முகத்தஸா வாஹித்
கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகருக்கு அண்மையில் விஜயம் செய்த ஊடகவியலாளர் முகத்தஸா வாஹித் அங்கு வாழும் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை தொடர்பில் நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
பெப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி கொவிட் 19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையை இரத்துச் செய்ததுடன் அடக்கம் செய்யவும் அனுமதித்தது. மார்ச் 2021 இன் தொடக்கத்தில், கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டனர். அன்றிலிருந்து, கொவிட்-19 தொற்றினால் இறந்த ஒவ்வொருவரும், மஜ்மா நகருக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள், அங்கு சடலங்களை அடக்கம் செய்வதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் வாழும் மக்கள் வாழ்வாதாரம், விவசாயம் மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்களை தாமாக முன்வந்து சடலங்களை அடக்கம் செய்வதற்காக வழங்கினர். தற்போது மஜ்மா நகரில் 3200 க்கும் மேற்பட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன, மேலும் 300 உடல்களை மட்டுமே அடக்கம் செய்ய இங்கு இடமுள்ளது என அப் பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்தும் இங்கு அடக்கம் செய்வதாயின் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்.
“ஆரம்பத்தில், தற்போது சடலங்கள் அடக்கம் செய்யப்படும் காணிக்கு அருகே உள்ள ஒரு பொது நிலத்தையே நாங்கள் அதிகாரிகளுக்குக் காட்டினோம், ஆனால் அதிகாரிகள் கொவிட்-19 சடலங்களை அங்கு அடக்கம் செய்ய விரும்பவில்லை, ஏனெனில் அது ஒரு சாய்வில் அமைந்துள்ளது, அதற்குப் பதிலாக எம்.எஸ். ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தையே தெரிவு செய்தனர்”என்று மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஏ.எல். சமீம் கூறினார். ஜௌபர் உடனடியாக தனது 3 ஏக்கர் நிலத்தை கொவிட்-19 சடலங்களை அடக்கும் நோக்கங்களுக்காக வழங்க சம்மதித்தார்.
ஜௌபருடன் மேலும் 13 காணி உரிமையாளர்களும் அரச தேவைகளுக்காக தமது காணிகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. அவர்களிடமிருந்து 21.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட்-19 மையவாடிக்காக 10 ஏக்கர் ஒதுக்கப்பட்டது, மேலும் 11.5 ஏக்கர் அப் பகுதியில் வாழும் மக்களுக்கு பொது மயானம் ஒன்று இல்லாததால் பொது மயானமாக பயன்படுத்த ஒதுக்கப்பட்டது. “எங்கள் நிலங்களை விட்டுக் கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு மாற்று தீர்வு தேவை, ஏனென்றால் எங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கும் வாழ்வதற்கும் எங்களுக்கு நிலங்கள் தேவை” என்று ஜௌபர் கூறினார்.
“எனக்கு சொந்தமான ஒரே நிலம் அதுதான், நான் அங்கு எனது வீட்டைக் கட்டினேன், ஆனால் அது பாதுகாப்பு வலயத்தில் இருந்ததால் அதைக் கொடுக்க வேண்டியிருந்தது. மஜ்மா நகரில் கொவிட் மையவாடி அமைக்கப்பட்டதால் இன்று எனது வீட்டையும் நிலத்தையும் இழந்துவிட்டேன்” என்று ஹுசைன்
கவலையுடன் கூறினார்.
எச்.எம். ஹுசைன், போரினால் இடம்பெயர்ந்து மஜ்மா நகரில் மீள்குடியேறி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த நிலத்தில் வசித்து வந்தார், ஆனால் கொவிட்-19 மையவாடியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வலயத்தில் அவரது காணி இருந்ததால் அதனை அவர் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. ஹுசைனுக்கு அவர் இழந்த நிலத்திற்காக இழப்பீடு வழங்கப்படவில்லை, தற்போது அவருக்கு குடியிருக்க இடமும் இல்லை.
