காவியுடை அரசியலின் புதிய அத்தியாயம் ஆரம்பம்
திஸரணீ குணசேகரா
தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்
மதகுருக்கள், சுதேச வைத்தியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், யுத்த வீரர்கள், இளைஞர்கள் என்ற இந்த ஏழு மகாசக்திகளும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்கள் பதவிக்குவர உதவிய மாபெரும் மந்திர கோல்களாகும். கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகி இரண்டாண்டு பூர்த்தியடையும் விழாவும் மகிந்த ராஜபக்சவின் 76ஆவது பிறந்த தினமும் கொண்டாடப்படும் போது இந்த மாபெரும் மந்திர சக்தியில் கீறல் விழுந்து சிதைவடைந்து காணப்படுகிறது என்ற உண்மையை வேறு எவரையும் விட அவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே நம்பக்கூடியதாக உள்ளது.
இரண்டாண்டு பூர்த்தியாகும் போது ஏழு மகாசக்திகளில் இரண்டு மட்டுமே எஞ்சியிருப்பதாக கூறப்படுவது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் யுத்த வீரர்களும் மகாசங்கங்களும் தான் ஓரளவுக்கேனும் ராஜபக்சாக்களுடன் கைகோர்த்துள்ளனர் என்று தெரிகிறது. எனவே எதிர் காலத்தை வெல்ல வேண்டுமானால் சிங்கள பௌத்த மக்களின் ஏகபாதுகாவலர்கள் என்ற கொடியை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டிய தேவை அவசியம் ராஜபக்சாக்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பொறுப்பில் நியமித்ததுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்குகளிடம் மீண்டும் சரணடையும் அரசின் புதிய அரசியல் வியூகம் இப்போது பல படிகளைக் கடந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் தோலுரித்துக் கொண்டிருந்த முருத்தட்டுவேகம ஆனந்த தேரரை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்தமை, களனிய மகா விகாராதிபதி மஹிந்த சங்கரக்கித தேரரை களனிய பல்கலைக்கழக வேந்தராக நியமித்தமை மேலும் சில உதாரணங்களாகும். ராஜபக்ச ஆதரவு பிக்குகளுக்கு புதிய பதவிகளும் கௌரவங்களும் வழங்குதல் கிட்டிய எதிர்காலத்தில் வெகுவாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றின் நோக்கம் எதிர்கால ராஜபக்ச அரசியலில் பிக்குகளை பரவலாக முன்னிலைப்படுத்துவதாகும்.
இந்தப் புதிய உத்தியின் பெறுபேறுகள் இப்போதே வெளிப்படத் தொடங்கியுள்ளன. மாதக்கணக்கில் மௌனம் சாதித்த சிங்கள ராவய, ராவணா பலய மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளமை தெரிகிறது. கோட்டாபயவின் சேதனப் பசளைத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஊடக மாநாடுகளை அவர்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்த அமைப்புகளின் தலைமைப் பிக்குமார் விவசாய அமைச்சரைச் சந்தித்து சேதனப் பசளைச் செயற்திட்டத்திற்குப் பூரண ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து இந்த விடயம் தொடர்பாக விளக்கமளிக்கவும் அவர்கள் முன்வருவதாகவும் அறிவித்துள்ளனர்.
முப்பதாண்டு யுத்தத்தை நினைவூட்டும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘சந்நகிரிசாய’ கட்டடத் தொகுதியை பிக்குகளுக்குப் பூஜையாக வழங்கி வழிபடும் வைபவமும் மகிந்தவின் பிறந்த நாளில் இடம் பெற்றது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ராஜபக்ச அரசியலின் எதிர்காலம் காவித் துணியால் அலங்கரிக்கப்படும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
பொதுஜன முன்னணியின் ஐந்தாண்டு நிறைவு விழாவினூடாக ராஜபக்ச அரசியலின் கசப்பான உண்மைகள் களத்துக்கு வந்தன. இது அண்ணன் தம்பிமார்களின், சித்தப்பா மகன்மாரின் கட்சியாகும். அதன் ஒரே நோக்கம் ராஜபக்ச குடும்பத்தினரைப் பதவியில் அமர்த்துவதாகும். மற்ற அனைத்துச் செயற்பாடுகளும் அந்த நோக்கத்தை அடைவதற்கான நாடகங்களும் கண்கட்டி வித்தைகளுமாகும்.
