மௌலவி அப்துர் ரஊபுக்கு எதிரான பத்வா ‘அடிப்படை உரிமை மீறல்’

அவரது உயிருக்கும் ஆபத்து என ஞானசார தேரரிடம் சன்ன ஜயசுமான்ன முறைப்பாடு; நீதியமைச்சருக்கும் கடிதம்

0 719

காத்­தான்­கு­டியை தள­மாகக் கொண்­டி­யங்கும் சூபி முஸ்லிம் குழுவின் தலை­வ­ரான மௌலவி அப்துர் ரஊபின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் அவ­ரது அடிப்­படை உரி­மையை பாது­காக்­கு­மாறு கோரி இரா­ஜாங்க அமைச்சர் பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மான்ன, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியை நேற்­றைய தினம் சந்­தித்து தனது கருத்­துக்­களை முன்­வைத்­த­போது அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் இதே கோரிக்­கையை தான் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யிடம் கடிதம் மூலம் முன்­வைத்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

1979 ஆம் ஆண்டு மௌலவி அப்துர் ரஊ­புக்கு எதி­ராக உலமா சபை­யினால் வெளி­யி­டப்­பட்­ட­தாக கூறப்­படும் பத்வா மூலம் அவ­ரது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது உயி­ருக்கும் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக இக் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இது தொடர்பில் கவனம் செலுத்தி கிழக்கில் நிலவும் இஸ்­லா­மிய தீவி­ர­வாத அச்­சு­றுத்­தலை முடி­வுக்குக் கொண்டு வரு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இரா­ஜாங்க அமைச்சர் சன்ன ஜய­சு­மான்ன, நீதி­ய­மைச்சர் அலி சப்ரி மற்றும் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஆகி­யோ­ருக்கு அனுப்­பி­யுள்ள கடித்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விடயம் வரு­மாறு:

அண்­மையில் பாகிஸ்­தானின் சியால்கோட் நகரில் இலங்கைப் பிர­ஜை­யான பிரி­யந்த குமா­ர­வுக்கு நடந்த துர­திஷ்­ட­வ­ச­மான சம்­பவம் குறித்தும் நாம் அனை­வரும் அறிவோம். இவ்­வா­றான எந்­த­வொரு சம்­ப­வத்­தையும் எந்­த­வொரு நாக­ரிக சமூ­கமும் ஏற்றுக் கொள்­ளாது என்­பதில் எந்­த­வித சந்­தே­க­மு­மில்லை.

நான் சில தினங்­க­ளுக்கு முன்னர் நாட்டின் முன்­னணி சூபி மத மற்றும் சமூகத் தலை­வர்கள் சிலரைச் சந்­தித்தேன். இதன்­போது 42 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் இடம்­பெற்ற மிகப் பார­தூ­ர­மான விடயம் ஒன்­று­பற்றி எனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்­தனர். இது அண்­மையில் சியால்­கோட்டில் இடம்­பெற்ற சம்­ப­வத்­துக்கு ஒப்­பா­ன­தாகும்.
காத்­தான்­கு­டியில் வாழ்ந்து வரும் இலங்கை சூபி முஸ்லிம் தலைவர் மௌலவி ஏ.ஜே. அப்துர் ரஊப் மிஸ்­பாஹீ, 1979 இல் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா எனப்­படும் மத அமைப்­பினால் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்டு மரண தண்­டனை விதிக்­கப்­பட்டார். சூபி தலை­வர்­களின் கருத்­துப்­படி, மௌலவி ரஊப் மிஸ்­பாஹீ கடந்த 42 ஆண்­டு­க­ளாக அச்­சத்­திலும், நிச்­ச­ய­மற்ற நிலை­யிலும், கொலை அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யிலும் வாழ்ந்து வரு­கிறார். அவரைக் கொல்ல பல முயற்­சிகள் நடந்­தன. உதா­ர­ண­மாக, அவர் 4 ஆகஸ்ட் 1983, 29 ஆகஸ்ட் 1983 மற்றும் 7 நவம்பர் 2006 ஆகிய திக­தி­களில் ஆபத்­தான தாக்­கு­தல்­களில் இருந்து தப்­பினார். அவ­ரது நெருங்­கிய சகா­வான மௌலவி எம்.எஸ்.எம். பாரூக் காதிரி அதே தீர்ப்­புக்கு இணங்க காத்­தான்­கு­டியில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து கொல்­லப்­பட்­டுள்ளார்.

