ஏ.ஆர்.ஏ.பரீல்
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் கீழ் பல தசாப்தங்களாக நாட்டில் இயங்கிவரும் காதிநீதிமன்றங்களுக்கு என்ன நடக்கப்போகிறது? காதிநீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படப்போகின்றனவா? இல்லையேல் சட்டத்தில் திருத்தங்களுடன் இக்கட்டமைப்பு திருத்தியமைக்கப்படப் போகிறதா? இதுவரை இது தொடர்பில் இறுதியான தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
இலங்கையில் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஒரே சட்டமே அமுல்படுத்தப்பட வேண்டும். இனங்களுக்கான தனியார் சட்டங்களுக்கு சாவு மணியடிக்க வேண்டும் என கடும்போக்கு இனவாதிகளும் இனவாத மதத்தலைவர்களும் அடிக்கடி போர்க்கொடி ஏந்துகிறார்கள். மாரி காலத்து காளான்கள் போன்று அவர்களது கோஷங்கள் மெளனித்து விடுகின்றன. சில காலத்தின் பின்பு மீண்டும் களமிறங்குகின்றன.
முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டும். காதிநீதிமன்றங்களுக்கு மூடு விழா நடத்த வேண்டும் என சில வருட காலமாக கோஷமெழுப்பி வந்த பொது பல சேனா பெளத்த மக்களை இன வாதத்தின் பக்கம் இழுத்துச் சென்றது.
“பெளத்த பெண்களை ஏமாற்றி மதம்மாற்றி திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம் இளைஞர்கள் சில காலம் அவர்களுடன் வாழ்க்கை நடத்தி விட்டு காதிநீதிமன்றங்கள் ஊடாக இலகுவில் எதுவித நஷ்ட ஈடுகளுமின்றி விவாகரத்து செய்து கொள்கின்றனர். அவர்களது திருமணப் பதிவு முஸ்லிம் விவாக பதிவாளர்களினால் மேற்கொள்ளப்படுவதால் காதிநீதிமன்றங்களே அவர்களுக்கு விவாகரத்து வழங்குகிறது.
மதம்மாறி இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களை விவாகரத்து (தலாக்) செய்வதற்கு கணவர் காதிநீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்கின்றார்கள். அவ்வாறான வழக்குகளில் பிரதிவாதிகளான மதம் மாறி திருமணம் செய்து கொண்ட சிங்களப் பெண்கள் காதிநீதிமன்றங்களில் ஆஜராகும்போது, காதிநீதிபதிகள் அவர்களின் முகத்தில் எச்சில் துப்புகிறார்கள்” இவ்வாறு ஊடக மாநாடுகளில் கருத்துத் தெரிவித்தவரே தற்போது “ஒரே நாடு ஒரே சட்டம்’’ என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஒரே நாடு ஒரே சட்டத்தை அமுல் நடத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்தச் செயலணி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. “ஒரே நாடு ஒரே சட்டம்’’ என்ற எண்ணக்கருவினை நோக்கும்போது இலங்கையில் ஒரே சட்டமே அமுல்படுத்தப்படவேண்டும் ஏனைய தனியார் சட்டங்கள் இல்லாமற் செய்யப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடாக இருக்கிறது.
நீதி அமைச்சரின் நிலைப்பாடு என்ன?
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான நீதியமைச்சர் ஜனாதிபதியினது கொள்கைகளை ஆதரிப்பவராகவே இருந்து வருகிறார். ஜனாதிபதியின் கொள்கைகளை அவரால் நிராகரிக்க முடியாது. அதன் காரணமாகவே அவர் கடந்த காலங்களில் காதிநீதிமன்றங்களுக்கு சவால்கள் ஏற்பட்டபோது, காதிநீதிபதிகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டபோது அதனை கண்டுகொள்ளதவராகவே இருந்து வந்துள்ளார். காதிநீதிமன்றக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் அல்லது இல்லாமற் செய்யவேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அதில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையில் குழுவொன்றினையும் நியமித்திருந்தார். அக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்து பல மாதகாலமாகிறது.
நீதியமைச்சர் நியமித்த குழுவும் காதிநீதிமன்றக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் மாறாக இல்லாமற் செய்யப்படக்கூடாது என்றே தனது சிபாரி-சில் தெரிவித்திருந்தது.
