(எஸ்.ஏ.பறூஸ்)
கிண்ணியா நகர சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது வாசிப்பின்போதும் தோல்வியடைந்ததையடுத்து நகர பிதா எஸ்.எச்.எம்.நளீம் பதவி இழந்துள்ளார்.
கிண்ணியா நகர சபையின் முதலாவது வாசிப்பு கடந்த 14 ஆம் திகதி சமர்பிக்கப்பட்டது. இதன்போது, ஆதரவாக 5 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து 14 நாட்களுக்கு மீண்டும் வரவு செலவு திட்டத்தை நகர பிதா எஸ்.எச்.எம்.நளீம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். இந்நிலையில், இரண்டாம் வாசிப்பின்போது ஆதரவாக ஐந்து வாக்குகளும் எதிராக எட்டு வாக்குகளும் அளிக்கப்பட்டன.
முதலாம் வசிப்பின் போதும், இரண்டாம் வாசிப்பின்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருவரும் முதலாம் வாசிப்பின்போது எதிராக வாக்களித்தனர். முதலாம் வாசிப்பின்போது வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் இரண்டாம் வாசிப்பின்போது வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.
இந்நிலையில், கிண்ணியா நகர சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையும் தோல்வியடைந்ததையடுத்து நகர பிதா எஸ்.எச்.எம்.நளீம் பதவி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli