ஆங்கிலத்தில்: அலன் கீனன்
(சர்வதேச நெருக்கடிகள் குழுவின்
சிரேஷ்ட ஆலோசகர்)
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
ஜனாதிபதியினால் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் சர்வதேச நெருக்கடிகள் குழு கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம்
நாட்டின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி “ஒரே நாடு ஒரே சட்டம்” என்றவோர் செயலணியை நியமித்தார். அதன் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். இந்நியமனம் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஞானசார தேரர் இலங்கையின் முஸ்லிம்களுக்கெதிரான பிரபல குழுவான பொதுபல சேனா அமைப்பின் செயலாளர். அவர் சமூகங்களுக்கிடையில் பரவலாக இன வன் செயல்களைத் தோற்றுவித்தவர். இவர் 2014 ஜூன் மாதத்திலும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் மிகவும் மோசமான கலவரங்களுக்கு காரணமாக இருந்தவர்.
நீதிமன்றினை அவமதித்த குற்றத்திற்காக 6 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் என்றுகூறிக்கொண்ட சிறிய குழுவொன்றினால் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து குருமார்களின் முஸ்லிம்களுக்கெதிரான உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.
அத்தோடு இலங்கையில் அரசியல் அவதானிகள் மற்றும் சில பெளத்த குருமார்கள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ராஜபக் ஷ அரசாங்கம் தற்போது மக்கள் மத்தியில் நன்மதிப்பினை இழந்துள்ளது. தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் உருவாகியுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக சிங்கள பெளத்த மக்களதும் நன்மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் சமய தீவிரவாதம் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள ஜனாதிபதிக்கு அதனை அடக்குவதற்கு பல வருடங்களாக தூரமாகியிருந்த ஞானசார தேரரின் ஆதரவு தேவைப்பட்டது.1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற சிவில் யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினர். இதனால் பெரும்பான்மை சமூகம் பல அச்சுறுத்தல்களுக்குள்ளாகியது. இன்று அதே போன்றதொரு நிலைமை முஸ்லிம்களால் அரசுக்கு ஏற்படலாம் என இன தீவிரவாதிகள் கருதுகின்றனர்.
அதிகரிக்கும் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்
2019 ஆம் ஆண்டு கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற சுலோகத்தை முதன்மைப்படுத்தியே போட்டியிட்டார். இந்தச் சுலோகம் 2019 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு மிகவும் பிரபலமானது.
இலங்கை முஸ்லிம்கள் பல வருடங்களாக தேசிய ரீதியிலான விடயங்களை விட தமது சொந்த விடயங்களிலே ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்து பெரும்பாலான சிங்களவர்களிடம் இருந்து வந்துள்ளது.
சிவில் யுத்தத்தின்போது முஸ்லிம்கள் அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டார்கள். முஸ்லிம்கள் தமது சொந்த பொருளாதார நன்மை கருதியே அரசுக்கு ஆதரவு வழங்குவதாக சிங்களவரிடமிருந்து மாத்திரமல்ல தமிழர்களிடமிருந்தும் முறைப்பாடுகளைக் கேட்க முடிந்தது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இரு பெரும்பான்மை சிங்கள கட்சிகளுக்கு மத்தியில் அதிகாரத்தை தீர்மானிப்பதற்கு காரணமானவர்களாக இருந்தார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்சி ஆட்சியமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து தங்களது சமூகத்துக்கு சலுகைகளை பெற்றுக்கொள்பவர்களாக செயற்படுவதாக சிங்களவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
2000ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் கலாசார ஆடை மற்றும் சமய பக்தி என்பன அவர்கள் பெரும்பான்மை சமூகத்திலிருந்தும் தூரப்படுத்துவதாக கருதினர். 2012 இல் பொதுபல சேனா அமைப்பின் வருகையுடன் சிங்கள அடிப்படைவாத குழுக்களான சிங்கள ராவய, ராவணா பலகாய என்பன இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தமது செயற்பாடுகளை அதிகரித்தன.
2013 மற்றும் 2014களில் பொதுபலசேனாவின் ஊடக சந்திப்புகள், பேரணிகள் என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உதவின. ஊடக சந்திப்புகளில் இடம் பெற்ற உரைகள் மற்றும் எச்சரிக்கையுடன் கூடிய நடவடிக்கைகள் என்பன முஸ்லிம்களுக்கு எதிராகவே அமைந்திருந்தன. முஸ்லிம்கள் நாட்டில் தீவிரவாதத்தைப் பரப்புவதாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
பொதுபல சேனா மற்றும் அதன் கொள்கைகள் சார்ந்த அமைப்புகள் இணைய வழி மூலம் வெறுப்புப் பேச்சுகளை வெளியிட்டன. நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாகவும் முஸ்லிம்களின் சனத்தொகை பெரும்பான்மையான சிங்களவர்களின் சனத்தொகையை விட விஞ்சிவிடும் எனவும் பிரசாரம் செய்யப்பட்டது.
முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்கள் சிங்களவர்களின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக இரகசியமான முறையில் சிங்களவர்களுக்கு கருத்தடை ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை விநியோகிப்பதாகவும் குற்றம் சுமத்தினர்.
ஹலால் சான்றிதழ் விநியோகிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் நிதி இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனால் இஸ்லாமிய தீவிரவாதம் ஏனைய சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சகோதரரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் (2005 – 2015) முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் பாரியளவில் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மோசமாகத் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் வர்த்தகத்துக்கு எதிரான சிங்கள வர்த்தகர்கள் இத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாக பலர் குற்றம் சுமத்தினார்கள்.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஞானசாரதேரர் அளுத்கமயில் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து அங்கு உரை நிகழ்த்தினார். முஸ்லிம் தீவிரவாதம் காரணமாக அச்சுறுத்தல் நிலவுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெரும்பான்மை இனத்தவர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஞானசார தேரர் ‘இந்நாட்டில் தொடர்ந்தும் சிங்கள பொலிஸாரும், சிங்கள இராணுவத்தினருமே இருக்கிறார்கள். சிங்களவர் ஒருவர் மீதேனும் கை வைக்கப்பட்டால் அது முஸ்லிம்கள் அனைவரதும் அழிவாக அமையும்’ என உரையாற்றினார்.
இந்த உரையினையடுத்து சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்தும் முஸ்லிம்கள் வாழும் அயல் பகுதிகளுக்கு பேரணியாகச் சென்றார்கள். அங்கு வன்முறை வெடித்தது. இரண்டு நாட்களாக நடந்த வன்செயல்களில் மூன்று முஸ்லிம்களும், தமிழ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் பலியானார்கள். அப்பகுதியில்வெளியிலிருந்து வந்த சிங்கள காடையர்கள் தாக்குதலை நடத்தினார்கள். முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வீடுகள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வன்செயல்களின் பின்னணியில் அரசாங்கத்துக்கு எவ்வித தொடர்புமில்லை என அரசாங்கம் மறுத்தாலும் சுயாதீனமான கண்காணிப்பாளர்கள் அப்போதைய மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பொதுபலசேனாவுக்கு ஆதரவு வழங்கியதாக சர்வதேச நெருக்கடிகள் குழுவுக்குத் தெரிவித்தனர். அக்காலகட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷவே பாதுகாப்பு செயலாளராக கடமையில் இருந்தார். கோத்தாபய இந்தக் குழுக்களின் சிரேஷ்ட பெளத்த குருமார்களுடன் தொடர்பில் இருந்தவராக அறியப்பட்டார்.
பொதுபல சேனா மற்றும் அதனோடு ஒத்த கொள்கைகளைக் கொண்ட குழுக்களுக்கு பேரணிகளை நடாத்துவதற்கு பொலிஸ் அனுமதி வழங்கியது. ஆனால் இவ்வாறான சமய ரீதியிலான பேரணிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்திருந்தது. முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், உடமைகள் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டபோது கடமையிலிருந்த பொலிஸார் செயலிழந்து நின்றார்கள்.
இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படவில்லை என சர்வதேச நெருக்கடிகள் குழுவுக்கு பல தரப்பினர் தெரிவித்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க கோத்தாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிச் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட பின்பு, இந்த வன்செயல்களின் பின்னணியில் பெளத்த தீவிரவாதிகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு செயற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தலைவர்கள் சர்வதேச நெருக்கடிகள் குழுவுக்கு தெரிவித்திருந்த தகவலை உறுதிப்படுத்துகிறது.
2015 இல் ராஜபக்ஷவின் ஆட்சி தோல்வியுற்று மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியான நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. இவ்வரசாங்கத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம்களின் பலமான ஆதரவு கிடைத்தது. பொதுபலசேனா அமைப்பின் அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்டுவதாக உறுதி மொழி வழங்கியே புதிய அரசு பதவிக்கு வந்தது.
புதிய நிர்வாகம் சாதுரியமாக முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளையும், வெறுப்புப்பேச்சையும் நிறுத்தியது. பொலிஸ் மற்றும் உளவுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் பெளத்த தீவிரவாத குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டன.
சிறிதுகால அமைதியின் பின்பு முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் சிறிய அளவில் மீண்டும் முன்னெக்கப்பட்டன. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது சிறிய தாக்குதல்கள் இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்டன. சமூகவலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பெளத்த தீவிரவாதிகளால் அம்பாறையில் பள்ளிவாசலொன்று தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளும் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் ஹோட்டலொன்றும் தாக்கி சேதமாக்கப்பட்டது. அவையனைத்தும் பொலிஸாரின் முன்னிலையிலேயே அரங்கேறின. குறிப்பிட்ட முஸ்லிம் ஹோட்டலில் சிங்களவர்களுக்கு கருத்தடை இரசாயனங்கள் கலந்த உணவு பரிமாறப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டதையடுத்தே இத்தாக்குதல் இடம்பெற்றது.
