எஸ்.என்.எம்.சுஹைல்
பொதுஜன பெரமுனவின் அதிகாரத்திலுள்ள ஜா எல நகர சபை மற்றும் லக்கல பிரதேச சபையின் வரவு செலவு திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இதனை அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பப் புள்ளியாக சிலர் அடையாளப்படுத்துகின்றனர்.
இதுபோக, கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுதிட்டங்களும் தேல்வியடைந்துள்ளன.
கிண்ணியா நகர சபை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டிலும் கிண்ணியா பிரதேச சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமும் மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்திலும் இருந்தன. அனைத்து சபைகளிலும் கூட்டாட்சியே இடம்பெற்றன.
கிண்ணியா நகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்திருந்தன. கிண்ணியா பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரத்தைப் பெற ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கியது.
அத்தோடு, மன்னார் பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப்பெற்று அதிகாரத்தை பெற்றது.
இதனிடையே, கடந்த திங்களன்று மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் தவிசாளர் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்) எஸ்.எச்.எம். முஜாஹிர் தலைமையில் முற்பகல் அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது, வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. அமர்வில் 21 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 07 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 2 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த தலா ஒருவருமாக மொத்தம் 11 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரும் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர் ஒருவர் அடங்கலாக 10 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதற்கமைய, ஒரு மேலதிக வாக்கினால் மன்னார் பிரதேச சபைக்கான 2022 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமுள்ள திருகோணமலை – கிண்ணியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் சபை அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச சபையில் 16 உறுப்பினர்களில் 15 பேர் மாத்திரமே அன்றைய அமர்வில் கலந்துகொண்டனர்.
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு கடந்த 24 ஆம் திகதி முற்பகல் 9.30 க்கு ஆரம்பமானது. இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், எதிராக 8 பேர் வாக்களித்துள்ளனர்.
அதற்கமைய, மேலதிக வாக்குகளால் 2022 ஆம் ஆண்டிற்கான கிண்ணியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள கிண்ணியா நகரசபை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 3 மேலதிக வாக்குகளால் நேற்றுமுன்தினம் தோல்வி அடைந்துள்ளது.
இரண்டாவது வாசிப்பிற்கான அமர்வு நேற்றுமுன்தினம் நகர பிதா எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்றது.
13 பேர் கொண்ட கிண்ணியா நகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 5 பேரும் எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.
முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுதந்திரக் கட்சியின் இருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இருவரும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக ஒருவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
கிண்ணியா பிரதேச சபை மற்றும் நகர சபை அதிகாரங்கள் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி கூட்டில் இருக்கிறது. அதாவது, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் இம்ரான் மஹ்ரூப் என்போரின் அதிகாரத் தளமாக இதனை பார்க்க முடியும். மு.கா.விலிருந்து எம்.எஸ்.தௌபீக் நீக்கப்பட்டிருக்கலாம், இம்ரான் மஹ்ரூப் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கலாம், என்றாலும் அவர்களுக்கிடையேயான அரசியல் போட்டியையே இங்கு நோக்க முடிகிறது.
இங்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இம்ரானுக்கு சாதகமாக செயற்படுகின்றார்களா இல்லையா என்பது வேறு விடயம், ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் இரண்டாகப் பிரிந்து வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்திருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.
அக்கட்சிகளின் தலைமைத்துவம் என்ன செய்கின்றது? பிராந்திய அரசியலில் கட்சி என்ன தீர்மானங்களை எடுக்கின்றது என்ற கேள்விகள் எழுகின்றன.
இவ்வாறே, மன்னார் பிரதேச சபையிலும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்திருக்கின்றமையை பார்க்கின்றோம். இதுதவிர மேலும் பல உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெவ்வேறான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்களும் ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்திருக்கின்றமையையும் காண்கிறோம்.
பாராளுமன்ற வரவு செலவு திட்டத்தின்போது, மிகவும் ஒற்றுமையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இணைந்து பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்கு முண்டியடித்துக்கொண்டு கட்சியின் தீர்மானத்தையும் மீறி ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரதேச சபையின் பட்ஜட்டுகளை தோல்வியுறச் செய்வதற்கு ஒரு கட்சியினரே இரண்டாக பிரிந்து செயற்பட்டுள்ளனர். இதன் மூலம் பாராளுமன்றில் ஒரு நாடகம் அரங்கேற பிரதேச மட்டத்தில் இன்னொரு அரசியல் கூத்து இடம்பெறுகின்றது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். முஸ்லிம் கட்சிகளின் இவ்வாறான கொள் கைகளும் செயற்பாடும் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.-Vidivelli