“எனக்கு சொந்தமான ஒரே நிலம் அதுதான், நான் அங்கு எனது வீட்டைக் கட்டினேன், ஆனால் அது பாதுகாப்பு வலயத்தில் இருந்ததால் அதைக் கொடுக்க வேண்டியிருந்தது. மஜ்மா நகரில் கொவிட் மையவாடி அமைக்கப்பட்டதால் இன்று எனது வீட்டையும் நிலத்தையும் இழந்துவிட்டேன்” என்று ஹுசைன் கவலையுடன் கூறினார்.
சனத்தொகை அடர்த்திமிக்க பிரதேசம்
விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை இழப்பது மாத்திரம் இங்கு பிரச்சினை இல்லை என்று சமீம் குறிப்பிடுகிறார். ஓட்டமாவடி ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளது, இது மிக அதிக சனத்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது, இதன் விளைவாக சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகளே இங்கு உள்ளன. “மக்கள் வாழ்வதற்கு குறைவான நிலப்பரப்பு இருப்பதால் நிலங்களின் இழப்பு மக்கள் தொகை அடர்த்தியை அதிகரிக்கச் செய்துள்ளது” என்றும் சமீம் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய மக்கள்தொகைக்கே இப்பகுதியில் நிலப்பரப்பு குறைவாக இருப்பதால், எதிர்கால சந்ததியினர் குறித்து இங்கு வாழும் மக்கள் கவலைப்படுகின்றனர். பிரதேச செயலகத்திடமும் இம் மக்கள் காணிகளை கோரியிருந்தனர். ஆனால் இந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்க அரச காணி இல்லை என செயலகம் தெரிவித்திருந்தது. 90 வீதமான குடியிருப்பாளர்கள் போரினால் இடம்பெயர்ந்து ஓட்டமாவடியில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் என்றும் இவர்களது காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும் சமீம் தெரிவித்தார். “பல ஆண்டுகளாக நாங்கள் பல அரச அதிகாரிகளிடம் கதைத்தோம். ஆனால் எங்களுக்கு இன்னும் காணி அனுமதிப்பத்திரம் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யும் உரிமை
தமக்கு இவ்வாறான காணிப் பிரச்சினைகள் உள்ள நிலையில் இங்கு வாழும் மக்கள் தங்கள் நிலங்களை ஏன் கொடுத்தார்கள் எனக் கேட்டபோது, கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் செயல்முறை மேலும் தாமதமாகாமல் இருக்கவே தான் உடனடியாக நிலத்தை வழங்கியதாக ஜௌபர் பதிலளித்தார்.
“நானும் ஒரு முஸ்லிம்தான். நம் மதத்திலும் பிற மதங்களிலும் இறந்தவர்களை அடக்கம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். நீண்ட தொடர்ச்சியான முயற்சியின் பின்னர், கொவிட் 19 தொற்றுக்குள்ளான எங்கள் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை இலங்கையர்களாகிய நாங்கள் பெற்றுள்ளோம், மேலும் எந்தவொரு சக இலங்கையருக்கும் வேதனையை ஏற்படுத்தும் வகையில், அடக்கம் செய்யும் உரிமையை தாமதப்படுத்த நான் விரும்பவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓட்டமாவடியில் உள்ள மஜ்மா நகரை கொவிட்-19 இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான பிரதேசமாக அதிகாரிகள் தெரிவு செய்வதற்கு முன்னர், தலைமன்னார் மற்றும் இரணைதீவு பிரதேசங்களையே அதிகாரிகள் தெரிவு செய்தனர். எனினும் அங்கு வாழும் மக்களால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. எனவேதான், மஜ்மா நகரில் வாழும் மக்கள் அடக்கம் செய்யும் செயல்முறையை மேலும் தாமதப்படுத்த விரும்பவில்லை. இதனால்தான் இருக்கின்ற நிலப்பரப்பு தங்களது தேவைகளுக்கு போதுமானதாக இல்லாவிட்டாலும் கூட அடக்கம் செய்வதற்கான நிலத்தை வழங்க ஒப்புக் கொண்டனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“எங்கள் காணிகளை விட்டுக் கொடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் நாங்கள் இழந்த காணிகளுக்கு தீர்வு தர வேண்டும். எமக்கு வாழ, விவசாயம் செய்ய, வாழ்வாதாரங்களை முன்னெடுக்க நிலங்கள் தேவை. அதனால்தான் இந்த நோக்கங்களுக்காக எங்களுக்கு நிலங்களை வழங்குமாறு நாங்கள் அரசிடம் கோருகிறோம்,” என மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சமீம் கூறினார்.