அதனையடுத்து மத்திய மலை நாட்டின் கண்டி மாவட்டத்தில் நான்கு நாட்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடந்தேறின. சிங்களவர் ஒருவர் நான்கு முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டு ஒருவாரத்தின் பின்பு உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டி மாவட்டத்தில் வன்செயல்கள் சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்டன.
உயிரிழந்தவரின் வீட்டுக்கு ஞானசார தேரர் விஜயம் மேற்கொண்டார். பின்பு ஏனைய தீவிரவாத தலைவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றுவதற்கிருந்த நிலையில் ஒரு மணித்தியாலத்துக்கு முன்பே வன்செயல்கள் ஆரம்பமாகின. இந்த வன்செயல்களில் ராஜபக்ஷவின் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உள்ளூர் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளமையை வீடியோ பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
வன்செயல்களில் இருவர் கொலை செய்யப்பட்டார்கள். அநேகர் காயங்களுக்குள்ளானார்கள். முஸ்லிம்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன. டசின் கணக்கான பள்ளிவாசல்களும் தாக்கி சேதமாக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால அவசரகால சட்டத்தை பிறப்பித்தார். இந்த அவசரகால சட்ட நிலைமையில் இராணுவம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் அனைவரும் வன்செயல்களை வன்மையாகக் கண்டித்தார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்கள். சில பிரபல பெளத்த செயற்பாட்டாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஒருவரேனும் இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பானவராக இனங்காணப்படவில்லை. அது திட்டமிடப்பட்ட தாக்குதலாகும். ஞானசார தேரர் இந்த தாக்குதல் தொடர்பிலோ முஸ்லிம்களுக்கு எதிரான ஏனைய செயற்பாடுகளின் பேரிலோ சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை.
2019இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு இலங்கை அரசாங்கம் முதற் தடவையாக முஸ்லிம்களுக்கு எதிரான சில தீர்மானங்களை எடுத்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் அவசர கால நிலைமையை அமுல்படுத்தி முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடை செய்தார். நாட்டின் பாதுகாப்பு கருதியே இத்தடை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை அவசர கால நிலைமை 2019 ஆகஸ்டில் நீக்கப்பட்டதன் பின்பு இத்தடை நீக்கப்பட்டது.
அரச பெண் ஊழியர்கள் அபாயா அணிவதும் தடை செய்யப்பட்டது. குறிப்பாக முஸ்லிம் பெண் ஆசிரியைகளே அபாயா அணிந்தனர். இந்த தடை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சவாலுக்குட்படுத்தப்பட்டதன் பின்பு வாபஸ் பெறப்பட்டது.
2019 நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் அண்மித்தபோது மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். அதன்பின்பு ஞானசார தேரர் உட்பட பெளத்த தேரர்கள் முஸ்லிம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அசாத்சாலி பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தியே எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலான சிங்களவர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் சில தமிழர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதம் மேலோங்குவதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தனர். இது ஆரம்ப எச்சரிக்கை யாக அமைந்துள்ளதாக கூறினர். இதனை யடுத்து அதிகாரிகள் செயலில் இறங்கினர்.
பொலிஸார் அவசரகால மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
இரண்டாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்களைக் கைது செய்தனர். தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புபட்டதற்கான எவ்வித ஆதாரங்கள் மற்றும் அச்சுறுத்தல் செயற்பாடுகளைக் கொண்டிராத பலரும் இக்கைதில் அடங்கினர்.
வீடுகளில் குர் ஆன் அல்லது அரபு மொழியிலான சமய ஆவணங்கள் நூல்கள் வைத்திருந்தவர்களைக் கூட பொலிஸார் வீடுகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று சில தினங்களில் கோத்தாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானத்தை அறிவித்தார். சமய ரீதியிலான தீவிரவாதத்தை அடியோடு துடைத்தெறிவதாக அவர் உறுதியளித்தார். தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமையை நினைவுபடுத்தி அதனைப்போன்று சமய தீவிரவாதத்தையும் அழிப்பதாகக் கூறினார்.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சிங்கள சமூக வாக்காளர்களின் அமோக வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைத்தது. முன்பு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க எதிர்பார்த்திராத அநேக கத்தோலிக்கர்களும் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ பாரியளவில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
அவர் தான் ஜனாதிபதியானதும் தனது கன்னி உரையை பெளத்த விகாரையிலிருந்து ஆற்றினார்.
“நான் சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றிபெறுவேன் என்பதை அறிந்திருந்தேன். சிங்களே மக்களே எனக்கு வாக்களித்தார்கள்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார். (தொடரும்) – Vidivelli