தலைவணங்காத கத்தார்’ தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது?

0 1,190

சக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவீனமடையாதது எப்படி? சவூதி அரேபியாவின் எந்தவொரு தந்திரமும் கத்தாரை தலை குனிய வைக்காதது ஏன்?

தடை விதிக்கப்பட்ட பிறகு, கத்தார் வளர்ச்சியடைந்ததோடு, மனித உரிமைக மீறல் தொடர்பாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் நிவர்த்தி செய்திருக்கின்றது. 25 லட்சம் மக்கள் வாழும் கத்தார், மிகச் சிறிய நாடாக இருந்தாலும், எண்ணெய் வளம் கொண்ட நாடு.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான ஒபெக் அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது சவூதிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புப்படி, 2017 இல் 2.1 % என்ற அளவில் இருந்த கத்தாரின் பொருளாதரம், தற்போது 2.6 %  மாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

கத்தாரின் வருவாய் பற்றாக்குறை 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது குறைந்திருக்கிறது. ஃபோர்ப்ஸின் கணிப்பின்படி, கத்தார் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 2.9 பில்லியன் டாலர் என்ற நிலையில் இருந்து 17 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள், கத்தாருடன் ராஜதந்திரதந்திர உறவுகளை முறித்த போதும் கத்தார் தளர்ந்து விடவில்லை.

உலக வரைபடத்தில் மிகச் சிறிய இடத்தை பிடித்திருக்கும் கத்தாரின் ஒட்டுமொத்த பரப்பளவு 11,437 சதுர கிலோமீட்டர் ஆகும். மக்கள் தொகை 25 லட்சமாக இருந்தாலும், அதில் பெண்களின் எண்ணிக்கை 7 லட்சம் மட்டுமே. இதற்கு காரணம் கத்தாரில் வேலைவாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். தற்போது கத்தாரின் மக்கள் தொகையில் 90% வெளிநாட்டினரே.

அண்டை நாடுகள் தடைகளை விதித்து 18 மாதங்கள் ஆகிய நிலையிலும் கத்தார் சமாதான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

கடந்த 1961 ஆம் ஆண்டிலிருந்து ஒபெக்கில் அங்கம் வகித்து வரும் வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார், தனது இயற்கை எரிவாயு உற்பத்தியில் கவனம் செலுத்தும் வகையில் வரும் ஜனவரி மாதம் அந்த அமைப்பிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளது.

கத்தாரின் தேசிய நலன்களுக்கு எதிராக ஒபேக் அமைப்பு பயன்படுத்தப்படுவதாக கத்தார் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் அப்துல்லா பின் காசிம் அல்-தானி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (ஜி.சி.சி) நாடுகளில் கத்தார் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டும் முக்கிய நாடுகளாகும்.

கத்தார் மீதான பொருளாதாரத் தடை தொடர்பான விவகாரத்தை சுமூகமாக தீர்க்க வளைகுடா கூட்டுறவு கவுன்சிலால் இதுவரை முடியவில்லை. இதிலிருந்தே இந்த அமைப்பின் எல்லைகளையும், பிற நாடுகளின் ஆதிக்கத்தையும் புரிந்துக் கொள்ளலாம்.

ஜி.சி.சி, கத்தார் மற்றும் சவூதி அரேபியா

ஒபெக் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக கத்தார் அறிவித்துள்ள நிலையில், வளைகுடா கூட்டுறவு கவுன்சிலால் தனக்கு எந்த பயனும் இல்லை என்பதால், அதிலிருந்தும் விலகும் முடிவையும் அந்த நாடு எடுக்கலாம்.

ஆனால், அப்படி செய்வது கத்தாருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஒபெக் உறுப்பு நாடுகளில் எண்ணெய் உற்பத்தியில் கத்தாரின் பங்களிப்பு குறைவாக இருப்பதால், அதிலிருந்து விலகுவதால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும்.

இதுவே ஜி.சி.சி.யில் இருந்து வெளியேறுவது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் இந்த கவுன்சில், பிராந்திய பிரச்சினைகளில் பெரியளவு தலையிடாமல் பெயரளவிலான குழுவாகவே இருக்கிறது.