இச்செயற்திட்டத்திற்கு இப்போது உள்ளேயிருந்தும் வெளியிலிருந்தும் சவால்கள் எழத்தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் சவால்களை விட உள்ளேயிருக்கும் சில பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து வரும் சவால்கள் ஆட்சியாளருக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. அடுத்த மாபெரும் சவால் ராஜபக்ச வாதிகளான வாக்காளர்களிடமிருந்து அரசின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளமையாகும். அந்த எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் அவதானிக்கப்படுகிறது. இந்த சவால்களை வெற்றிகொள்ளாவிட்டால் ராஜபக்ச செயற்திட்டத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகி விடும்.
இந்த யதார்த்தங்கள் ராஜபக்சக்களுக்கு விளங்காமல் இல்லை. ஆனால் ராஜபக்ச குடும்பத்தினர் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கேனும் தங்கள் நாசகார நடவடிக்கைகளை விடத்தயாராக இல்லை. தமது விருப்பப்படி செய்ய முடியாவிட்டால் அந்த அதிகாரம் எதற்காக? என்று அவர்கள் நினைக்கிறார்களோ தெரியாது.
மொட்டுக் கட்சியின் ஐந்தாண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ச போராட்டம் நடத்தும் விவசாயிகள் பற்றி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கடவுச்சீட்டு வரிசையில் நிற்கும் இளைஞர்கள் பற்றியெல்லாம் பேசினார். கோட்டாபய, பஸில் ஆகிய தம்பிமார்கள் போலன்று, அண்ணன் மகிந்த மக்கள் பிரச்சினைகளில் உணர்வுபூர்வமாக செயற்படுபவர் என்ற கருத்தை வலிறுத்துவதாக அவரது உரை அமைந்தது. ஆனால் எரிவாயு இறக்குமதி செய்யவும் மண்ணெண்ணை வாங்கவும் டொலர் இல்லாத நாட்டில் எம்பீ மார்களுக்கான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யும் பிரேரணையைக் கொண்டு வந்தவர் மகிந்த ராஜபக்சவே. பால்மா பக்கற் ஒன்றை திருடுவதற்காக காலியில் சதொச வர்த்தக நிலையத்தை உடைக்கும் அளவுக்கு வறுமை மேலிட்ட நாட்டில் சர்வதேச கால்பந்துப் போட்டிகளை நடாத்த தீர்மானித்தவரும் அவரே. அது அவரது பெயரிலான மகிந்த ராஜபக்ச கிண்ணத்துக்கான புதிய காற்பந்துப் போட்டித் தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உண்மையில் மகிந்தவிடம் இருப்பது மக்கள் மீதான பரிவுணர்வல்ல வெறும் நடிப்பு.
பிரதமர் நடிப்பில் திறமையானவர் என்றாலும் அது ராஜபக்சாக்களின் மீது எழும் எதிர்ப்புச் சுவாலைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்குப் போதுமானவைகளாக இல்லை. அவர் மக்களின் குறைகள் விடயத்தில் அனுதாபப்படுவதாக காட்டிக் கொள்ளும் போது கோட்டாபய ராஜபக்ச பிக்குமார்களைத் திருப்திப்படுத்தும் செயற்பாட்டில் இறங்கியிருப்பது எல்லாமே நடிப்புதான்.
மீண்டும் பிக்குமார்கள் வலுப்பெறல்
பிரபல பொருளியல் அறிஞரான பேராசிரியர் தோமஸ் விகட் Capital and Ideology என்ற நூலில் மனித வரலாறு நெடுகிலும் சமத்துவமின்மையை (Inequality) நியாயப்படுத்த உலகம் பூராகவும் நிலவிய கருத்தாடல்கள், முறைமைகளை விளக்க முயற்சிக்கிறார். கடந்த காலத்தில் மேலைத்தேய, கீழைத்தேய நாடுகளில் பெரும்பாலான ஆட்சிமுறைகளை அவர் மும்மைச் சமூகம் (Ternary societies) என்று குறிப்பிடுகின்றார். பூசகர்கள் (சமயத்தலைவர்கள்), பாதுகாவலர்கள், மக்கள் இந்த மூன்று பிரிவுக்குள் அடங்குவர். சமயத் தலைமைகள் நாட்டுக்குத் தேவையான கோட்பாட்டை வழங்கியதுடன் சமூகத்தின் பௌதீக, பொருளாதாரத் தேவைகளை மக்கள் நிறைவு செய்தனர். பாதுகாவலர்களாக அரசன், இளவரசர்கள், நிர்வாகிகள் மேற்படி செயற்பாடுகளுக்கான சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்டினர். இந்த சமூகங்களில் நிலவிய பாரிய பொருளாதார அதிகார இடை வெளியை இவ்வாறு பேராசிரியர் பிகட் நியாயப்படுத்தினார்.
