(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சிறுபான்மை மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் விடயத்தில் தமிழ் பேசும் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் தமிழ்,முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் பொதுவான பிரச்சினைகளிலே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தீர்வு விடயத்தில் ஒவ்வோர் கட்சிக்கும் சமூகம் சார்ந்த நிலைப்பாடு இருக்கிறது. எந்தவோர் சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதால் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இது தொடர்பான எந்த ஆவணத்திலும் கைச்சாத்திடவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
13 ஆவது திருத்த சட்டம் உட்பட இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியைக் கோரும்கூட்டு ஆவணமொன்றினை தயாரிப்பதற்கான தமிழ் பேசும் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோதே ரிசாத் பதியுதீன் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ், முஸ்லிம் மக்களினது காணிப்பிரச்சினை, காணாமற்போனோர் பிரச்சினை, நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோர் விவகாரம், ஒரே நாடு ஒரே சட்டம் விவகாரம் மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை, தமிழ் முஸ்லிம் பகுதிகளில் சிங்கள குடியேற்றம், வன இலாகாவின் கெடுபிடிகள் போன்ற விவகாரங்களில் தமிழ் பேசும் கட்சிகளுக்கிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பொது விவகாரங்களில் எங்களுக்கிடையில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தீர்வு விடயத்தில் ஒவ்வோர் கட்சிக்கும் தனித்தனியான நிலைப்பாடு இருக்கிறது. அதனால் எந்த சமூகமும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் தீர்வினை வடிவமைப்பதற்காக தொடர்ந்தும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.-Vidivelli