அரசாங்கத்தின் தீர்மானங்களே நெருக்கடிகளுக்கு காரணம்
பயிர்ச்செய்கை பாதிப்பு, உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி என்கிறார் கபீர்
தற்போதைய அரசாங்கம் கடந்த 2019 டிசம்பரில் ஆட்சிபீடமேறியவுடன் மேற்கொண்ட சில தீர்மானங்களால் நாட்டின் வருடாந்த வருமானம் பெருமளவால் வீழ்ச்சிகண்டது. அதுவே நாடு இப்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகளுக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. அதுமாத்திரமன்றி ஏற்கனவே சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களால் நாட்டிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, குறைபாடுகளைச் சீரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோருடன் இணைந்து எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் ‘பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலையத்தை’ நிறுவியிருப்பதாகவும், அதனூடாக நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஆலோசனைகளை ‘மாற்று அரசாங்கம்’ என்ற அடிப்படையில் முன்வைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
2019 ஆம் ஆண்டின் இறுதியில் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் பொருளாதார குறிகாட்டிகள் ஓரளவிற்கு சாதகமான மட்டத்திலேயே காணப்பட்டன. குறிப்பாக வரவு, செலவுத்திட்டப்பற்றாக்குறை 5 சதவீதத்திற்கும் குறைவான மட்டத்திலும் வெளிநாட்டுக்கையிருப்பு சுமார் 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது. அதேபோன்று பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் வாழ்க்கைச்செலவும் சீரான மட்டத்தில் பேணப்பட்டது. ஏற்றுமதி மூலமான வருமானம் மற்றும் அந்நியச்செலாவணி வருமானம் என்பனவும் உயர்வாகக் காணப்பட்டன. இருப்பினும் பல்வேறு காரணங்களால் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த நிலை மாற்றமடையத்தொடங்கியது. அப்போது சிலர் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அதற்குக் காரணமாகக் கூறியபோதிலும், அதனையும் தாண்டிய பிரச்சினையொன்று இருப்பது தற்போது தெளிவாகியிருக்கின்றது.
எனவே இவ்வாறானதொரு பின்னணியில் நானும், ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோரும் இணைந்து எமது கட்சிக்குள் பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலையத்தை உருவாக்கியிருக்கின்றோம். நாங்கள் மூவரும் கடந்த அரசாங்கத்தில் பொருளாதாரத்துறைசார் அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக செயற்பட்டதுடன் அரசியலுக்கு அப்பால் பொருளாதாரத்துறைசார் பின்புலத்தையும் கொண்டிருக்கின்றோம். இதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைத் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதே எமது நோக்கமாகும்.
கடந்த 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததிலிருந்து எமது நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், அவற்றுக்கு ஈடுகொடுப்பதற்கான இயலுமையையும் நாடு கொண்டிருந்தது. ஆனால் அந்த நெருக்கடிகள் தோற்றம்பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த காரணங்களை இனங்கண்டு, அவற்றுக்குரிய தீர்வை வழங்கவில்லை என்பதே உண்மையாகும். ஆகவே ஒவ்வொரு அரசாங்கங்களின்கீழும் நீண்டகாலமாகத் தொடர்ந்துவந்த இப்பிரச்சினைக்குத் தீர்வாக நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரக்கொள்கையில் முழுமையான மறுசீரமைப்பொன்றைச் செய்வதில் நாம் தோல்விகண்டிருக்கின்றோம். ஆனால் நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக நாம் இப்போது வங்குரோத்து நிலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிக்கின்றோம். குறிப்பாக நாடு தற்போது தீவிர டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
ஏனெனில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செலவுகள் அதன் வருமானத்தை விடவும் பெருமளவிற்கு உயர்வானவையாகக் காணப்படுகின்றன. மறுபுறம் அரசாங்கம் உற்பத்தியில் ஈடுபடுவதற்குப் பதிலாக அதிகளவிலான கொள்வனவில் ஈடுபடுகின்றது. கடந்த 2019 டிசம்பரில் இப்பொருளாதார நெருக்கடி ஆரம்பமானபோது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காணப்படவில்லை. மாறாக கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டவுடன் வழங்கப்பட்ட பல்வேறு வரிச்சலுகைகளின் காரணமாக நாட்டின் வருடாந்த வருமானம் பெருமளவால் வீழ்ச்சிகண்டது.
அதனைத்தொடர்ந்து 2020 பெப்ரவரி மாதமளவில் சர்வதேச சந்தையில் உள்நாட்டுப் பிணைமுறிகள் கழிவு விலையில் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் விளைவாக நாட்டின் வருமானத்தில் வீழ்ச்சியேற்பட்டபோது, இலங்கையில் பாரிய நிதிநெருக்கடி ஏற்படலாம் என்ற செய்தியே சர்வதேசத்தைச் சென்றடைந்திருக்கும். எனவே இதனைச் சீர்செய்யுமாறு சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிறுவனங்கள் இலங்கைக்குத் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கிவந்த நிலையிலும், மத்திய வங்கியினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினாலேயே 2020 செப்டெம்பர் மாதம் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டது. ஆனால் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் உள்ளிட்ட இரண்டு சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களை கடந்த 2005 ஆம் ஆண்டில் நாட்டிற்குள் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், இப்போது அந்நிறுவனங்களைக் கடுமையாக விமர்சிக்கின்றது. அதனை அச்சந்தர்ப்பத்திலேயே உரியவாறு கையாளாததன் காரணமாக இப்போது நாட்டின் ஏனைய வங்கிகளும் தரமிறக்கப்பட்டிருப்பதுடன் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கின்றது.
அடுத்ததாக இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும் இந்த நெருக்கடிநிலைக்கு முக்கியமான காரணமாகும். அதன் விளைவாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படைந்து, உள்நாட்டு உற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
அதேவேளை வெளிநாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமான டொலர் கையிருப்பில் இல்லை. எனவே இவற்றினால் ஏற்படப்போகும் உணவுப்பற்றாக்குறை நெருக்கடியின் பிடியில் தற்போது நாடு சிக்கிக் கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் நிதி உறுதிப்பாடு தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் காணப்பட்ட நம்பகத்தன்மை இப்போது சரிவடைந்திருக்கின்றது. இவையே தற்போது நாட்டின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கக்கூடிய நெருக்கடிகளுக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.- Vidivelli