ஜி.சி.சியில் இருந்து கத்தார் விலகினால், வளைகுடா நாடுகளின் ஒற்றுமையை கத்தார் குலைக்கிறது என்ற சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும்.

இதுவே ஜி.சி.சியில் கத்தார் தொடர்ந்தால், பிராந்திய ஒற்றுமைக்கு தனது ஒத்துழைப்பு தொடர்வதை உறுதிபடுத்தும் சமிக்ஞையை கொடுக்கும் என்பதால், பொருளாதரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு அழுத்தம் அதிகரிக்கும்.

எதாவது ஒரு தந்திரத்தை கையாண்டு, கத்தார் ஜி.சி.சியில் இருந்து வெளியேற வைக்கும் என்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அதற்கு குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை சம்மதிக்க வைக்க வேண்டியிருக்கும்.

சவூதியின் விருப்பம் நிறைவேறாது

பஹ்ரைன், பல விஷயங்களில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவளித்தாலும், குவைத்தும், ஓமானும் சவூதி விதித்த பொருளாதாரத் தடைகள் தொடர்பாக தொடர்ந்து நடுநிலை வகிக்கின்றன.

நீண்ட நாட்களாக தொடரும் இந்த பிரச்சினையை அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஜி.சி.சி கூட்டத்தில் தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக குவைத் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல, கத்தாரை ஜி.சி.சி.யில் இருந்து வெளியேற்ற எடுக்கும் முயற்சிகளை பார்த்துக் கொண்டு அமெரிக்கா அமைதியாக இருக்காது.

ஈரான் விவகாரம் இன்னமும் அப்படியே இருக்கும் நிலையில், அரபு நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதால், சவூதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகள் சீரடைய வேண்டும் என்றே அது விரும்பும்.

மறுபுறம், ஜி.சி.சி.யில் கத்தார் தொடர்வது, சவூதி அரேபியாவின் எரிச்சலை அதிகரிக்கும் என்பதால், கத்தார் ஜி.சி.சி.யில் இருந்து விலகாமல் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கிறது.

சவூதிக்கும், கத்தாருக்குமான உறவுகள் கசந்தது ஏன்?

2017, ஜூன் மாதம் சவூதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா நட்பு நாடுகள் கத்தாருடனான ராஜதந்திர உறவுகளை முறித்திருந்தது. இதற்கு மத்தியக்கிழக்கு பகுதியின் நிலைத்தன்மையை குலைக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

55 ஆண்டுகள் பிரிட்டனின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கத்தார், 1971 இல் தனிநாடாக இயங்க ஆரம்பிப்பதற்கு முன்னர், ஐக்கிய அரபு எமிரேட்டின் அங்கமாக மாற மறுத்துவிட்டது.

பிறகு, தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக கத்தார் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், கத்தார் அவற்றை தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தே கத்தாரின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது அல்-தானி குடும்பம் ஆகும். அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி 2013ஆம் ஆண்டு பதவி விலகிய பிறகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி அரசராக பதவியேற்றார்.

வளைகுடா நாடுகளில் பதற்றம்

2013 ஆம் ஆண்டு எகிப்து இராணுவம் முகமது மர்ஸியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு, கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு கத்தார் ஆதரவு கொடுப்பதாக சவூதி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

பல அரபு நாடுகள் தீவிரவாத அமைப்பாக கருதும் ஹிஸ்புல்லாவின் உறுப்பினர் முகமது மர்ஸி.

அரபு உலகில் சுன்னி குழுக்கள் வளர்ந்து வந்த நிலையில், பஹ்ரைன், எகிப்து, ரஷ்யா, சிரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு தடைவிதித்தன. இது தொடர்பாக, 2014 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை தோஹாவில் இருந்து தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன.

அல்-ஜஸீரா செய்தி நிறுவனம் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், போலிச் செய்திகளை பரப்புவதாகவும் குற்றம்சாட்டின.

கத்தாரின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம்

ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு பிறகு, மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளத்தைக் கொண்ட கத்தாரிடம் பெட்ரோலிய வளங்களும் அதிகமாகவே இருக்கிறது.

