டாக்டர் ஷாபி மீண்டும் பேசுபொருளானது ஏன்?
ஊடகங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான தகவல்களும் உண்மை நிலையும்
எம்.எப்.எம்.பஸீர்
குருணாகல் போதனா வைத்தியசாலையில் தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவ்வைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை ஊடகங்கள் தவறிழைத்துள்ளன.
முதலில், வைத்தியர் ஷாபியை கைது செய்யவும், அவரது குடும்பத்தாரை சின்னாபின்னப்படுத்தவும் அடிப்படையற்ற செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள், தற்போது அவர் மீள சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பள நிலுவை செலுத்தப்பட்டுள்ளதாகவும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதனூடாக கடந்த வாரம், மீண்டுமொரு முறை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் பொது வெளியில் பல கருத்துக்கள் உலா வந்ததை காண முடிந்தது. எனினும் இன்று வரை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்படவில்லை என்பதும், அவர் மீள வைத்திய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதும், நிலுவைச் சம்பள பணம் கூட இன்னும் வழங்கப்படவில்லை என்பதுமே உண்மையாகும்.
உண்மையில் சி.எப்./ டி.பி.கே./ 2019/19 எனும் இலக்கத்தை உடைய கடந்த 2021/12/06 ஆம் திகதியிடப்பட்ட சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரால், வைத்தியர் எஸ்.எச். முனசிங்க குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பியிருந்த கடிதத்தை மையப்படுத்தி, வைத்தியர் ஷாபி மீள பணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அடிப்படையற்ற வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உண்மையில் அந்த கடிதத்தில் அப்படி ஒன்றுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஊடகங்களின் செய்தி, ஊடகவியலாளர்கள் அரச நிறுவனங்களிடையே பரிமாற்றப்படும் கடிதங்களின் கட்டமைப்பு தொடர்பில் அடிப்படை அறிவு கூட இல்லாமல் அச்செய்தியை திரிபுபடுத்தியுள்ளமையை பறைசாற்றியது.
குறித்த கடிதத்தின் தலைப்பு, ‘மீள சேவையில் இணைத்தல் மற்றும் கட்டாய விடுமுறை காலத்துக்கான சம்பளம் வழங்கல் – வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபி ‘ என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் கடிதத்தின் உள்ளடக்கத்தில் மீள பணிக்கு இணைப்பது தொடர்பில் எந்த பதிவுகளும் இல்லை.
தன்னை மீள பணிக்கு அமர்த்துமாறும், சம்பள நிலுவையை கோரியும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் செய்துள்ள மேன் முறையீட்டுக் கடிதத்தின் தொடர்ச்சியாகவே இக்கடிதம் சுகாதார அமைச்சின் செயலரினால், குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் பரிமாற்றப்படும் கடிதங்களில் ஒரு விடயதானம் தொடர்பில் தொடர்ச்சியாக ஒரே தலைப்பே பயன்படுத்தப்படுவது வழமை. அதற்கமையவே அந்த கடிதத்திலும் அந்த தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் வழங்கப்படாத பதவி ஒன்றினை, மீள வழங்கப்பட்டு விட்டது என கூறி ஊடகங்கள் ஷாபி வைத்தியருக்கு எதிராக மீண்டுமொருமுறை அநீதி இழைத்துள்ளன.