மேலும், 1979 இல் வழங்­கப்­பட்ட அதே ‘தீர்ப்பின்’ அடிப்­ப­டையில் செயல்­படும் தீவி­ர­வாத குழுக்­களால் இலங்­கையில் உள்ள ஆயி­ரக்­க­ணக்­கான சூபி முஸ்­லிம்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர், மேலும் 1 ஏப்ரல் 1979 அன்று வழங்­கப்­பட்ட தீர்ப்­பா­னது (பத்வா) இல 69, பீர் சாஹிபு தெரு, கொழும்பு 12 இல் அமைந்­தி­ருந்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா எனும் அமைப்­பினால் சிறு புத்­த­க­மாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதனை நான் பார்­வை­யிட்டேன்.

குறித்த புத்­த­கத்தின் 16 ஆவது பக்­கத்தில் “மௌலவி ஏ.ஜே. அப்துல் ரவூப் தனது சித்­தாந்­தங்­களை உணர்­வு­பூர்­வ­மாக, எந்த நிர்ப்­பந்­தமும் இன்றி வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். எனவே, அவர் இஸ்­லாத்தில் இருந்து முர்தத் (மதம் மாறி­யவர்) என்று கரு­தப்­பட வேண்டும், மேலும் அவ­ரது பேச்சை எந்த நிர்ப்­பந்­தமும் இல்­லாமல் சரி கண்டு அங்­கீ­க­ரித்­த­வர்­களும் முர்தத் என்று கரு­தப்­ப­டு­வார்கள்” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும், இதே புத்­த­கத்தின் 20 வது பக்­கத்தில் ஒரு முர்தத் தனது மத­மான இஸ்­லாத்­தி­லி­ருந்து தன்­னைத்­தானே விலக்கிக் கொண்­டவர் என்று கூறப்­பட்­டுள்­ளது. “எந்­த­வொரு வற்­பு­றுத்­தலும் இன்றி ஒருவர் இஸ்­லாத்தில் இருந்து மதம் மாறினால் அவர் கொல்­லப்­பட வேண்டும்” என்றும் அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த தீர்ப்பு கடந்த 42 ஆண்­டு­க­ளாக மௌலவி ரஊப் மிஸ்­பாஹீ மற்றும் ஆயி­ரக்­க­ணக்­கான சூபி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தீவி­ர­வாத குழுக்­களால் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­களில் சிலர் கொல்­லப்­பட்­டனர், சிலர் உடல் ரீதி­யா­கவும் உள ரீதி­யா­கவும் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டனர், அவர்­களின் பள்­ளி­வா­சல்கள் மற்றும் வீடுகள் தாக்­கப்­பட்­டன, அவர்­களின் மனித மற்றும் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டன, இந்த தீர்ப்பின் அடிப்­ப­டையில் அவர்கள் ஓரங்­கட்­டப்­பட்­டனர் மற்றும் பார­பட்சம் காட்­டப்­பட்­டனர்.

இன்­னொரு நபரைக் கொல்­வ­தற்கும், இலங்­கையில் இத்­த­கைய சட்­ட­வி­ரோ­த­மான தீர்ப்பை வழங்­கு­வ­தற்கும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும் ஒரு மத அமைப்­பினால் எவ்­வாறு முடிந்­தது என்­பது எனக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. இது அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை மாத்­தி­ர­மன்றி தண்­டனைச் சட்­டத்­தையும் கூட கடு­மை­யாக மீறு­கின்ற செயற்­பா­டாகும். இது தேசிய பாது­காப்பு மற்றும் மத நல்­லி­ணக்­கத்­திற்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக உள்­ளது.

இலங்கை சூபி முஸ்­லிம்கள், குறிப்­பாக காத்­தான்­கு­டியில் வசிக்கும் மக்கள், அந்த தொடர் நிகழ்­வு­க­ளுக்கு எதி­ராக பொலிஸ் மற்றும் பிற அர­சாங்க அதி­கா­ரி­க­ளிடம் பல­முறை முறைப்­பா­ட­ளித்­துள்­ளனர், ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அந்த முறைப்­பா­டுகள் அனைத்தும் முஸ்­லிம்­களின் உள்­ளக பிரச்­சினை எனக் கூறி புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது.
இது இலங்­கையில் சட்டம் மற்றும் ஒழுங்கின் இருப்­புக்கே சவால் விடும் மிகவும் தீங்கு விளைவிக்கும் விடயமாகும். மேலும், மேற்படி தீர்ப்பு (பத்வா) இலங்கையை மதத் தீவிரவாதிகளின் விளைநிலமாக மாற்றியதற்கும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதக் கருத்தியல்களை ஊடுருவச் செய்வதற்கும் முக்கிய காரணியாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த பத்வாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சஹ்ரான் ஹாஷிமின் முக்கிய கோரிக்கையாக இருந்ததை இந்த நேரத்தில் வலியுறுத்த வேண்டும்” என்றும் இக் கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.