(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் உறுப்பினர்கள் மூவரில் ஒருவராக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்திற்கு பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நியமனம் 2021 டிசம்பர் 13 ஆம் திகதியிலிருந்து மூன்று வருட காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றினை முடிவுறுத்துவதற்கும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய நடவடிக்ககைள் மேற்கொள்ளப்படுமென சிராஸ் நூர்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
1993 ஆம் ஆண்டு சிரேஷ்ட சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சிராஸ் நூர்தீன் கடந்த காலங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அரச ஹஜ் குழு, வக்பு சபை என்பனவற்றின் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். மற்றும் 2015 முதல் சமூக சேவையில் அதிக ஈடுபாடுகொண்ட இவர் இனவாதிகளுக்கு எதிராக 124 முறைப்பாடுகளை நீதிமன்றங்களில் ஏனையோர் மூலம் தாக்கல் செய்தவற்கு முன்னின்று செயற்பட்டார். கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஸ்தாபக செயலாளரான இவர் 4 வருட காலம் செயலாளர் பதவியை வகித்துள்ளார். முஸ்லிம் சமூகம் சார் பல்வேறு வழக்குகளில் இவர் ஆஜராகி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றில் மியன்மார் அகதிகள் விவகாரம், டாக்டர் ஷாபி விவகாரம், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 பட்டதாரி மாணவர்கள் கெப்பித்தி கொல்லாவயில் தொல்பொருள் சின்னமான தூபி மீதேறிய சம்பவம், பாத்தியா மாவத்தை பள்ளிவாசல், ஹுணுப்பிட்டி மற்றும் திப்பிட்டிகொட பள்ளிவாசல் விவகார வழக்குகளில் அவர் ஆஜராகியுள்ளார்.
பேருவளை – அளுத்கம வன்செயல்களின்போது முஸ்லிம்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலும் சிராஸ் நூர்தீன் ஆஜரானார். புதுக்கடை நீதிமன்றில் நடைபெற்ற ஞானசார தேரருக்கு எதிரான வழக்கிலும் ஆஜரானார். அத்தோடு கண்டி- திகன வன்முறைகளின் போது இனவாதிகளால் பஸ்வண்டியில் வைத்து தாக்கப்பட்டு பலியான ஸதகதுல்லா மெளலவியின் வழக்கிலும் இவர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் படி 16ஆயிரம் பேரும் ICRC யின் அறிக்கையின்படி 5000 படையினரும் காணாமற்போயுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli