(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 ஜனாஸாக்களை பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் ஓட்டமாவடி- மஜ்மா நகர் மையவாடிக்கு எடுத்துச் செல்வதற்காக பெருமளவு கட்டணம் செலுத்த வேண்டாமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் பிரதேசங்களிலிருந்து ஜனாஸாவை கொண்டு செல்லும் பிரத்தியேக வாகனத்துக்கு 28 ஆயிரம் ரூபாவே அறவிடப்படுகிறது.
இதேவேளை ஜனாஸாவுடன் பயணிக்கும் உறவினர்களது மேலதிக வாகனத்துக்கு 25 ஆயிரம் ரூபாவே அறவிடப்படுகிறது. இதற்கு மேலதிகமாக கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என கொவிட் 19 செயலணியின் ஜனாஸாக்களுக்கான யாழ் இணைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட கட்டணத்தை விட மேலதிகமாக அறவிடப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
கண்டி
கண்டிப்பகுதியில் நிகழும் கொவிட் 19 ஜனாஸாக்களை குருநாகலைக்கு எடுத்துச் சென்று அங்கு ஒப்படைக்கப்படவேண்டும். அங்கிருந்தே ஜனாஸாக்கள் மொத்தமாக ஓட்டமாவடிக்கு போக்குவரத்து செய்யப்படுகின்றன. கண்டியிலிருந்து குருநாகலைக்கு எடுத்துச் செல்ல ஜனாஸா வாகனத்துக்கு கண்டி மர்க்கஸ் 4000 ரூபாவே அறவிடுகிறது. இதற்கான பற்றுச்சீட்டும் வழங்கப்படுகிறது. என மத்திய மாகாண கொவிட் 19 செயலணியின் இணைப்பாளர் கே.ஆர். ஏ.சித்தீக் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
மேலும் அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;
ஜனாஸாவின் உறவினர்கள் கண்டியிலிருந்து ஓட்டமாவடி செல்வதற்கு அவர்களாகவே வாகனங்களை சுமார் 20 ஆயிரம் ரூபாவுக்குள் ஏற்பாடு செய்து கொள்கின்றனர். அத்தோடு ஜனாஸாக்கான பெட்டியை கண்டி மஸ்ஜித்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்கிறது. என்றும் கூறினார்.
தற்போது கொவிட் ஜனாஸாக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இம்மாதம் யாழ் பகுதியிலிருந்து ஒரேயொரு ஜனாஸாவே ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.-Vidivelli