கலாநிதி எம்.சீ.ரஸ்மின்
அறிமுகம்
இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 96 ஆவது வருட நிறைவை முன்னிட்டு கடந்த டிசம்பர் 21ஆம் திகதி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகிய பாரம்பரியம் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் பாத்திமா ரினூசியா இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினார்.
பொது சேவை ஒலிபரப்பு (Public Service Broadcasting) உலகளாவியரீதியில் தோல்வியடைந்து வருகின்றது. அது ‘அரச ஒலிபரப்பாக’ தரமிறங்கிக்கொண்டிருப்பது இதற்கான பிரதான காரணமாகும். ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் கைப்பிடிக்குள் சிக்குண்டுள்ள பொது ஒலிபரப்பு பெரும்பாலும் அரசாங்கத்தின் பிரசார வாகனமாகவே பயன்படுகின்றது. சுயாதீன ஒலிபரப்பு ஆணைக்குழு இன்மை இலங்கை போன்ற நாடுகளில் பொது ஒலிபரப்பை அதிகம் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கான ஒலிபரப்பு என்பது யதார்த்தமற்ற ஒரு கோட்பாடாக மாறிவிட்டது.
எனினும் கடந்த பல தசாப்தங்களாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் முஸ்லிம் சேவை இன்றுவரை இலங்கை முஸ்லிம்களின் இதயமாகவும் ஆன்மாவாகவும் இருந்து வருகின்றது. கடந்த ஒரு தசாப்தத்தில் ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்தபோதும் அதன் சமூக அறுவடை காலத்தால் அழியாதது என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
முஸ்லிம் சேவையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் சில இடம்பெற்றுள்ளன. ஏராளமான சிறு கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. எனினும் முஸ்லிம் ஒலிபரப்பின் தொடக்கப் புள்ளி தொடர்பில் சற்று தெளிவீனம் இருந்து வருகின்றது. முறையான ஆய்வுகள் இடம்பெறாமை இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்க முடியும்.
கட்டுரையின் நோக்கம்
குறிப்பாக சுமார் 60களுக்கு முற்பட்ட முஸ்லிம் சேவையின் வரலாற்றைத் தேடிப்பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். இது ஒரு ஆரம்ப முயற்சி மாத்திரமே. இதில் பல விடுபடுதல்கள் இருக்க முடியும். போதாமைகளும் இருக்கலாம். நேர்த்தியான வரலாற்று ஆவணம் இனிமேலாவது எழுதப்பட இது ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கலாம்.
நதி மூலம்
பிரபல சிங்கள ஊடக ஆய்வாளரான கலாநிதி நந்தன கருணாநாயக்க எழுதிய இலங்கை ஒலிபரப்பு வரலாறு தொடர்பான ஆய்வில் 1937ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதன் முதலில் சிங்களத்தில் புனித அல்குர்ஆன் ஓதல் இடம்பெற்றதாகவும் இதில் மௌலவி எச். எம். எஸ். சலாஹுத்தீன் அவர்கள் பங்கெடுத்ததாகவும் குறிப்பிடுகின்றார். இதனை இப்போதுள்ள முஸ்லிம் சேவையுடன் நேரடியாக தொடர்புபடுத்த முடியாவிட்டாலும் முஸ்லிம்களுக்கான ஒலிபரப்பின் தோற்றுவாயாக இதனை கருதுவதில் தவறில்லை.
இதனைத் தொடர்ந்து 1940 ஒக்டோபர் 28ஆம் திகதி சேர் ஜோன் கொத்தலாவல ஒலிபரப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கான கே. வைத்தியநாதன் குழுவை நியமித்தார். இதில் எச்.எம்.எம். கஸ்ஸாலி என்பவர் இடம்பெற்றார். கே.வைத்தியநாதன் குழு உருவாக்கப்பட்ட அடுத்த ஆண்டு (1941) மற்றுமொரு விசேட குழுவும் நியமிக்கப்பட்டது. ஒலிபரப்பு மேம்பாடு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதே இக்குழுவின் நோக்கமாகும். இக்குழு நிகழ்ச்சி ஆலோசனைக் குழுவில் ஒரு முஸ்லிம் அங்கத்தவரும் இடம்பெற வேண்டும் என்பதை பரிந்துரை செய்தது. இஸ்லாமியர்களை இலக்காகக் கொண்ட சில நிகழ்ச்சிகள் இக்காலத்தில் இடம்பெற்றிருப்பதையே இது குறிக்கின்றது.
தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் திகதி ஒலிபரப்பு நிலையம் பொரல்லை கொட்டா வீதிக்கு மாற்றப்பட்டது. டொரிங்டன் மையம் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு வரை வானொலி ஒலிபரப்பு கொட்டா வீதியிலிருந்தே இடம்பெற்றது. இதில் அவ்வப்போது இஸ்லாமிய நிகழ்ச்சிகள் கணிசமான அளவு இடம்பெற்றுள்ளன. எனினும் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கென்று தனியான நிகழ்ச்சி நிரல் இருக்கவில்லை. அதிகமான முஸ்லிம் பாடகர்கள் இக்காலத்தில் இஸ்லாமிய கீதங்களை பாடியுள்ளனர். மர்ஹூம் எம். ஏ. ஹசன் அலியார் (1946) முதன் முதலில் இஸ்லாமிய கீதங்களைப் பாடியுள்ளார். இவரைத் தொடர்ந்து எம். எம். ஹுசைன் (1947) மற்றும் எம். முஹம்மது அலி (கலாநிதி. என். எம். நூர்தீன் அவர்களின் சகோதரன்) போன்றோர் பாடியுள்ளனர்.
இக்காலத்தில் தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராகவிருந்த சேர். ரீ.பி. ஜாயா வானொலி ஒலிபரப்பில் முஸ்லிம் சமூகம் பயனடைய வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். 1948 செப்டம்பர் 11ஆம் திகதி பாகிஸ்தானின் ஸ்தாபகத் தந்தை முகம்மது அலி ஜின்னா அவர்கள் வபாத்தானபோது முஸ்லிம்கள் மாத்திரமன்றி முஸ்லிம் அல்லாதவர்களும் வானொலி வாயிலாக மரணத்துயரை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு இடம்பெற்றதில் சேர்.ரீ.பி.ஜாயாவுக்கு அதிக பங்குண்டு. இதனைத் தொடர்ந்து விசேட தினங்களிலும் முஸ்லிம்களுக்கான சில நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன.
1947ஆம் ஆண்டு மற்றுமொரு முக்கியமான நிகழ்வு இடம்பெற்றது. ஜூலை – ஆகஸ்ட் முழுவதும் பாடகர்களுக்கான குரல் தேர்வு இடம்பெற்றது. இதற்காக பாத்கண்டே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரத்ன ஷங்கர் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். சிறினிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இதில் 310 தமிழ் பாடகர்களும் 21 முஸ்லிம் பாடகர்களும் பங்குபற்றினர். எத்தனை முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.
அதேவேளை 1947 டிசம்பர் 14 ஆம் திகதி மௌலவி எச். எஸ். எம்.சலாஹுதீன் அவர்கள் மீண்டும் குர்ஆன் உரை நிகழ்த்துவதற்காக அழைக்கப்பட்டதாக நந்தன கருணாநாயக்க எழுதுகின்றார். இது முஸ்லிம்களின் ஆன்மிகத் தேவையினை வானொலி நிலையம் உணர்ந்திருந்தது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
1951 ஆம் ஆண்டு பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ் அவர்கள் அப்போது முஸ்லிம் நிகழ்ச்சிக்கான தனியான அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். இவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், மொழி, சமயம், தத்துவம் போன்றவற்றில் அதிக புலமை கொண்டவராக காணப்பட்டார். இவர் கடமைபுரிந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வானொலி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான ஆய்வில் அப்போது 4997 தமிழர்களும் 2646 முஸ்லிம்களும் வானொலி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றிருந்ததாக அறியப்பட்டது. நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக 1953 ஏப்ரல் 11 இல் பேராசிரியர் எம். எம். உவைஸ் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன் பின்னரே முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்குத் தனியான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வெள்ளி இரவுகளில் அல்குர்ஆன் விளக்கம், மற்றும் கிராஅத், ஏனைய தினங்களில் வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.