2015-–2019 காலப்பகுதியின் ராஜபக்ச அரசியலின் கருப்பொருளும் இதுவாகத் தான் இருந்துள்ளது. 2015 இல் ஜனாதிபதித் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மதமுலன வளவ்வவுக்குச் சென்று யன்னல் கம்பியில் தொங்கிய படி அங்கு குழுமியிருந்த மக்களை விழித்துப் பேசிய மகிந்த ராஜபக்ச நடந்து முடிந்த ஆட்சி மாற்றம் நாட்டுப் பிரிவினை என்று அறிமுகம் செய்தார்.
அன்று முதல் ராஜபக்ச அரசியலின் அடிப்படை கருப்பொருளாக அமைந்தது நாடு, சமயம், இனம் என்பன ஆபத்துக்குள்ளாகியிருப்பது குறித்த விடயங்களாகும். இந்த செயலணியில் மூன்று சகோதரர்களும் மிக நேர்த்தியாக வேலைகளைப் பகிர்ந்து கொண்டு செயற்பட்டனர் (division of labor) அண்ணன் மகிந்த வாரம் தோறும் ஏதாவது ஒரு பௌத்த விகாரைக்குச் சென்று நல்லாட்சியில் பௌத்த மதத்திற்கான முதன்மை சிதைக்கப்படுவதாகவும் பிக்குமார்கள் சிறையில் அடைக்கப்படுவதாகவும் பிரசாரம் செய்தார். தம்பி கோட்டாபய வியத்மக எளிய (சான்றோர் பாதை, வெளிச்சம்) ஆகிய நிகழ்சித் திட்டங்கள் மூலம் பல்வேறு தொழில்வாண்மையினரையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார். தம்பி பசிலின் முயற்சியாக அமைந்தது ராஜபக்சாக்களுக்கான ஒரு அரசியல் சக்தியை (மொட்டுக்கட்சி) உருவாக்குவதாகும்.
சிறிசேன, விக்கிரமசிங்க அரசின் தவறுகள், குறைபாடுகள் காரணமாக ராஜபக்ச சகோதரர்களின் முயற்சி பெருமளவு வெற்றியை நோக்கி நடைபோட்டது. 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளைப் பின்தள்ளி பொதுசன ஐக்கிய முன்னணி பெற்ற வெற்றி இதனை உறுதி செய்தது. ஆயினும் அளிக்கப்பட்ட வாக்குகளின் 40 சதவீதம் மட்டுமே மொட்டுக் கட்சிக்குக் கிடைத்தது. வாக்காளர்களில் 60 வீதம் ராஜபக்சவுக்கு எதிராகவே கிடைத்தது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நிலைமை தலைகீழாக மாறியது. பீதியும் சந்தேகமும் மீண்டுமொரு முறை இலங்கை அரசியலின் தீர்க்கமான காரணியாக மாறியது. இந்தப் பீதியையும் சந்தேகத்தையும் நீக்க முடியுமான ஒரே வழி ராஜபக்சாக்களிடம் அரசை வழங்குவது தான் என்ற கோசத்தை மக்களிடையே இலகுவாகப் பரப்புரை செய்ய தாக்குதல் காரணமாக அமைந்தது. இப்பரப்புரையின் முக்கிய பங்குதாரர்களாக பிக்குமார்களும் விகாரை வாசிகளுமே செயற்பட்டனர். விகாரைகள் மொட்டுக் கட்சியின் உத்தியோக பூர்வமற்ற காரியாலயங்களாகச் செயற்படத் தொடங்கின. தேசபிமானிகளை உள்நாட்டு வெளிநாட்டு தேசத்துரோகிகளிடமிருந்து பாதுகாக்கவும் தேசபிமானிகளின் நாளாந்த வாழ்க்கையைச் செவ்வனே செயற்படுத்தும் சமாதானமான நிலையான சமூக மொன்றை உறுதிப்படுத்தவும் முடியுமான ஒரே அரசியற் சக்தி ராஜபக்சாக்கள் தான் என்ற கருத்து சிங்கள சமூகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்றடைந்தன.