ஒவ்வொரு மாகாணத்திலும் அடக்கம் செய்வதற்கு கோரிக்கை
ஒவ்வொரு மாகாணத்திலும் கொவிட்-19 மையவாடிகள் அமைக்கப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களாக கொவிட்-19 சடலங்களை அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடக்கம் செய்யும் பணியை மேற்கொண்டு வருபவர்கள் கூட கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
“உலகில், கொவிட்-19 இனால் இறந்தவர்களை பொது மயானங்களிலேயே அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இலங்கையில் மட்டுமே இதற்கென குறிப்பிட்ட ஒரு பகுதி உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திலும் கொவிட்-19 இனால் இறந்தவர்களை அந்த மாகாணத்திலேயே அடக்கம் செய்ய இடமளித்தால் அது அனைவருக்கும் எளிதாக இருக்கும்” என்றும் சமீம் குறிப்பிட்டார்.
இறந்தவரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓட்டமாவடிக்கு நீண்ட தூரம் பயணித்து வரவேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். குடும்பத்தினரால் அடக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடியாது. சடலத்தை பார்வையிடக் கூட முடியாது. “குடும்பம் ஏற்கனவே துக்கத்தில் உள்ளது, அவர்கள் இங்கு ஒரு நீண்ட கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அடக்கம் செய்யப்பட்ட இடம் குடும்பம் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தால், அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் அடக்கஸ்தலங்களை மீண்டும் பார்வையிடலாம். அது வெகு தொலைவில் இருக்கும்போது, மீண்டும் அங்கு சென்று பார்ப்பது கூட கடினமானது,” என்று அவர் தெரிவித்தார். மேலும், மஜ்மா நகரில் இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மேலும் 300 சடலங்களை மட்டுமே அடக்கம் செய்ய இடமுள்ளது. என்றும், அந்தப் பகுதியை மேலும் விரிவுபடுத்தினால் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும். சனத்தொகை அடர்த்தி மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஜ்மா நகரில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமீம் மற்றும் ஜௌபர் ஆகியோர் கூறினர். உள்ளூர் மக்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. அவர்கள் சடலங்களுக்குத் தேவையான கிரியைகளை மேற்கொள்வார்கள். அடக்கம் செய்யும் இடத்திற்குள் பொதுமக்கள் நுழைய முடியாது எனவும், பிரதேச சபையினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மட்டுமே அந்த இடத்திற்குச் செல்ல முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசியல் நிலைவரம்
இப்பிரதேசத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் சூழலைப் பயன்படுத்திக் கொள்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். “அரசியல்வாதிகள் மஜ்மா நகரில் மாத்திரமே கொவிட் 19 ஜனாஸாக்கள் அடக்கம் செய்ய விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் கொவிட்-19 ஜனாஸா அடக்கத்தை தாமே முன்னெடுத்ததாக கூறி அதிக வாக்குகளைப் பெற முடியும்” என்று சமீம் தெரிவித்தார். கொவிட் -19 தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்வதை உறுதி செய்வதிலும், அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்குவதிலும் தாங்களே முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் இதற்கு முன்னரே உரிமைகோரியுள்ளதையும் செய்திகளில் காண முடிகிறது.
“இதனை மக்கள் தாமாகவே முன்வந்து செய்கின்றனர். அரசியல்வாதிகள் எவரும் எதுவுமே செய்யவில்லை. அனைத்து இலங்கையர்களுக்கும் அடக்கம் செய்வதற்கான அவர்களின் கண்ணியமான உரிமை இருப்பதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் எங்கள் நிலங்களை விட்டுக் கொடுத்தோம், ஆனால் இப்போது நாங்கள் காணிகளை இழந்துள்ளோம். எங்களிடம் மேலும் நிலம் இருந்திருந்தால் இன்னும் அதிகமான நிலங்களைக் கொடுத்திருப்போம், ஆனால் இதற்கு மேலும் கொடுப்பதற்கு எங்களிடம் காணிகள் இல்லை”என்றும் ஜௌபர் கூறினார்.- Vidivelli