தனது இந்த வளங்களால் செல்வத்தில் கொழிக்கும் கத்தார் உலகின் பல நாடுகளில் முதலீடு செய்யும் முக்கியமான ஒரு நாடாகும்.

அல்-தானி குடும்பத்தினர் பிரிட்டனில் மட்டும் 50 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆடம்பரமான, வானளாவிய கட்டடங்கள், வணிக வளாகங்கள் முதல் ஒலிம்பிக் கிராமங்கள் வரை கத்தாரின் பரந்த செல்வம் உலகம் முழுவதும் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நியூயோர்க் எம்பயர் ஸ்டேட் கட்டடம், ‘த ஷார்ட்’ என்ற லண்டனின் மிகப்பெரிய கட்டடம், ஊபர் மற்றும் லண்டனின் ஹைரெட்ஸ் டிபார்மெண்டல் ஸ்டோர் என கத்தார் அரசர்  பாரிய அளவிலான முதலீடுகளை செய்திருக்கிறார். இதைத்தவிர, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களிலும் கத்தார் பங்குதாரராக இருக்கிறது.

அரசியல் ரீதியான ஆளுமை

சூடான் பிரச்சினையில் மத்தியஸ்தம், பாலஸ்தீனிய குழுக்களிடம் மத்தியஸ்தம் என முக்கியமான விடயங்களில் கத்தார்  பங்களித்து வருவது சர்வதேச அரசியலிலும் கத்தாரின் வலிமையை காட்டுகிறது.

அல்-ஜஸீரா தொலைகாட்சி நிறுவனம் மூலமாக அரபு நாடுகளில் செய்திகளை தரும் தனது முயற்சியால் பல மாற்றங்களை கத்தார் ஏற்படுத்தியுள்ளது. அல்-ஜஸீராவின் மூலமாக கத்தார், உலகம் முழுவதும் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை உருவாக்கிக் கொண்டது.

உலகின் முக்கியமான விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் வளர்ந்திருக்கிறது என்பதும், 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அந்நாடு நடத்தவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கால்பந்து போட்டி ஒன்றை நடத்தும் முதல் அரபு நாடு கத்தார்தான். இதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக கத்தார் அரசு இறங்கியுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்காக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பணியாளர்கள் சுரண்டலுக்கு ஆளாவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

வலுவான பொருளாதாரம்

சவூதி அரேபியா தடைவிதித்து ஒரு மாதத்திற்கு பிறகு பேசிய கத்தார் நிதியமைச்சர் அலி ஷெரீப் அல்-இமாதி தனது நாட்டின் செல்வச் செழிப்பு அண்டை நாடுகளுக்கு உறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார்.

கத்தாரின் தனிநபர் வருமானம் 124 முதல் 900 டாலருக்கு இடையில் உள்ளது என்பதில் இருந்து அந்த நாட்டின் செல்வ நிலையை அறிந்துக் கொள்ளலாம். உலகிலேயே மிகவும் அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடு கத்தார் என்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் கூறுகின்றன.

உண்மையில், இந்தத் தடைகள் கத்தாரை மேலும் வலுவூட்டியிருப்பதாக பலர் கருதுகின்றனர். ஏனெனில் தற்போது கத்தார், சர்வதேச நாடுகளில் முதலீடுகள் செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

அமெரிக்காவின் நண்பன்?

மற்றொரு புறம் அண்மையில் இஸ்தான்புலில் உள்ள சவூதிஅரேபிய துணை தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட பிறகு, சர்வதேச அளவில் சவூதிக்கான அழுத்தங்களை அதன் நட்பு நாடான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிகரித்துள்ளன.

இவை அனைத்திற்கு பிறகும், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் போரில் சவூதி தனது உற்ற நண்பன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார்.