இரண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற ராஜபக்சாக்களின் வெற்றிக்கான பாதையை அமைத்தவர்கள் பிக்கு சமூகத்தினரே. ராஜபக்சாக்களின் முயற்சி குடும்ப ஆதிக்கத்திற்கானது அல்ல என்றும் இலங்கை மாதாவின் சிங்கள பௌத்த சமூகத்தினதும் பௌத்த சாசனத்தின் பாதுகாப்புக்குமே என்பதை காவியுடை அணிந்தோர் உறுதிப்படுத்தினர். இன்று இவையனைத்தும் புஸ்வானமாகி நகைப்புக் கிடமாக மாறியுள்ளமை வேறு விடயம்.
ராஜபக்ச ஆட்சி 2019 டிசம்பர் முதல் நடைமுறைப்படுத்திய வரிக் கொள்கையும் அபரிமிதமான நாணயத்தாள் அச்சிடலும் காரணமாக ஆரம்பித்த பொருளாதாரப் பின்னடைவு இப்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. செப்டம்பர் இறுதியில் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பு ஒக்டோபர் முடிவில் 2.2 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. இப்போது அது அடிமட்டத்துக்கே இறங்கிவிட்டது. டொலர் இருப்பு வேகமாக வீழ்ச்சியடைவதைத் தொடர்ந்து சரவதேசக் கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடிஸ் (Moody’s) நிறுவனம் இலங்கைக்கான தரப்படுத்தலை மேலும் கீழிறக்கியுள்ளது. வங்குரோத்து நிலையை அடைய இன்னும் இரண்டு நிலைகளே எஞ்சியுள்ளது.
சர்வதேசக் கடன் தர நிர்ணய நிறுவனங்களிடம் இலங்கை பல தடவைகள் (fail) பெயில் பண்ணியுள்ளதன் காரணமாக கடன் பெற்றுக்கொள்வதில் இலங்கை பல சிக்கல்களை எதிர் கொள்கிறது. முதலீட்டாளர்கள் வருகையும் மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. கொழும்பிலுள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை திறந்த ஏலத்தில் விற்பதற்கான திட்டங்களைத் தீட்டினாலும் அவற்றை கொள்வனவு செய்ய எதிர்பார்த்த அளவு முயற்சியாண்மைகள் வரவில்லை. கொவிட-19 உலகில் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தேக்க நிலையின் தாக்கம் இலங்கையிலும் காணப்படுகின்றது என்பது உண்மையாயினும் எல்லா பிரச்சினைகளையும் அதன் கணக்கில் வரவு வைக்க முடியாது. அரசின் நிர்வாக குறைபாட்டினால் நிலைமை தலைக்கு மேலால் போய்விட்டமை பிரதான காரணமாகும். வங்குரோத்து நிலையை அண்மிய ஒரு நாட்டுக்கு எந்த நாடுதான் கடன் கொடுக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தமது இருப்புக்காக நாட்டில் பிரச்சினைகளை உருவாக்குவது ராஜபக்சாக்களுக்கு கை வந்த கலை. இன வன்முறைகள் காரணமாக உலக நாடுகளிடையே இலங்கையின் நற்பெயர் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன, மதக் குழுக்களிடையே மோதல் நிலவும் நாடுகளுக்கு கடன் வழங்குவது ஆபத்தானது. முதலீட்டாளர்களும் வரத் தயங்குவார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ இனத்தவர்களிடையே பீதியையும் பயத்தையும் விருத்திசெய்யும் நடவடிக்கைகள் மற்றும் சிங்கள பௌத்த தீவிரவாதிகளுக்கு பதவிகள் வழங்குவதன் பெறுபேறு யாதெனில் இலங்கைக்கு கடன் வழங்குவதும் இலங்கையில் முதலீடு செய்வதும் மேலும் தடைப்படுவதாகும்.