உண்மையில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பிடமிருந்து பணம் பெற்று, அவ்வமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம், சிங்களத் தாய்மார்களை கருத் தடை செய்தமை, தவறான வழிகளில் பெற்ற பணத்தைக்கொண்டு சொத்துக்கள் சேர்த்தமை, ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழும் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் கடந்த 2019 மே 24 ஆம் திகதி இரவு 10 மணியளவில், இவர் கைது செய்யப்படாது போனால் நாட்டை விட்டு அவர் தப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் இவருக்கும் இவரது வீடுகளுக்கும் சேதம் விளைவிக்கப்படலாம் எனும் ஊகத்தின் அடிப்படையிலும் குருணாகல் பொலிஸாரால் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித ஆதாரங்களும், முறைப்பாடுகளும் இருக்காத நிலையில் மறு நாள் சி.ஐ.டி.யிடம் மேலதிக விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், சட்டவிரோத கருத்தடை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சுகாதார அமைச்சினால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். கட்டாய விடுமுறையில் அனுப்பப்படும் ஒருவருக்கு அவரது சம்பளத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயம் என்றாலும், இதுவரை வைத்தியர் ஷாபிக்கு அவரது சம்பளம் தொடர்ச்சியாக செலுத்தப்படாமல் இருந்து வருகின்றது.
இந் நிலையிலேயே வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் மேன் முறையீட்டுக்கு அமைய அவரது சம்பள நிலுவையை மீள வழங்க உத்தரவிடும் முகமாக, சுகாதார அமைச்சின் செயலரினால் குறித்த கடிதம், குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில், நாட்டில் ஒரே விதமாக அனைவருக்கும் சட்டம் அமுல் செய்யப்பட்டிருந்தால், இதுவரை வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு அவரது சம்பளத்தை வழங்காமை தொடர்பில், குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளரே பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த இரு வருடங்களுக்கு மேலாக, வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு அவரது சம்பளத்தை வழங்காமைக்காக அந் நடவடிக்கையினை குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக எடுத்திருக்க வேண்டும் என்பது அவர்களது நியாயமான நிலைப்பாடு.
அரச சேவையில், ஒருவர் பணி இடை நிறுத்தப்படும் போது முதலில் சம்பளம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டாலும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்படும் ஒருவருக்கு சம்பளத்தை வழங்காமல் இருக்க முடியாது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தாபன விதிக் கோவையின் முதலாம் தொகுதியின் ஒii அத்தியாயத்தில் விடுமுறைகள் தொடர்பாக ‘ லீவு ‘ எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 20 ஆம் இலக்கத்தின் கீழ் கட்டாய விடுமுறை தொடர்பில் ‘ கட்டாய லீவு ‘ என்ற உப தலைப்பில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.
அந்த பகுதி வருமாறு :
20:1 உத்தியோகத்தர் ஒருவர் கடமைகளை ஆற்றுவது பொது நன்மைக்கு ஒத்துவராதென மருத்துவ அல்லது வேறு யாதேனுமொரு விசேட காரணத்தினால் கருதப்படுமிடத்து, நியமன அதிகாரி தனிப்பட்ட முறையில் அந்த உத்தியோகத்தரை கட்டாய லீவில் அனுப்ப முடியும்
20:2 அந்த லீவினை குறித்த உத்தியோகத்தரின் எஞ்சிய லீவுகள் இருப்பின் அவற்றிலிருந்து முதலில் குறைத்துக் கொள்ளல் வேண்டும். உத்தியோகத்தரின் எஞ்சிய லீவுகள் முடிவடைந்ததன் பின்னர் வழங்கப்படுகின்ற லீவினை முழுச் சம்பளத்துடனான லீவொன்றாகக் கணிப்பிடுதல் வேண்டும்
இந் நிலையிலேயே, வைத்தியர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட மாதம் முதல் அவருக்கான சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாமை பாரிய குற்றம் எனவும் சுட்டிக்காட்டும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள், அது தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந் நிலையில், வைத்தியர் ஷாபியை மீள சேவையில் இணைக்குமாறு சுகாதார அமைச்சின் செயலர் தனது கடிதத்தில் கூறாத போதும், வைத்தியர் ஷாபிக்கு சம்பளம் வழங்குமாறு அறிவித்துள்ளார். அத்துடன் இதுவரை சம்பளம் வழங்கப்படாமை தொடர்பில், குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் அவர் விளக்கமும் கோரியுள்ளார்.
இந் நிலையில் இது தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன் கமுவவிடம் விடிவெள்ளி வினவியது.