இதற்கு முக்கியமான காரணம் உலகில் உள்ள மொத்த கச்சா எண்ணெய் இருப்பில் சுமார் 18% சவூதி அரேபியாவில் இருப்பதும், அந்த நாடு அமெரிக்காவில் பெரிய அளவில் முதலீடு செய்கிறது என்பதும் தான். இவற்றைவிட மற்றொரு மிகப்பெரிய உண்மை என்னவென்றால், அமெரிக்கா உற்பத்தி செய்யும் ஆயுதங்களின் மிகப்பெரிய நுகர்வோர் சவூதி என்பதே.

உலகிலேயே மிகப் பெரிய ஆயுத விற்பனை நாடு அமெரிக்காதான். மத்திய கிழக்கு நாடுகளில்தான் அமெரிக்காவின் அதிகமான ஆயுதங்கள் விற்பனையாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் தயாரிக்கப்படும் மொத்த ஆயுதங்களில் ஏறக்குறைய பத்து சதவிகிதத்தை சவூதி வாங்குகிறது என்பதும் கூடுதல் தகவல்.

கஷோக்ஜி கொலைக்கு பிறகு கடந்த சில தினங்களில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும், சவூதி பட்டத்து இளவரசர் சல்மானுக்குமான இடைவெளி அதிகரித்திருப்பது உண்மையென்றாலும், கோடிக்கணக்கான டாலர் முதலீடு செய்யும் ஒரு நாட்டின் மீதான அன்பு அமெரிக்காவுக்கு குறைந்துவிடும் என்று கருதுவது சரியான கணிப்பாக இருக்காது.

“110 பில்லியன் டாலர் முதலீட்டை தடுப்பதற்கு எனக்கு விருப்பமில்லை” என்று நவம்பர் மாதம் டிரம்ப் நேரிடையாக கூறியது இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் டிரம்பின் நிர்வாகத்தின் எதிர்வினை கத்தார் மீதான பொருளாதாரத் தடை என்ற சிக்கலை நீக்கலாம். சவூதி அரேபியா, அமெரிக்காவுடன் இணக்கமாக இருப்பது, கத்தார்-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்தி விடக்கூடாது என்ற அச்சம் அமெரிக்காவுக்கு கண்டிப்பாக இருக்கும்.

1996 முதல், அல்-உதீத் (Al Udeid) என்ற பிரம்மாண்டமான இராணுவத் தளத்தை ஒரு பில்லியன் டாலர் செலவில் கத்தார் அமைத்தது. நீங்கள் விரும்பினால், உங்களுக்காக பிரம்மாண்டமான இராணுவத் தளத்தை நாங்கள் கட்டித்தருகிறோம் என்று அமெரிக்கா சொன்னது. எனவே, கத்தாரில் அமெரிக்காவின் இருப்புக்கான ஒரு முக்கியமான காரணமாக இந்த இராணுவத் தளம் அமைந்துவிட்டது.

2003 இல் அமெரிக்கா சவூதி அரேபியாவில் இருந்த தனது பெரிய இராணுவத் தளத்தை கத்தாருக்கு மாற்றி விட்டது. அல் உதீதில் இருக்கும் இராணுவத்தளம்தான், அமெரிக்கா பிற நாடுகளில் அமைத்திருப்பதிலேயே மிகப்பெரியது.

பிராந்திய நடவடிக்கைகளுக்கான தலைமையகமாகவும், சிறப்பு படைகளின் செயல்பாட்டு தளமாகவும் மாறிய அல் உதீதில் மொத்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கின்றனர். 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கு நாட்டில் இருந்த தனது படைப்பிரிவைக் கொண்டுதான் என்பதும் நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் கத்தாருடன் அமெரிக்காவின் உறவுகள் கசந்து போனால், அமெரிக்காவின் நிலை திண்டாட்டமாகிவிடும்.

அது மட்டுமல்ல, அமெரிக்காவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இஸ்லாமிய அமைப்புகளுடன் கத்தார் மத்தியஸ்தம் செய்து வருகிறது, அதிலும் பாதிப்பு ஏற்படும். அத்துடன், எந்த நாடு சவூதியுடன் முறைத்துக் கொண்டாலும், அது கத்தார் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற தவறான செய்தியையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொடுக்கும். இதுவும் நீண்டகால அடிப்படையில் சவூதிக்கு அனுகூலமாக இருக்காது.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.