அத்துரலியே தரன தேரரின் தனிநபர் பிரேரணை
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் நாட்டில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை ஒழிக்கும் தனிநபர் பிரேரணையொன்றினை இவ்வருட ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
அத்துரலிய ரதன தேரர் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் ‘முஸ்லிம் சட்டத்தில் திருமணத்தின்போது பெண்ணின் விருப்பம் அவசியமில்லை. குறிப்பாக கூறுவதென்றால் திருமண சான்றிதழில் விவாகப்பதிவின் போது கூட கையொப்பமிட பெண்ணுக்கு உரிமை இல்லை. எனவே முஸ்லிம் சட்டங்களினால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. வெறுமனே பெண்களின் உரிமை மட்டுமல்லாது சிறுவர் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.
முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் 12 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் காதிநீதிபதியின் அனுமதியுடனும் 12 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் காதிநீதிபதியின் அனுமதியில்லாமலும் திருமணம் செய்து கொடுக்க முடியும். எனவே இந்த நடைமுறையை மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? முஸ்லிம் சட்டத்தின் கீழ் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை அரசாங்கம் அறிந்துள்ளதா? எனவே முஸ்லிம் சட்டம்குறித்து தீர்மானம் எடுப்பது நீதி அமைச்சா அல்லது ஜம் இய்யத்துல் உலமா சபையா என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
கடந்த 2021.02.09 ஆம் திகதி அத்துரலிய ரதன தேரர் பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் சிறப்புக் கூற்றொன்றை முன்நிறுத்தியே தனிநபர் பிரேரணையை முன்வைத்திருந்தார்.
அத்துரலிய ரதன தேரரின் உரையையடுத்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், ‘எமது நாட்டில் பல தனியார் சட்டங்கள் உள்ளன. குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பிலும் அதில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பாகவும் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரைகள் நீதியமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அனைவரும் அது தொடர்பில் ஆராய்ந்து நாட்டின் பொதுவான சட்டத்துக்கு சமமான திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் இணக்கம் தெரிவிக்கிறோம் என்றார்.
அமைச்சரவையின் தீர்மானம்
நாட்டில் காதிநீதிமன்ற கட்டமைப்பை இல்லாதொழிக்க வேண்டும். முஸ்லிம்களின் பலதார மணம் தடை செய்யப்படவேண்டும். முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானங்கள் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
காதிநீதிமன்ற முறைமையை இல்லாதொழிப்பது உள்ளிட்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் ஒரு தலைப்பட்சமானவை என முஸ்லிம் சமூகம் பலத்த அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து முஸ்லிம் சமூகத்தின் மார்க்க, சிவில் தலைமைத்துவங்களின்அபிப்பிராயங்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதற்கான போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை நீதியமைச்சர் அலிசப்ரியினால் வக்புசபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தலைமையில் நியமிக்கப்பட்ட முஸ்லிம் சட்ட திருத்த ஆலோசனைக் குழுவும் அமைச்சரவையின் தீர்மானங்கள் தொடர்பில் ஏ-கோபித்த சம்மதத்தை தெரிவிக்கவில்லை. இக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியிலும் ஆரம்பத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் குழுவினது முதல் மூன்று அமர்வுகளில் மாத்திரமே பங்கேற்றிருந்தார். பின்பு குழுவிலிருந்து இராஜினாமா செய்து கொண்டார்.
முஸ்லிம் சமூகத்தின் மார்க்க, சிவில் தலைமைத்துவங்களை ஆலோசிக்காது அமைச்சரவை மேற்கொண்டுள்ள முஸ்லிம் சமய விவகாரம் தொடர்பான தீர்மானத்தை சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவது தொடர்பில் சிவில் அமைப்புகள் ஆராய்ந்துள்ளன. அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும்போது அதனை எதிர்த்து உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்க
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கவலை வெளியிட்ட அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, இஸ்லாமிய மார்க்க, சிவில் நிறுவனங்களின் ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாது அமைச்சரவையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு அதிருப்தி தெரிவித்தது.
அத்தோடு அமைச்சரவையின் தீர்மானம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டுமெனவும் மார்க்க அடிப்படைகளையும், நாட்டின் ஜனநாயக உரிமைகளையும் கவனத்திற்கொண்டு தீர்மானம் எடுக்குமாறும் அரசாங்கத்தை கோரியிருந்தது.
நாட்டின் அனைத்து பிரஜைகளின் உரிமைகளையும் மதித்து எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் இந்நாட்டின் பல்லின கலாசாரத்தைப் பேணக்கூடிய விதத்தில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த ஒரு பொறிமுறை மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் நீதியமைச்சரையும் அரசாங்கத்தையும் வேண்டியிருந்தார்.
அமைச்சர் அலிசப்ரியின் மெளனம்
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் கீழ் இயங்கிவரும் காதிநீதிமன்ற கட்டமைப்பு இல்லாமற் செய்யப்படுவதற்கு அமைச்சர் அலிசப்ரி ஆரம்பம் முதல் ஆதரவு தெரிவித்து வந்தார் என்பதே சமூகத்தின் குற்றச்சாட்டாகும். அமைச்சரவையில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராகவும் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சராகவும் அலிசப்ரியே பதவி வகிக்கிறார். ஆனால் காதிநீதிமன்ற முறைமையை ஒழிப்பது உள்ளிட்ட யோசனைகளை தான் அமைச்சரவையில் முன்மொழியவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கூறுவதை நியாயப்படுத்த முடியாது. அவரே விடயத்துக்குப் பொறுப்பானவர். அவர் கூறியது போன்று இடம் பெற்றிருந்தாலும் அவர் தனது அதிகாரங்களுக்காக தனது சமூகத்துக்காக அமைச்சரவையில் வாதிட்டிருக்க வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டவிவகாரம் தொடர்பில் தற்போது மெளனம் காத்துவரும் நீதியமைச்சர் அலிசப்ரியின் மெளனத்தைக் கலைக்கும் வகையில் எமது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களிடம் அரசின் நிலைப்பாட்டினை விளக்கியுள்ளார். நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரில் தெரிவித்த இந்தக் கருத்து இஸ்லாமிய நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக மாத்திரம் தெரிவித்த கருத்துகளா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வெற்றிடங்களாகவுள்ள காதிநீதிமன்றங்கள்
காதிநீதிபதி பதவி மூன்று வருடகாலத்துக்கே வழங்கப்படுகிறது. மூன்று வருடகாலம் பூர்த்தியாக முன்பு புதிய நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சையொன்றின் பின்பு புதிய நியமனங்கள் வழங்கப்படுவதே இதுவரை காலம் இடம் பெற்றுவந்த நடைமுறையாகும். ஆனால் அண்மைக் காலமாக இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
காதிநீதிபதிகள் 46 பேரின் பதவிக்காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது. இவற்றில் 25 காதிநீதிமன்றங்களுக்கு புதிய நியமனம் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டும் பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் நேர்முகப்பரீட்சை இதுவரை நடத்தப்படவில்லை.
மேலும்13 காதிநீதிபதிகளின் இராஜினாமா, பதவி நீக்கம், இறப்பு காரணமாக வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வெற்றிடங்களுக்கு இப்பகுதிகளுக்கு அண்மையில் கடமையில் உள்ள காதிநீதிபதிகளே பதில் காதிநீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தமது தேவைகளுக்காக தம் பிரதேசத்திலிருந்தும் தூர இடங்களுக்கு பயணிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். காதிநீதிபதிகள் வெற்றிடம் காரணமாக அநேகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தத்தில் தற்போது காதிநீதிமன்றக் கட்டமைப்பு சீர்குலைந்து போயுள்ளது எனலாம்.
“ஒரே நாடு ஒரே சட்டம்’’ செயலணியின்
சிபாரிசுக்காக அரசு காத்திருக்கிறதா-?
“ஒரே நாடு ஒரே சட்டம்’’ என்ற எண்ணக்கருவை அமுல்படுத்துவதற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டு தற்போது செயற்பட்டுவரும் செயலணியின் ஆலோசனைகள் மற்றும் சிபாரிசுகளுக்காக அரசு காத்திருக்கிறதா-? இதன் காரணமாகத்தான் காதி நீதிமன்ற கட்டமைப்பும், காதி நீதிபதி நியமனங்களும் இழுத்தடிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பரவலாக சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளது.
