(எம்.எப்.எம்.பஸீர், பாறூக் சிஹான்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று (5) அறிவித்தனர்.
இலக்கம் 506/ பீ, பள்ளி ஒழுங்கை வீதி, கல்முனையைச் சேர்ந்த 1123 எனும் சந்தேக நபர் இலக்கத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 42 வயதான சாலி மொஹம்மது நளீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தொடர்ந்து, சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்புகளைப் பேணியமையை மையப்படுத்தி குறித்த சந்தேக நபர் கடந்த 2019 மே 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. அது முதல் தடுப்புக் காவலின் கீழ் வைத்து விசாரிக்கப்பட்டுள்ள சந்தேக நபர், கடந்த 2021 ஏப்ரல் 6 ஆம் திகதி, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் 21463 /8/19 எனும் வழக்கு கோவையின் கீழ் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந் நிலையிலேயே இந்த சந்தேக நபர் கடந்த 2021 நவம்பர் 23 ஆம் திகதி சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் கடந்த 2021 டிசம்பர் 5 ஆம் திகதி மேலதிக சிகிச்சைகளுக்காக சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. இந் நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், சிறுநீரகம் சார் பிரச்சினைக்காகவே சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அது சார்ந்த நோய் நிலைமையே மரணத்துக்கு காரணம் எனவும் சிறைச்சாலையின் உள்ளக தகவல்கள் வெளிப்படுத்தின.- Vidivelli