புதிய நிதியமைச்சரின் கன்னி வரவு செலவுத்திட்ட உரையில் மக்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்கவில்லை. மேலும் மேலும் விலையுயர்வுகளே நிகழ்கின்றன. டொலர் பற்றாக் குறைக்கான எவ்வித பரிகாரமும் இல்லாத நிலையில் பொருட் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். தற்போது இரசாயனப் பசளை இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும் அதிகரித்த விலைகாரணமாக விவசாயிகள் நன்மையடைய முடியாது. உரிய காலத்தில் பசளை கிடைக்காமையால் இம்முறை 50 சதவீதத்துக்கும் குறைவான விவசாய நடவடிக்கைகளே நடந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் அறுவடை நடைபெறும் போது பாரிய பொருட் தட்டுப்பாடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நெல் அரிசி மட்டுமன்றி தேயிலை சோளம் மரக்கறிகள் பழங்கள் என்ற எல்லாவற்றிலும் பாரிய தட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம். உணவுப்பற்றாக்குறையைப் போக்க இறக்குமதி செய்ய வேண்டி வரும். அப்போது டொலர் பிரச்சினை மேலும் அதிகரிக்கும்.
இந்த நச்சு வட்டத்துக்கான காரணம் கொரோனாத் தொற்றோ அல்லது வெளியகக் காரணிகளோ அல்ல. ராஜபக்ச குடும்பத்தின் இயல்பாகும். வரிக்குறைப்பும் பண அச்சிடலும் நடைபெறக் காரணம் அவர்களின் அறியாமையாகும். தங்களுக்கு இது தெரியாது என்பதும் தெரியாதிருப்பதாகும். பசளைப் பிரச்சினைக்குக் காரணம் இரசாயனப் பசளையை ஒழித்த புகழ் வரவேண்டும் என்ற புகழ் மயக்கமாகும். இந்த நாட்டின் பயிர்ச் செய்கை முறை பற்றிய அறியாமையாகும். அவர்களின் தவறுகளைத் திருத்திக் கொள்ளாத பிடிவாதம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இவையனைத்தும் ராஜபக்சாக்களின் பண்புகளாகும் அவை ஒரு போதும் மாறப் போவதில்லை.
ராஜபக்சாக்கள் உருவாக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வும் பரிகாரமும் அவர்களை தேர்தலில் தோற்கடிப்பதொன்று மட்டும் தான். அடுத்துவரும் தேர்தல்களில் தாம் தோற்றுவிடுவோம் என்ற பயம் ராஜபக்சாக்களுக்கும் தோன்றியுள்ளதாகவே தெரிகிறது. அவர்கள் மீண்டும் காவியுடைதாரிகளிடம் சரணடைய இதுவே காரணம்.
ராஜபக்ச குடும்பத்தை வழிபடும் வாக்காளர்கள் சிலர் இருக்கவே செய்வர். ஏனையவர்கள் தம்மை முன்பு போல மதிக்கமாட்டார்கள் என்ற பயம் அவர்களுக்குள் தோன்ற ஆரம்பித்துள்ளது. கோட்டபாயவின் பயமுறுத்தும் உரைகளும் மகிந்தவின் மனம் கனியும் உரைகளும் இதற்கான துலங்கல்களாக இருக்கலாம்.
வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பாதுகாப்பு நோக்கில் இராணுவத்தைக் களமிறக்க ராஜபக்சாக்கள் தயங்குவதில்லை என்பதற்கு ரதுபஸ்வல சம்பவம் சான்றாகும். ஏனைய சகல வழிகளும் நெருக்கடிக்குள்ளானால் மட்டுமே அப்படியொரு உத்தியை பயன்படுத்துவார்கள். சிங்கள அரசுக்கு ஆதரவாக இராணுவத்தைக் களமிறக்குவதை இழிவளவாக்கும் நோக்கிலேயே மீண்டும் பிக்குகள் களமிறக்கப்படுகிறார்கள்.