1950களுக்குப் பின்னர் முஸ்லிம் நிகழ்ச்சி சில நடைமுறைச்சிக்கல்களை எதிர்கொண்டது. நிகழ்ச்சிகள் இடைநடுவே நிறுத்தப்பட்டன. நேரடி ஒலிபரப்புகள் தன்னிச்சையாக நிறுத்தப்பட்டன. சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் நடத்திய வருடாந்த அல்குர்ஆன் மனனப் போட்டியின் ஒரு மணிநேர நேரடி ஒலிபரப்பு தன்னிச்சையாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சேர். ராசிக் பரீட் அவர்கள் பாராளுமன்றத்திலும் எடுத்துக் கூறியுள்ளார். ஆண்டுதோறும் சுமார் 12 நேரடி ஒலிபரப்புக்களை ஏனைய சமய நிகழ்ச்சிகளுக்கு வழங்க முடியும் என்றால் ஏன் ஒரு நேரடி ஒலிபரப்பை இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு வழங்க முடியாது எனக் கேள்வியெழுப்பினார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மௌலவி டப்ளிவ். எல். எச். எம் ராமிஸ் ஆலிம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட மௌலிது நிகழ்வு 1952 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதியன்று காலை 7.15 தொடக்கம் 7.45 வரை இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இதற்கான முன்கூட்டிய அனுமதியும் பெறப்பட்டிருந்தது. எனினும் இந்த நிழ்ச்சி ஏற்கவே – 1951ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியொன்றின் மறு ஒலிபரப்பு என்பதாகக் கூறி நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சோனக இஸ்லாமிய நிலையம் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தது. இது கலாசார நிலையம் 1951ஆம் ஆண்டு புனித அல்குர்ஆன் மனனப் போட்டியொன்றை நடத்தியது என்பதையும் அதன் தொகுப்பு அல்லது நேரடி ஒலிபரப்பு இலங்கை வானொலியில் இடம்பெற்றுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
முஸ்லிம் ஒலிபரப்பின் முதலாவது மைற்கல்
முஸ்லிம் ஒலிபரப்பு வரலாற்றில் மிகமுக்கியமான மைற்கல்லாக 1953ஆம் ஆண்டு அமைகின்றது. இவ்வாண்டு என். ஈ. வீரசூரிய தலைமையில் ஒலிபரப்பு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழுவில் ஏ. எச். எஸ். இஸ்மாயில் அங்கத்தவராக நியமிக்கப்பட்டார். இதன் செயலாளராக கலாநிதி ஏ. எம். சஹாப்தீன் கடமையாற்றினார். இக்குழுவின் பரிந்துரைகள் முஸ்லிம் சேவையின் தோற்றுவாயில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலும் தமிழ் சேவையின் கீழ் இயங்கிவந்த முஸ்லிம்களுக்கான ஒலிபரப்பு தனியானதொரு முஸ்லிம் நிகழ்ச்சி அலகாகவும் சுதந்திரமான தனிப் பிரிவாகவும் நிறுவப்படவேண்டும் என இக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.
பரிந்துரைகளை முன்வைக்க முன்னர் இவ்வாணைக்குழு முஸ்லிம் நேயர்களிடமும் நிறுவனங்களிடமும் கருத்துக்களைக் கேட்டுத் தொகுத்துள்ளனர். பல நேயர்கள் எழுத்துமூல முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர். குறிப்பாக சோனக வானொலிக் கலைஞர்கள் சங்கம், அகில இலங்கை சோனகர் சங்கம், வை.எம்.எம்.ஏ., அகில இலங்கை முஸ்லிம் லீக், சோனகர் இஸ்லாமிய கலாசார நிலையம் என்பன முஸ்லிம்களுக்கான தனியான ஒரு சேவை உருவாக்கப்பட வேண்டும் என்பதை எழுத்துமூலம் வலியுறுத்தியிருந்தன.
தமிழ் சேவையின் நேரடிக் கண்காணிப்பிலிருந்தபோது இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு போதிய அவதானம் செலுத்தப்படாமையை ஆணைக்குழு மிகக்காத்திரமாகப் பதிவு செய்திருக்கின்றது. முஸ்லிம் கலைஞர்களும் ஒலிபரப்பாளர்களும் சில கசப்பான அனுபவங்களைச் சந்தித்ததையும் ஆணைக்குழு பதிவு செய்துள்ளது. அப்போது போதிய வானலை நேரங்கள் இருந்தபோதிலும் முஸ்லிம் நிகழ்ச்சிகள் இறுதிக்குறியிசையை நிறைவு செய்ய முதல் நிறுத்தப்பட்ட கசப்பான அனுபவங்கள் இடம்பெற்றுள்ளமை பதிவாகியுள்ளது. முஸ்லிம்களால் எழுதப்பட்ட வானொலி பிரதிகள் நியாயமற்ற காரணங்களால் நிராகரிக்கப்பட்டதும் பதிவாகியுள்ளது.
