­பக்­சவின் தீவிர ஆத­ர­வா­ளர்­களை – சிறு­பான்மை சமூ­கங்­களை புற­மொ­துக்க வேண்டும் என்ற கருத்­தி­யலின் ஆத­ர­வா­ளர்­களை – பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்­றது என்­பது அடுத்த சுவா­ரஸ்யம். இவர்­களில் சிங்­கள தேசி­ய­வா­திகள், அதே போல இன­வாத நிலைப்­பாட்டில் செயற்­பட்டு வரும் முதன்­மை­யான ஒரு சில பிக்­குகள் மற்றும் சில பௌத்த அமைப்­புக்கள் ஆகிய தரப்­புக்கள் உள்­ள­டக்கம். இவர்கள் அர­சாங்­கத்­திற்கு தெரி­வித்து வரும் எதிர்ப்பை பலர் பிழை­யாக புரிந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். அது ஒரு விதத்தில் அவர்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்று வரு­வது ஒரு ‘பங்கு பிரித்துக் கொள்ளும் சண்டை;’ அதற்­கப்பால் எது­வு­மில்லை. தங்­க­ளுக்குச் சேர வேண்­டிய பங்கு கிடைத்­ததும் மீண்டும் அவர்கள் கோட்­டா­ப­ய­வுடன் சேர்ந்து கொள்­வார்கள்.

– இதற்­கான நல்ல உதா­ரணம் விமல் வீர­வங்ச, கம்­மன்­பில, வாசு­தேவ கூட்டு. அவர்­களை பொறுத்­த­வ­ரையில் அர­சி­யலில் வேறு போக்­கி­ட­மில்லை. ராஜ­பக்ச அர­சாங்­கத்­திற்குள் இருந்து தான் அவர்­க­ளு­டைய எல்லா பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்­கான நகர்­வு­க­ளையே இப்­பொ­ழுது அம்­மூ­வரும் முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். எந்­த­வொரு கட்­டத்­திலும் அர­சாங்­கத்­தி­லி­ருந்து அவர்கள் வெளி­யே­று­வார்கள் என்று கருத முடி­யாது. ஏனெனில், வீர­வங்ச, கம்­மன்­பில போன்­ற­வர்கள் இப்­பொ­ழுது தமது ஐம்­ப­துகளின் ஆரம்ப வரு­டங்­களில் இருப்­ப­வர்கள். அவர்­க­ளுக்கு அர­சி­யலில் ஒரு நீண்ட பயணம் இருக்­கி­றது. அதனை குலைத்துக் கொள்ள அவர்கள் விரும்ப மாட்­டார்கள்.

ஆகவே, பலரும் நினைத்துக் கொண்­டி­ருப்­பதை போல அர­சாங்­கத்தை 2022 இல் வீட்­டுக்கு அனுப்­பு­வது சாத்­தி­ய­மில்லை என்றே தெரி­கி­றது. அப்­படி ஒரு கட்டம் வந்தால், அதனைக் கையாள்­வது எப்­படி என்­பது குறித்தும் அவர்கள் இப்­பொ­ழுதே வியூ­கங்­களை வகுத்துக் கொண்­டி­ருப்­பார்கள். தெரண, ஹிரு போன்ற காட்சி ஊட­கங்­களும், சிங்­கள மக்­களால் பர­வ­லான விதத்தில் வாசிக்­கப்­பட்டு வரும் ‘திவ­யின’, ‘அருண’ மற்றும் ‘மவ்­பிம’ போன்ற நாளி­தழ்­களும் இப்­பொ­ழுது ஓர­ள­வுக்கு அர­சாங்க எதிர்ப்புச் செய்­தி­களை மக்­க­ளுக்கு வழங்­கி­னாலும் கூட, அது ஒரு சந்தைப் போட்டி தந்­தி­ர­மாக மட்­டுமே இருக்­கின்­றது. ஆனால், அந்த ஊடக நிறு­வ­னங்­களின் உரி­மை­யா­ளர்­க­ளான பெரு முத­லா­ளி­களின் வணிக நலன்கள் ராஜ­பக்ச அர­சாங்­கத்­துடன் பின்னிப் பிணைந்­தி­ருப்­பவை. ஏற்­க­னவே அர­சாங்­கத்­தி­லி­ருந்து பல­வி­த­மான அனு­ச­ர­ணை­க­ளையும், சலு­கை­க­ளையும் அனுபவித்து வரும் கம்பனிகள் இவை. அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி என்ற ஒரு நிலை வரும் பொழுது, நிச்சயமாக அவர்கள் தமது எஜமானர்களுக்கு பக்கபலமாக இருந்து வருவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதற்கென ஊடக நெறிமுறைகளை எந்த அளவுக்கு தரம் தாழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு தரம் தாழ்த்தவும் தயங்க மாட்டார்கள்.

ஆக மகா சங்கத்தினர், இராணுவம், ஊடகங்கள் மற்றும் சிங்கள பெரு வணிகர்களின் குழுமம் ஆகிய நான்கு அரண்களும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் பக்கபலமாக இருந்து வரும். வீதி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் போன்ற எதிர்ப்புச் செயற்பாடுகள் 2022 இல் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதற்கான அடையாளங்கள் இப்பொழுதே தென்படத் தொடங்கியிருக்கின்றன. ‘இலங்கைக்கு ஒரு இராணுவ ஆட்சி தேவை’ என்ற விதத்தில் அண்மையில் ஞானசார தேரர் முன்வைத்த கோஷம், கள நிலவரம் தொடர்பான ஓர் ஆழமான அலசலின் பின்னர் முக்கியமான ஒரு சிறு சபையில் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய ஒரு முடிவின் பிரதிபலிப்பு என்றே எண்ணத் தோன்றுகின்றது.

எப்படி பார்த்தாலும், கடந்த இரண்டு வருட காலத்தின் போது ராஜபக்ச அரசாங்கம் மிகவும் ஜாக்கிரதையான விதத்தில் மறைத்துக் கொண்டிருந்த அதன் தீவிர வலதுசாரி, இராணுவவாத முகத்தை இந்தப் புதிய ஆண்டில் நிச்சயமாக வெளியில் காட்ட முடியும். இலங்கையின் சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் என்பனவும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கென செயற்பட்டு வருபவர்களும் இந்த ஆண்டில் எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய சவாலாக இதுவே இருந்து வரும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.