மீண்டும் ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் எதிரியை உருவாக்கி அந்த எதிரிகளிடம் இருந்து சிங்கள பௌத்த சமூகத்தை காப்பாற்ற சிங்கள மக்கள் தம்முடன் இணைய வேண்டும் என்பது ராஜபக்ச குடும்பத்தின் கனவு. அவர்களின் மீட்சியும் எதிர்கால வெற்றியும் அதில் தான் தங்கியுள்ளது. பொதுபலசேனா, ராவணா பலய, சிங்கள ராவய போன்ற அமைப்புகளின் பணி ஏதோ ஒரு வகையில் எதிரியை உருவாக்கம் செய்வதாகும். முருத்தெட்டுவே ஆனந்த தேரர், களனி ரஜமகா விகாராதிபதி பேராசிரியர் மதகொட அபயதிஸ்ஸ தேரர் போன்றவர்களின் பணியாக அமைந்திருப்பது சிங்கள பௌத்தர்களினதும் நாட்டினதும் ஒரே பாதுகாவலர்கள் ராஜபக்சாக்கள் தான் என்ற மூடநம்பிக்கையை மீண்டும் சமூக மயப்படுத்துவதாகும்.
கழுகுக்கும் டிராகனுக்கும் மத்தியில்
அமெரிக்காவின் பாதுகாப்புக்குப் பொறுப்பான நிறுவனமான பென்டகன் வருடந்தோறும் பாதுகாப்பு தொடர்பான ஓர் அறிக்கையை வெளியிடும். இம்முறை வெளியிட்ட அறிக்கையின் கரு சீனாவைப் பற்றிதாகும். (Military and Security Development Involving the People Republic of China) இந்த அறிக்கையை வாசிப்பதற்கு அல்லது விளங்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா என்று தெரியாது. உக்கிரமடையும் நவீன கெடுபிடி யுத்தம் பற்றியே இவ்வறிக்கை பேசுகின்றது. அடுத்த சில தசாப்தங்களில் உலக அரசியலில் குறிப்பாக இலங்கையையும் உள்ளடக்கிய இந்து பசுபிக் வலயத்தின் தீர்மானிக்கும் காரணியாக அமையப் போவது அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான அதிகாரப் போட்டியாகும்.
முன்னர் போலவே அணிசேராக் கொள்கையைப் பின்பற்றியிருந்தால் இந்தப் போட்டியில் நன்மையடைந்து கொள்ளும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும். ஆயினும் 2010–-11 காலப்பகுதியிலிருந்து ராஜபக்சாக்களின் ஆட்சி படிப்படியாக சீனாவின் ஒரு துணைக்கோள் போல இலங்கையை ஆக்கியிருக்கின்றது. 2019–-2020 களில் மீண்டும் இந்தப் பயணத்தை தொடர்ந்துள்ள நிலையில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தினூடாக அது பயண முடிவை நோக்கி நகர்வதாகவுள்ளது.
பென்டகன் அறிக்கையில் சீன இராணுவத்தின் வளர்ச்சி பற்றிக் கூறும் பகுதி இலங்கையுடன் மிகவுமே தொடர்புபடுகிறது. தமது கடல், வான், தரை, இணையம் மற்றும் விண்வெளி அதிகாரப் பலத்துக்காக தமது இராணுவ வசதிகள் பற்றித் தேடிப்பார்ப்பதில் சீனா ஆர்வம் கொண்டுள்ளமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது விடயத்தில் சீனாவின் கவனம் திரும்பியுள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இந்த அனுமானம் சரியா பிழையா என்று கூறுவதற்கு இன்னும் காலமெடுக்கும். எனினும் அமெரிக்காவின் நோக்கு இதுவாகவே உள்ளது. ஆகவே விரும்பியோ விரும்பாமலோ இந்த அதிகாரப் போட்டியில் இலங்கை சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் இந்த எதிர்வு கூறல் ஒரு நல்ல ஜோக் என்று இலங்கைக்கான சீனத் தூதரகம் கூறியுள்ளது. எமது நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட இப்பிரச்சினை சம்பந்தமாக ராஜபக்ச அரசு இதுவரை எக்கருத்தையும் கூறவில்லை.