முஸ்லிம் நிகழ்ச்சி அலகு ஒன்றின் தோற்றத்திற்கான போதிய பின்புலம் இருப்பதை ஆணைக்குழு உள்வாங்கிக் கொண்டது. அப்போது ஆணைக்குழு தமிழ் ஆலோசனைக்குழு தலைவரிடம் கருத்துக்களை கேட்டது. அவர் வழங்கிய கடிதத்தில் “தனியான முஸ்லிம் பிரிவு உருவாக்கப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அது தமிழ் சேவையின் ஒரு தனி அலகாக இருக்கலாம். தமிழ் சேவை முஸ்லிம் பிரிவின் தேவைகளை நிறைவு செய்யலாம். ஆனால் தனியான அலைவரிசை ஒன்றைப் பெற்றுக்கொடுப்பது சாத்தியமற்றதாக அமையும்” எனக் குறிப்பிட்டார். அப்போது முஸ்லிம் அலகு தனியான முஸ்லிம் அமைப்பாளர் ஒருவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அமைய வேண்டும் என தமிழ் ஆலோசனைக் குழுவின் முஸ்லிம் உறுப்பினர் குறிப்பிட்டார். அத்தோடு தமிழ் சேவை தினமும் 6½ மணிநேரம் ஒலிப்பதால் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு 1½ மணிநேரம் வேண்டும் எனவும் அவர் தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவித்தார். இக்காலத்தில் 24397 தமிழர்களும் 7293 முஸ்லிம்களும் வானொலி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தனர். எனவே இதனைப் பிரதிபலிக்கும் வகையில் ஒலிபரப்புக்காலம் 30 நிமிடங்கள் போதாது என்றும் பதியப்பட்டது. மிகமுக்கியமாக 6.30 ற்கும் 7.30 ற்கும் இடம்பெற்ற முஸ்லிம் நிகழ்ச்சிகள் முஸ்லிம்களின் இரண்டு தொழுகை நேரங்களைப் பாதிப்பதால் நிகழ்ச்சி நேரம் மாற்றப்பட வேண்டும் எனப்பட்டது.
அதே நேரம் ஆணைக்குழுவின் பந்தி 143 (பக்கம் 56) பின்வருமாறு தனது பரிந்துரையை பதிவு செய்கின்றது. “முஸ்லிம்களை மையமாகக் கொண்டு ஒலிபரப்பாக்கப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியும் முஸ்லிம்களின் தொழுகை நேரத்தை பாதிக்கக்கூடாது எனும் அடிப்படை நிபந்தனையை அங்கீகரிக்க வேண்டும்.” 30 நிமிட ஒலிபரப்புக்காலம் போதாது எனக் கருதிய ஆணைக்குழு காலை 8.00 மணி தொடக்கம் 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. அத்தோடு ஞாயிறு தினங்களில் காலை 10.00 மணி -11 மணி வரை முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பது மற்றுமொரு பரிந்துரையாகும். இந்த ஆணைக்குழுவே முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்காக தனியான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதைப் பதிவு செய்தது. தமிழ் சேவையின் நேரடித்தலையீடு இன்றி பிரதிநிகழ்ச்சிப் பணிப்பாளருக்கு முஸ்லிம் பிரிவு பொறுப்புக்கூற வேண்டும் என்பதும் நியதியாகியது.
1953ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் அழுத்தமான சில பரிந்துரைகளை கவனிப்பது முக்கியம். சமய நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு நேரம் வழங்கப்பட வேண்டும் என்ற உரையாடல் ஆணைக்குழுவின் முன் கொண்டுவரப்பட்டது. அப்போது ஒரு வாரத்திற்கு ஒலிபரப்பாக்கப்படும் மொத்த வானலை நேரத்தில் 10வீதம் மாத்திரமே சமய நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டை ஆணைக்குழு உறுதியாகக் கொண்டிருந்தது.
