காதி நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாமையால் மக்களுக்கு சிரமம்
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
25 காதி நீதிமன்ற நிர்வாகப் பிரிவுகளின் பதவி வெற்றிடங்களுக்கு புதிதாக காதி நீதிபதிகளை நியமிப்பதற்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டும் அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள காதிநீதிபதிகள் போரத்தின் உபதலைவர் இப்ஹாம் யெஹ்யா, இவ்விவகாரம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சஞ்சீவ சோமசிங்கவை கடிதம் மூலம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. “ நாட்டில் இயங்கிவரும் 65 காதிநீதி மன்றங்களில் கடமையாற்றும் காதிநீதிபதிகளில் 46 பேரின் பதவிக்காலம் இம்மாதம் இறுதியுடன் காலவதியாகிறது (2021.12.31) இவற்றில் 25காதிநீதிமன்றங்களுக்கு புதிய நியமனம் வழங்குவதற்காக வர்த்தமானி அறிவித்தல் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பலமாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை இதுவரை நடத்தப்படவில்லை.
மேலும் 13 காதி நீதிபதிகள் இராஜினாமா, பதவிவிலகல், இறப்பு காரணமாக வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விடங்களுக்கு அப்பிரிவுகளுக்கு அண்மித்த பகுதியில் உள்ள காதிநீதிபதிகளே பதில் காதிநீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் தமது தேவைகளுக்காக தங்கள் பிரதேசத்திலிருந்து வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான வழக்குகள் காதிநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
தற்போது காதிநீதிமன்ற கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. எனவே விரைவாக உரிய நடவடிக்ககைளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம் எனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli