(ஏ..ஆர்.ஏ.பரீல்)
இலங்கை தப்லீக் ஜமா அத் அமைப்பின் தலைவராக ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவரே செயற்பட்டு வருகிறார். இலங்கை முஸ்லிம்களை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவில் தப்லீக் ஜமா அத் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உலமா சபை தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த வேண்டுமெனவும், பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இராஜகிரியில் பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது: சவூதி அரேபியா அரசாங்கம் தப்லீக் ஜமா அத் அமைப்பை தடை செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. அநேகமான இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பார தூரத்தன்மையை தற்போது விளங்கிக் கொண்டுள்ளன. அத்தோடு தங்கள் தவறுகளையும் திருத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெறுவதற்கு பிரதான காரணியாக இருக்கும் தப்லீக் ஜமா அத் அமைப்பைத் தடை செய்வது பற்றி அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் பாரம்பரிய, சுதேச முஸ்லிம் சமூகத்தினரது செயற்பாடுகளுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் பெரும் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது. மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய பகுதிகளிலுள்ள பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினருடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டோம். கிழக்கு மாகாணத்தில் வாழும் பாரம்பரிய சுதேச முஸ்லிம் சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளுக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் பெரும் தடைகளை ஏற்படுத்தயுள்ளமை அறியக் கிடைத்தது. இலங்கையில் வலுப்பெற்றுள்ள அடிப்படைவாத அமைப்புகள் குறித்து அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினர் தற்போது முன் வைக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானவை. அடிப்படைவாதிகளின் நோக்கம், இலக்கு, அவர்கள் திட்டமிட்டுள்ளவைகள் பற்றி நாம் தாக்குதல் இடம் பெறுவதற்கு முன்பே தெரிவித்து வந்தோம்.
தப்லீக் ஜமா அத்தின் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து நாம் ஆரம்ப காலத்திலிருந்தே குறிப்பிட்டு வருகிறோம். இஸ்லாமிய அடைப்படைவாதம் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், அதனால் ஏற்படவுள்ள எதிர்கால விளைவுகள் என்பன குறித்து நாம் பகிரங்கப்படுத்துகையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், அரசியல் வாதிகளும் கவனம் செலுத்தவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று ஒன்று இல்லை. பொதுபல சேனா இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவித்து இனவாதத்தைத் தூண்டுகிறது என்று எம்மீதே குற்றம் சுமத்தினார்கள். எம்மை இனவாதிகளாக சித்தரித்தார்கள். தப்லீக் ஜமா அத்தை சவூதி அரசு தடைசெய்ததன் பின்பாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றார்.- Vidivelli