பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கியது தவறு: 2 உரிமை மீறல் மனுக்கள் 

ஜனவரி ஏழில் பரிசீலனை

0 952

மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்தமை சட்டத்திற்கு எதிரானது எனவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றியமை மற்றும் அமைச்சரவையை நீக்கியமை ஆகியன சட்டவிரோதம் எனவும் உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 2019  ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்றுத் தீர்மானித்தது.

தம்பர அமில தேரர் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களே இவ்வாறு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குறித்த மனுக்கள் நேற்று  உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக  அலுவிகார, சிசிர டி ஆப்ரூ மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.  இதன்போதே அம்மனுக்கள் இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டன,

நேற்று  இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச சட்டவாதி,  குறித்த மனுக்கள் தொடர்பில் அறிவுரைகளை பெற்று கருத்துக்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் தருமாறு நீதிமன்றைக் கோரினார்.

இந்நிலையிலேயே  குறித்த மனுக்களை  எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி பரிசீலனைக்கு  எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுவில் பிரதிவாதிகளாக ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமா அதிபர்  உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என்று மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்கடடியுள்ளனர்.  ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படை உரிமையை மீறி இருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றைக் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.