பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான தடுத்து வைப்புக்கள் உயரதிகாரிகளை சந்தித்தது மனித உரிமை ஆணைக்குழு
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர்ப் பட்டியலையும் பெற்றுக் கொண்டது
(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு நேற்று விஷேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்டப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளர்கள் பம்பலபிட்டியில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டே இந்த கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், மேலும் பலரும் பல விடயங்கள் தொடர்பில் அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அச்சட்டத்தின் பிரயோகம், தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் நலன்கள், சட்டப் பின்னணி உள்ளிட்ட விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டதாக அறிய முடிகிறது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க தலைமையில், ஆணைக் குழுவின் உறுப்பினர்களான அனுஷ்யா சண்முகநாதன், விஜித்த நாணயக்கார, விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்களான சுலாரி லியனகே, நிஹால் சந்திரசிறி ஆகியோர் இந்த விளக்கம் கோரும் கலந்துரையாடலில் ஆணைக் குழு சார்பில் பங்கேற்றனர்.
அத்துடன் ஆணைக் குழுவின் அறிவித்தலுக்கு அமைய, சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹன் பிரேமரத்ன, சி.ரி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ், பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தர்ஷன கால்லகே ஆகியோர் ஆஜராகினர்.
அவர்களுக்கு, தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு தலையீடு செய்வதற்குள்ள சட்ட அனுமதி மற்றும் பின்னணியை தெளிவுபடுத்தியது. தடுப்பில் உள்ளோரை எந்த நேரத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகள் சந்திக்க முடியும் என்பதையும் இதன்போது ஆணைக் குழு தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன் தற்போதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள், சட்டப் பின்னணி தொடர்பில் தேவையான ஆவணங்களையும் பெற்றுக்கொண்ட ஆணைக் குழு, தடுப்பிலுள்ளோரின் நலன்கள் தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்தியுள்ளது.
இந் நிலையில் முன் வைக்கப்பட்ட ஆவணங்களை ஆராயவுள்ள ஆணைக் குழு, இதே விவகாரம் தொடர்பில் கலந்துரையாட இன்று சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கும் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுமார் 300 க்கும் அதிகமானோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எதுவித குற்றச்சாட்டுக்களும் இதுவரை சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கேள்வியெழுப்பியிருந்தன. இந் நிலையிலேயே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட்டுள்ளதுடன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு முக்கிய அங்கமாகவே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Vidivelli