எவ்வாறாயினும் 1952ஆம் ஆண்டு முதல் சமய நிகழ்ச்சிகளுக்கான நேர ஒதுக்கீடு பின்வரும் அடிப்படையில் அமைந்திருந்தது (பார்க்க அட்டவணை). அதாவது, ஒரு வாரத்தின் மொத்த ஒலிபரப்புக் காலத்தில் 10வீதமான நேரம் சமய நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த நேர ஒதுக்கீடு தொடர்பாக காரசாரமான விமர்சனங்கள் வெளிவந்தன. நேர ஒதுக்கீடு தொடர்பான இறுதித்தீர்மானம் 1953 ஜூன் மாதம் வெளியானபோது கிறிஸ்தவ ஆலோசனைக்குழுவும் கிறிஸ்தவ சமய நிறுவனங்களும் இதில் திருப்தியடையவில்லை. சமய நிகழ்ச்சிகளுக்காக இதனைவிட அதிகமான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும் ஆணைக்குழு இந்த நேர ஒதுக்கீட்டில் எந்த அதிகரிப்பையும் பரிந்துரைக்கவில்லை.
1954 ஆம் ஆண்டு மார்ச் மூவர் அடங்கிய குழு ஒன்று அப்போதைய ஒலிபரப்புச் செல்நெறிகளை அவதானிக்க டில்லிக்கும் இந்தியாவிலுள்ள இரண்டு பிராந்திய நிலையங்களுக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இதில் கலாநிதி ஏ. எம். சஹாப்தீனும் இடம்பெற்றார். அங்கு ஒலிபரப்பு உத்தி தொடர்பான பல தரவுகளை அவர் ஆவணப்படுத்தினார். அகில இந்திய ஒலிபரப்பு உத்திகள், நிகழ்ச்சித்தரம், சமயம்சார் உள்ளடக்கங்கள், இஸ்லாமியர்களின் இசைவழக்காறு என்பனவற்றை பதிவு செய்தார். அந்த அறிவினை அவர் ஆணைக்குழு அறிக்கை எழுத பயன்படுத்தினார். முக்கியமாக, இந்த நேர அளவு போதியது என்றும் இதில் மாற்றத்தை எற்படுத்துவதற்கான தேவை இல்லை எனவும் கருதப்பட்டது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு, மௌலீது மனாகிப்கள், ஹதீதுகளை முதன்மைப்படுத்திய உரைகள், கிராமியப் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், அரபு, உருது, மலே பாணிகளில் அமைந்த இசைகள் நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்ளப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வாரமொன்றிற்கு 7 மணித்தியாலங்களாக அமையும் முஸ்லிம் நிகழ்ச்சிகள் 2 மணி நேரம் சமயத்திற்கும் 5 மணி நேரம் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஒதுக்கப்படலாம் எனப்பட்டது.
அதேவேளை 1953ஆம் ஆண்டு ரமழான் விஷேட நிகழ்ச்சிகள் இடம்பெற்றதாகவும் தென்னிந்தியப் பாடகர் இசை முரசு ஈ.எம். நாகூர் ஹனிபா இலங்கைக்கு அழைக்கப்பட்டதாகவும் சில பதிவுகள் உள்ளன. இஸ்லாமிய நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்வதற்காக ஒலிப்பதிவுக் குழு மட்டக்களப்பிற்குச் சென்று நாட்டார் பாடல்கள் பலவற்றை ஒலிப்பதிவு செய்ததாகவும் அறிய முடிகின்றது. ஆணைக்குழு அறிக்கையின் பல பகுதிகள் (ஆணைக்குழு அறிக்கை பக்கம் 83, 84) முஸ்லிம் நாட்டார் வழக்கினை உள்வாங்குவது முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கையை வாசிக்கும்போது அதன் செயலாளரான கலாநிதி தேசமானிய ஏ.எம். சஹாப்தீன் அவர்களும் அதன் அங்கத்தவர் ஏ.எச்.எம். இஸ்மாயில் அவர்களும் பாரிய சமூகப்பணியாற்றியமை தெரிகின்றது. இருவரும் ஒலிபரப்பாளர்கள் இல்லாவிட்டாலும் நேர்த்தியான முஸ்லிம் ஒலிபரப்பு இலங்கை முஸ்லிம்களின் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்கு அதீத பங்காற்ற முடியும் என்பதை நன்கு தெரிந்திருந்தார்கள். இருவரது சமூக பிரக்ஞையும் தூரதரிசனமும் பின்னாளில் முஸ்லிம் சேவை ஒரு பள்ளிக்கூடம் போல, பல்கலைக்கழகம் போல வளர வழிவகுத்தது.
ஆணைக்குழுவின் பின்வரும் வாசகங்கள் எதிர்காலத்தில் முஸ்லிம் சேவை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன. “எவ்வாறாயினும், ஆக்க பூர்வமான விடயங்களுக்காக நேரம் ஒதுக்காதவரை முஸ்லிம் சமூகத்தின் கலாசார மேம்பாட்டுக்கான பெறுமதிமிக்க பாரம்பரியம் ஒன்றை உருவாக்க முடியாது.” இது கலை, கலாசார, பண்பாட்டு செழுமைமிக்கதாக சமூகமும் ஒலிபரப்பும் அமைய வேண்டும் எனும் தாகத்தை வெளிப்படுத்துகின்றது.
1954 ஆம் ஆண்டு இஸ்லாமிய நிகழ்ச்சிக்களுக்கான தனியானதொரு ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. இக்குழு அமைக்கப்படுவதில் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்திற்கு அதிக பங்குண்டு. இதில் எம்.ஐ.எம்.ஹனிபா, எஸ்.எம்.எச். மஸூர், எம்.கே.எம். அபூபக்கர், பீ.ஜே.எச்.பாஹர் (ஆசிரியர்) போன்றோர் இடம்பெற்றனர். இவர்களுள் எம்.ஐ.எம். ஹனிபா தமிழ் ஆலோசனை குழுவிலும் உறுப்பினராக இருந்தார். இதே குழு 1955ஆம் ஆண்டும் சேவையில் இருந்தது. 1954ஆம் ஆண்டு தமிழ் சேவையில் வாராந்த ஒலிபரப்பு நேரம் 47 மணிநேரமாகக் காணப்பட்டது. இதில் 3.7 வீத கால அளவு, அதாவது தினமும் ஒன்றே முக்கால் மணித்தியாலம் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்காக வழங்கப்பட்டன.
1953 ஜூலை 6ஆம் திகதி முதல் தினமும் 30 நிமிடங்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழ் சேவையில் இடம்பெற்றதாக சில குறிப்புகள் உள்ளன. முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மர்ஹூம் இசட் எல். எம். முஹம்மத் தன்கைப்பட எழுதிய ஆவணம் ஒன்றில் 1953 ஜூலை 6ஆம் திகதியே முதல் 30 நிமிட நிகழ்ச்சி தொடங்கியதாக குறிப்பிடப்படுகின்றது. 1953 ஆம் ஆண்டு ஒலிபரப்பு ஆணைக்குழு தம் பணிகளை ஆரம்பிக்க முன்னரே 30 நிமிட நிகழ்ச்சிகள் தமிழ் சேவையில் தினமும் இடம்பெற்றதாகக் குறிப்பிடுகின்றது.
1953 ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் அறிமுகத்தின் பின்னர் 1954களில் முஸ்லிம் நிகழ்ச்சிகள் 30நிமிடம் ஒலிபரப்பாகின. இவ்வாண்டுக்குரிய பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் இவ்வாண்டு பேருவளை வருடாந்த அஞ்சல், கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை மற்றும் சொற்பொழிவு சாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற மிஹ்ராஜ் இரவு நிகழ்வுகள் என்பனவற்றுடன் மக்கள் பங்கேற்புடனான ஒலிப்பதிவு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதாகவும் அறிய முடிகின்றது. இக்காலத்தில் ஆங்கில சேவையில் வாரந்தோறும் 15 நிமிட நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்போது வாரத்தில் 60 மணி நேரங்கள் ஆங்கில சேவை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
இவ் ஆரம்பக்கால முஸ்லிம் நிகழ்ச்சிகளை நடத்தியவர்களுக்கு சோனக இஸ்லாமிய காலாசார இல்லம் பல்வேறு வழிகளில் உதவியுள்ளது. குறிப்பாக 1952 – 1960 வரை மக்கள் அவை உறுப்பினராக இருந்த சேர். ராஸிக் பரீட் அவர்களின் ஸ்தாபகத் தலைவராக இருந்த கலாசார இல்லம் முஸ்லிம் வெளியிலிருந்து வரும் உலமாக்களுக்கு சன்மானங்களை வழங்கியது.