இலங்கை நிலப்பரப்புக்குள் எந்தவொரு வலய அல்லது உலக வல்லரசுக்கும் இராணுவ வசதிகள் செய்து கொடுக்கப்படமாட்டாது என்று பிரகடனப்படுத்தி இந்தக் கெடுபிடி யுத்தத்தில் எமது நடுநிலைத் தன்மையை உறுதிப்படுத்த இது மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும். ராஜபக்ச அரசு இதற்கு இன்னும் தாமதிப்பதற்குக் காரணம் பென்டகன் அறிக்கையின் உண்மைத் தன்மை தெரியாமையினாலா அல்லது எமது நடுநிலைக் கொள்கைகளை உறுதிப்படுத்துவது சீனாவுடன் மோதுவதற்கு சமம் என்று பயப்படுவதனாலா? என்று தெரியவில்லை.
2019 இல் ஏற்பட்ட ராஜபக்ச செயற்திட்டத்தின் வெளிநாட்டுக்கு காரணி சீனாவாகும். தாம் சீனாவுடன் ஒத்துப் போனால் இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டு நிதித்தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்று ராஜபக்சாக்கள் நினைத்திருக்கலாம். துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்று அரசாங்கம் நினைத்தமையை அப்போது வெளியிட்ட கருத்துக்களில் இருந்து அறியலாம். சீனா, ராஜபக்சாக்களை ஏமாற்றி விட்டதா? ராஜபக்சாக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்களா? என்பதைத் தீர்மானிப்பது சிரமமாயுள்ளது. ஆயினும் இலங்கையின் விடயத்தில் கைகளை வீசிச் செலவளிக்க சீனா தயாராக இல்லை என்பது மட்டும் உறுதி.
சேதனப் பசளை இறக்குமதி தொடர்பில் சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவில் கீறல் விழுந்துள்ளது. தமக்கு 8 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க வேண்டும் என்று சீனக் கம்பனி மக்கள் வங்கியைக் கேட்டுள்ளது.
கொழும்பு வணிக நீதிமன்றம் கொடுப்பனவை நிறுத்தும்படி அறிவித்துள்ள நிலையிலேயே இது நடைபெற்றுள்ளது. தமது பசளை பொருத்தமற்றது என்று கூறிய நிறுவனங்களுக்கு சீனக் கம்பனி எச்சரிக்கையும் விடுத்தது. சீனா இலங்கையின் நிதித்தீர்வுகளையோ பொதுமக்கள் அபிப்பிரயங்களையோ மதிக்க தயாராக இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பசளைக் கப்பல் இலங்கையைச் சுற்றித் திரிந்த காலத்துக்கு ஒரு நாளைக்கு 30000 டொலர் பசளைக் கம்பனி, கப்பல் கம்பனிக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சீனா இலங்கைக்கு மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்பிக்கிறேன் என்று அடம் பிடிப்பது தெரிகிறது. இறுதியில் சீனாவிடம் மண்டியிட்டுள்ள இலங்கை 6.7 மில்லியன் டொலர்களை வழங்க இணங்கியுள்ளது. ராஜபக்ச அரசாங்கம் உள்நாட்டு நட்பை மட்டுமன்றி வெளிநாட்டு நட்பு நாடுகளையும் பகைத்துக் கொண்டுள்ளமை தெளிவாகின்றது. ராஜபக்ச அரசு கையாண்ட பொருளாதார உத்திகள் யாவும் தோல்வியடைந்த நிலையில் வேறு வழியின்றி மீண்டும் காவியுடை அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளது.
சிங்கள பௌத்த மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தகுதி தமக்கேயுள்ளது என்பதை சமூகமயப்படுத்தும் பொறுப்பை பிக்குமார்களை ஏற்கச்செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அன்றாடப் பிரச்சினைகளை மறக்கடித்து எதிர்கால வெற்றிக்கு அடித்தளம் போடுவதே ராஜபக்சாக்களின் செயற்பாடாக உள்ளது. அளுத்கமை தாக்குதல், திகன வன்முறை அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒன்றை மீண்டும் உருவாக்காமல் காவியுடைதாரிகளின் செயற்திட்டம் வெற்றிபெறுமா என்பதே கேள்வியாக உள்ளது.- Vidivelli