கேள்வி : வைத்தியர் ஷாபிக்கு சம்பளத்தை செலுத்துமாறு சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது அல்லவா? தற்போது சம்பளம் வழங்க ஆரம்பித்துள்ளீர்களா ?
வைத்தியசாலை பணிப்பாளர் : ஆம், அறிவித்துள்ளர்கள். அந்த அறிவித்தலுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
கேள்வி : இன்னும் சம்பளம் வழங்கவில்லையா ?
வைத்தியசாலை பணிப்பாளர் : நான் அதற்கான தேவையான உத்தரவுகளை வழங்கியுள்ளேன். பல மாதங்களுக்கான நிலுவை உள்ளதால் அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும். தேவையான நிதியைப் பெற சுகாதார அமைச்சிடம் கோர வேண்டும். எனது கடமைகளை நான் செய்துள்ளேன்.
கேள்வி : கட்டாய விடுமுறையின் போது சம்பளம் இல்லாமல் போகுமா?
வைத்தியசாலை பணிப்பாளர் : கட்டாய விடுமுறையின் போது, தாபன விதிக் கோவைக்கு அமைய சம்பளம் வழங்கப்படும்.
கேள்வி : அப்படியானால் ஏன் வைத்தியர் ஷாபிக்கு சம்பளம் வழங்கப்படவில்லை ?
வைத்தியசாலை பணிப்பாளர் : அவர் முதலில் கைது செய்யப்பட்டார் தானே. விசாரணைகள் தொடர்ந்தன. அதனால் சம்பளம் அளிக்கப்பட்டிருக்கவில்லை. இரு வருடங்களுக்கு மேல் சென்றாலும், சம்பளம் வழங்குமாறு சுகாதார அமைச்சிலிருந்து உத்தரவுகள் வரவும் இல்லை.
கேள்வி : அடிப்படை விசாரணை ஒன்று நடாத்தப்பட்டதா?
வைத்தியசாலை பணிப்பளர் : அடிப்படை விசாரணை ஒன்று வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது.
கேள்வி : அடிப்படை விசாரணையில் குற்றவாளியாக காணப்பட்டால், குற்றப் பத்திரிகை ஒன்று கையளிக்கப்பட்டு, ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்பட வேண்டும் அல்லவா?
வைத்தியசாலை பணிப்பாளர் : அடிப்படை விசாரணையில் குற்றவாளியாக காணப்பட்டார். நாம் அவ்வறிக்கையை சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அமைச்சு குற்றப் பத்திரிகை ஒன்றினை கையளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாம் சுகாதார அமைச்சின் பிரதானி ஒருவரிடம் வின வினோம். அதற்கு பதிலளித்த அந்த அதிகாரி, அடிப்படை விசாரணை வைத் தியசாலையினால் அன்றி சுகாதார அமைச்சினாலேயே நடாத்தப்பட வேண் டும் என தெரிவித்தார். அத்துடன் வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட விசாரணை சுயாதீனமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார். முறையான அடிப்படை விசாரணை ஒன்றில் வைத்தியர் ஷாபி இதுவரை குற்ற வாளியாக காணப்பட வில்லை எனவும், அவ்வாறான நிலை யில் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை கையளிக் கவோ, முறையான ஒழுக்காற்று விசார ணைகளை முன்னெடுக்கவோ முடியாது என அந்த அதிகாரி சுட்டிக்கட்டினார்.
அந்த வகையில் வைத்தியர் ஷாபிக்கு நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாகவும் அவர் மீளவும் பணிக்கத் திரும்பி விட் டதாகவும் அவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவை யிலுள்ள சம்பளம் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டதாகவும் வெளிவந்த செய்திகள் தவறானவையாகும். வைத்தியர் ஷாபிக்கு முழுமையான நீதி நிலைநாட்டப்படும் வரை குரல் கொடுப்பது அனைவரதும் கடமையாகும்.-Vidivelli