எம்.ஏ.எம். அஹ்ஸன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகள் மீது கடந்த பத்தாம் திகதி அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புற்று நோயாளி உட்பட கடுமையான காயங்களுக்குள்ளான ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைகளின் பின்னர் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளார்கள். குறித்த கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று கூறியே ஏனைய கைதிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவர்களை பாதுகாப்பான சிறைக்கு மாற்றுமாறும் சிறைச்சாலை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்கள். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள் தெரிவித்ததன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பதுளை சிறைச்சாலையில் தற்போது ஒன்பது சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தற்போது கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கைதிகள் அனைவருக்கும் இரவு உணவு விநியோகிக்கப்பட்ட போது பெயர் வெளியிடப்படாத மூன்று கைதிகள் முஸ்லிம் கைதிகளை ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்’ என அழைத்து மிலேச்சத்தனமாக தாக்கியிருக்கிறார்கள். புற்று நோயாளியான றிஸ்பானையும் தாக்குவதற்காக அவர்கள் துரத்தியுள்ளார்கள். தன்னால் முடிந்தவரை ஓட முயற்சி செய்த அவர் இறுதியில் மயங்கி விழுந்து முழங்காலில் காயம் ஏற்பட்டு இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். றிஸ்பான் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
பதுளை சிறைச்சாலையில் நடந்த வன்முறை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறவினர்கள் வழங்கிய கடிதத்தில் காயம்பட்ட நால்வரில் ஒருவருக்கு தாடை உடைந்து சத்திரசிகிச்சை செய்துள்ளார்கள் என்றும் மற்றுமொருவருக்கு தலையில் பலத்த அடி காரணமாக 13 தையல்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள். ஏனையவர்கள் கைகளில் திசு வெடித்தும் வயிற்றில் பலமான காயம் ஏற்பட்டும் சிகிச்சை பெற்றுள்ளார்கள். ஓடி ஒழிந்தே இவர்கள் உயிர் தப்பியுள்ளார்கள். இந்தக்கொடுரமான தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதைக் கூட சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துக் கூறவில்லை என்று உறவினர்கள் வழங்கியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள்.
றிஸ்பானின் சகோதரர் மொஹமட் நவ்ஸாத் இது தொடர்பாக தெரிவிக் கையில் “சிறையில் உள்ள எனது சகோதரர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வெளிர் நிறத்துடன் பலவீனமாக இருக்கிறார். சில கைதிகள் அவரை அடிக்க முயன்றுள்ளார்கள் ஆனால் அவரது பலவீனமான உடல் நிலை காரணமாக திடீரென சரிந்து விழுந்து காயமடைந்துள்ளார். சந்தேக நபர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.
கொடூரமாக தாக்கப்பட்ட நான்கு கைதிகளுள் ஒரு பிள்ளையின் தந்தையான முப்பது வயதுடைய மொஹமட் றிஸ்வான் என்பவரும் ஒருவர் ஆவார். இது தொடர்பாக தெரிவிக்கையில், றிஸ்வானின் மனைவி பாத்திமா பஸ்ரின், “அவரது ஒரு கையில் பலத்த காயம் ஏற்பட்டு திசு வெடித்துள்ளது. மூன்று நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு தற்போது சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளோம்” என தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மைத்துனர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது “இம்முறை நான்கு கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று கூறி மற்ற கைதிகள் தாக்கியுள்ளார்கள். காயமடைந்த கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நாங்கள் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதுடன் அவர்களை பாதுகாப்பான சிறைக்கு மாற்றுமாறும் வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.
சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அடிக்கடி இவ்வாறு துன்புறுத்தப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். முஸ்லிம் கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று அழைப்பவர்களால் முஸ்லிம் கைதிகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் அவர்களை தனித்தனி அறைகளுக்கு மாற்றியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த யாகூப் என்பவரின் நெற்றியில் பதிமூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு அவர் இப்போது சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளதாக அவரது மனைவி தெரிவிக்கிறார். பதுளை சிறைச்சாலையில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதை ஊடகங்கள் வாயிலாகவே யாகூபின் மனைவி தெரிந்துகொண்டார். ஆனாலும் தனது கனவரும் தாக்கப்பட்டிருப்பார் என்று அவர் நினைக்கவில்லை. மாதத்தில் ஒரு முறை தனது கணவரை பார்க்க பதுளைக்குச் செல்லும்போதே விடயத்தை அறிந்துகொண்டுள்ளார்.
கணவர் சிறைக்குச் சென்றதன் பின்னர் சிறு தொழில்கள் செய்து குடும்பத்தினரின் உதவியுடன் பிள்ளைகளை யாகூப்பின் மனைவி கவனித்துக் கொள்கிறார். சம்பவம் குறித்து அவர் தெரிவிக்கையில், “நடந்த விடயத்தை எங்களுக்கு யாரும் அறிவிக்கவும் இல்லை. அவர்களுடைய உடல் நிலை பற்றி எங்களுக்கு சொல்லாமல் இருக்கிறார்கள். சம்பவத்தை கேள்விப்பட்டு சிங்களம் தெரிந்தவர்கள் மூலம் தொலைபேசியில் கதைத்து விசாரித்தபோது கூட சிறைச்சாலை அதிகாரிகள் நடந்த எதையும் சொல்லவில்லை. விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை வெளியில் எடுக்க பல முறை முயற்சித்துள்ளோம். அது முடியாததால் இப்போது நாங்கள் அவர்களிடம் கேட்பதெல்லாம் அவர்களை பாதுகாப்பான சிறைக்கு மாற்ற வேண்டும் என்பது மட்டும்தான். எல்லா நாட்களையும் பயத்துடனும் கவலையுடனும்தான் கடத்துகிறோம்” என அழுகையுடன் கூறினார்.