ஞானசார தேரரின் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்’’ ஜனாதிபதி செயலணி தற்போது பொதுமக்களினதும், சிவில் சமூக அமைப்புகளினதும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் நாடளாவிய ரீதியில் பதிவு செய்து வருகிறது. எதிர்வரும் 2022.02.28 ஆம் திகதிக்கு முன்பு ஞானசார தேரர் தனது செயலணியின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு கோரப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் காதிநீதிமன்ற விவகாரம் அந்த காலக்கெடுவரை இழுத்தடிக்கப்படலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வரும் ஞானசார தேரர் கடந்த வருடங்களில் முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம்களின் விவகாரங்களையும் மிகவும் காரசாரமாக விமர்சித்து வந்தவர். இலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டும் என போர்க்கொடி ஏந்தியவர். முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரமல்ல முஸ்லிம்களின் ஷரீஆ விவகாரங்கள், ஷரீஆ வங்கி, மத்ரஸா பாடசாலைகள், அரபுக்கல்லூரிகள், ஹலால் சான்றிதழ், இஸ்லாமிய கலாசார உடை, நிக்காப் என்பனவற்றை எல்லாம் விமர்சித்தவர். இவற்றுக்கெல்லாம் சாவுமணி அடிக்கவேண்டுமென கிளர்ந்தெழுந்தவர். இவ்வாறான ஒருவர் எமது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தையும், காதிநீதிமன்ற முறைமையையும் சவாலுக்குட்படுத்துவார். இவற்றுக்கெதிராகவே ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தையும் காதிநீதிமன்றக் கட்டமைப்பையும் காப்பாற்றிக்கொள்வதற்காக அவற்றின் இருப்பினை உறுதிசெய்து கொள்வதற்காக தமது ஆலோசனைகளையும் கருத்துகளையும் “ஒரே நாடு ஒரே சட்டம்’’ செயலணிக்கு வழங்கவேண்டும்.
நீதியமைச்சர் முஸ்லிம்களின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும்
நீதியமைச்சர் சட்டத்தரணி அலிசப்ரிக்கும், “ஒரே நாடு ஒரே சட்டம்’’ செயலணியின் தலைவர் ஞானசார தேரருக்கும் இடையில் முரண்பாடுகள் உச்ச நிலையை எட்டியுள்ளன. நீதியமைச்சரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஞானசார தேரர் ஊடகங்கள் மூலம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
காற்சட்டை அணிந்து கொண்டு நியாயமான கொள்கையுடன் செயற்படும் நபர் என்றால் இவர் பதவி விலக வேண்டும். யாரும் கூறுவதைக்கேட்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர் முற்று முழுதாகப் பொய்யராக மாறிவிட்டார். சொல்வது ஒன்று செய்வது வேறொன்று என்றெல்லாம் அமைச்சருக்கு ஞானசார தேரர் சவால் விட்டுள்ளார்.
“ஒரே நாடு ஒரே சட்டம்’’ விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நீதியமைச்சரான அலிசப்ரியே ஆவார். இந்நிலையில் ஞானசார தேரரின் செயற்பாடுகள் அமைச்சரையும் விஞ்சிய நிலையிலேயே அமைந்துள்ளது. இந்நிலைமை மிகவும் ஆபத்தானதாகும். இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு ஞானசார தேரரை கட்டுப்படுத்த வேண்டும்.
ஞானசார தேரர் தெரிவித்து வரும் இனவாதக் கருத்துக்கள் அவர் இந்தச் செயலணியின் தலைமைப் பதவிக்குப் பொருத்தமற்றவர் என்பதை உறுதி செய்கிறது.
இலங்கையில் முஸ்லிம்கள் பல தசாப்தங்களாக சட்ட ரீதியில் யில் அனுபவித்து வருகின்ற உரிமைகளைப் பறிப்பதற்கு நீதியமைச்சர் ஒரு போதும் இடமளிக்கக்கூடாது.-Vidivelli