வெளியிலிருந்து வரும் கலைஞர்களுக்கு தெமட்டகொடவில் இருந்த ‘பாஷா விலா’ இல்லத்தில் இலவசத் தங்குமிட வசதிகள் செய்து கொடுத்தது. வானொலியில் முதன்முதலில் அதான் கூறிய ராமிஸ் ஆலிமை ஏற்பாடு செய்ததும் இவர்களே. முஸ்லிம்களுக்கான தனியான நிழ்ச்சிகளை வழங்குவது ஒரு சுமையாகப் பார்க்கப்பட்டபோது சேர் ராஸிக் பரீட் அவர்கள் கலாசார இல்லத்தின் மூலம் அவற்றை பொறுப்பெடுக்க முடியும் எனத் துணிந்து கூறியுள்ளார். அப்போது முஸ்லிம் விவகாரங்களுக்கான தனியான திணைக்களம் இல்லாததால் முஸ்லிம் ஒலிபரப்புக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க அவர் சோனக இல்லத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
இரண்டாவது மைற்கல்
1956 ஆம் ஆண்டு ஒலிபரப்பு மேம்பாடு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க ஹுலுகல்ல குழு நியமிக்கப்பட்டது. இக்குழு 1953ஆம் ஆண்டு என்.ஈ. வீரசூரிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நுணுக்கமாக கவனித்தனர். இக்குழு முஸ்லிம் நிகழ்ச்சிகளை ஒரு மணி நேரமாக முன்னர் வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இதே ஆண்டு சிங்கள மரிக்கார் என அழைக்கப்பட்ட சீ.ஏ.எஸ்.மரிக்கார் ஒலிபரப்புக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்துள்ளார். இதேயாண்டு மர்ஹும் காமில் மரைக்கார் முஸ்லிம் சேவையில் நியமனம் பெற்றார். இதே ஆண்டு (தயாரிப்பு உதவியாளர்) பெப்ரவரி மாதம் இசட்.எல்.எம். முஹம்மத் அவர்கள் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார்.
நந்தன கருணாநாயக்கவின் கட்டுரையில் 1956ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முஸ்லிம் சேவை தனியாக ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றார். இவ்வாண்டுக்கான பணிப்பாளர் நாயக அறிக்கையில் 1956ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முஸ்லிம் ஒலிபரப்பு 1 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றது. அதேபோன்று ஞாயிறு முஸ்லிம் பாடசாலைகளுக்கான நேரமும் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாண்டு சோனக இஸ்லாமிய கலாசார இல்லம் புனித அல்குர்ஆன் மனனப்போட்டி ஒன்றை நடத்தியுள்ளது. அத்தோடு ஏறாவூரில் அல்குர்ஆன் மாநாடு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. தெமட்டகொட முஸ்லிம் லீக் மௌலிது ஷரீப் நிகழ்வினை நடத்தியுள்ளது. கெச்சிமலை புகாரி மஜ்லிஸும் இடம் பெற்றுள்ளது. இதேயாண்டு ‘ஆயிரத்தோர் இரவுகள்’ நாடகமாக்கப்பட்டு தொடர்ந்து 15 வாரங்கள் ஒலிபரப்பப்பட்டன. 1958 ஆம் ஆண்டு கொழும்பு பிளான் தொழிநுட்ப பங்களிப்புச் செயற்திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிய ஒலிபரப்பு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ராஷித் அஹ்மத் முஸ்லிம் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க அழைக்கப்பட்டார்.
முஸ்லிம் சேவை செழுமைமிக்க ஒரு கல்விக்கூடமாக வளர சேர். ரீ.பி. ஜாயா (1947 –1950), சேர். ராஸிக் பரீட் (1952 -1962), அமைச்சர் சீ. ஏ. எஸ். மரிக்கார் (1956), கலாநிதி பதியுதீன் மஹ்மூத் (1960-1970) ஆகியோர் அளப்பெரும் பங்காற்றியுள்ளனர். கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் பங்கு தனியாகப் பேசப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்துவந்த அரசியல் தலைவர்கள் பலர் முஸ்லிம் சேவைக்கான தமது பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவற்றை இன்னுமொரு கட்டுரையில் கலந்துரையாட வேண்டும்.
இறுதியாக, முஸ்லிம் சேவை என்பது ஒரு நீண்ட கட்டிடத் தொகுதி போன்றது. அதில் சிலர் அத்திவாரமாக இருந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் அந்தக் கட்டிடத்தின் பல்வேறு பதிகளாக இருந்துள்ளனர். ஒவ்வொருவரது பங்களிப்புக்கும் தனியான பெறுமானம் உண்டு. கடந்த ஒரு தசாப்தத்தில் இச்சேவையை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பேசுவதும் இக்கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் அது தனியாக பேசப்பட வேண்டும்.- Vidivelli