தாக்கப்பட்டவர்களில் ஸபீர் என்பவர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய தந்தை இது தொடர்பாக தெரிவிக்கையில், ஸபீரின் தாடை எலும்புகள் வெகுவாக உடைந்துள்ளதாக கூறினார். இந்நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஐந்து நாட்கள் வரை வைத்தியசாலை கண்காணிப்பில் இருந்த தனது மகன் தற்போது சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளார் என்று ஸபீரின் தந்தை தெரிவிக்கிறார். “சிறைச்சாலையில் உள்ளவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமைதான் இருக்கிறது. அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும்படி நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். விசாரணைகள் எதுவும் இல்லாமல்தான் இரண்டரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைத்துள்ளார்கள்” என அவர் மேலும் கூறினார்.
சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான 28 வயதான ஷிப்லி என்பவருக்கு வயிற்றில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி இது தொடர்பாக தெரிவிக்கையில், “அவர் எற்கனவே முதுகில் காயங்களுடனே இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தொன்றினால் அவருக்கு தொடர்ச்சியான முதுகு வலி இருக்கிறது. இப்போது வயிற்றில் ஏற்பட்டுள்ள காயத்தினால் எதுவும் சாப்பிட முடியாமல் சிரமப்படுகின்றார். என்ன சாப்பிட்டாலும் வாந்தியாக வெளிவருவதாக சொன்னார். அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என கண்ணீருடன் கூறினார்.
திருமணமாகி ஆறு மாதங்களில்தான் ஷிப்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியால், அவரது மனைவியின் கரு கலைந்த நிலையில் வைத்தியசாலையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று இப்போது குணமாகியுள்ளார். இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் ஷிப்லியின் பெற்றோருடன் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ள விடயம் அவரை வெகுவாக பாதித்துள்ளது.
சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக கேள்விப்பட்டு சிறைச்சாலையை தொடர்புகொண்டு கைதிகளின் உடல் நிலை குறித்து உறவினர்கள் விசாரிக்கும்போது சிறைச்சாலையிடம் இருந்து உரிய முறையில் பதில் கிடைப்பதில்லை என்று உறவினர்கள் சொல்கிறார்கள். கைதிகளின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறவினர்களிடம் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் கடந்த புதன் கிழமை நேரடியாகச் சென்று உறவினர்கள் பார்க்கும்போதுதான் உண்மையான நிலைமை உறவினர்களுக்கு தெரிந்துள்ளது. பதுளை சிறைச்சாலையில் நடந்த வன்முறை தொடர்பான முறைப்பாட்டு கடிதத்தில் உறவினர்கள் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆர்வலர் ஷ்ரின் ஸருர், மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சந்தேக நபர்களில் மூவர் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளார்கள் என்பதை பதுளை மனித உரிமைகள் அலுவலகம் மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலகத்திற்கு தெரிவித்திருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பதுளை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தபோது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலைக்குத் திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்” என தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கை யில், “சிறைச்சாலையில் உள்ளவர்களின் உடல் நிலை குறித்து தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அவர்களது உடல்நிலை குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. நேரடியாகச் சென்றே காயங்களை அவதானித்துள்ளார்கள்” என்றார். பாதிக்கப்பட்ட கைதிகள் 30 மாதங்களுக்கும் மேலாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கள் அடிக்கடி ஒரு சிறைச்சாலையில் இருந்து வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதாக ஷ்ரின் தெரிவிக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் அவர் “சில நேரங்களில் கைதிகள் எங்கிருக்கிறார்கள் என்று கூட அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியாது. குடும்பத்துடன் ஒரு வரையறுக்கப்பட்ட தொடர்பு மாத்திரமே உள்ளது. இவர்கள் மிகவும் வறுமையானவர்கள், சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகளை தூர இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களது உறவினர்கள் கைதிகளை பார்வையிட சிரமப்படுகின்றார்கள்.
சிரமத்திற்கு மத்தியில் பார்க்கச் சென்றாலும் ஐந்து நிமிடங்கள் மாத்தி ரமே அனுமதிக்கப்படுகின்றனர். சிறைச்சாலை க்கு கைதிகளை பார்வையிட செல்லும் முஸ்லிம் பெண்களை ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்’ என்று அங்குள்ளவர்கள் அழைக்கின்றார்கள். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 33 மாதங் கள் ஆகியும் இன்னும் அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட வில்லை” என்றார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமது உறவினர்களின் வழக் குகளை துரிதப்படுத்தி விரைவில் விடு தலை செய்து தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பாதிக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். அதுவரை வேறொரு சிறைச்சாலைக்கு அவர்களை இடம்மாற்றி தமது உறவினர்களின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறும் கொலை அச்சுறுத்தல் விடுத்து, தாக்கிய ஏனைய கைதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமைகள் ஆனைக்குழுவுக்கு உறவினர்கள் வழங்கியுள்ள கடிதத்தில் வினயமாக கேட்டுள்ளார்கள்.- Vidivelli