(ஆர்.யசி)
நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும், அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே நீதியமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரியை நீக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி உருவாக்கத்தின் போதும், அதில் என்னை தலைவராக நியமித்துள்ளதற்கும் பல்வேறு விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள் எழுவதை அவதானித்தே வருகின்றேன். ஆனால் இவற்றை நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை. எமது வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதற்காகவே சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். அதுமட்டும் அல்லாது நீதி அமைச்சர் அலி சப்ரி என்னை நீக்க வலியுறுத்தியுள்ளதுடன் முரண்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளார். முதலில் அவர் யார்? அவர் மக்களின் வாக்குகளில் தெரிவான பிரதிநிதியும் இல்லையே. ஜனாதிபதியின் நம்பிக்கையை வென்றவர் என்ற காரணத்திற்கான அவரை நீதி அமைச்சராக்கியுள்ளனர். அதனை நாம் எதிர்க்கவில்லை, அதற்காக அவரின் விருப்பத்திற்கு செயற்படுவதை அனுமதிக்க முடியாது. அவரும் காலத்தை கடத்தும் அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார்.
அவருக்கும் எமக்கும் இடையில் பல பிரச்சினைகள் உள்ளன, அவற்றை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலமாக இவற்றை நாம் கையாள வேண்டியுள்ளது. அழகாக புனிதமாக பேசினாலும் இவர்கள் பித்தலாட்ட அரசியல்வாதிகள். ஆகவே இவர்களின் செயற்பாடுகளை எம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நீதி அமைச்சர் யார், அவரை சுற்றியுள்ள நபர்கள் யார் எவர் என்பது எமக்கு நன்றாக தெரியும். அவர்களுக்கு தைரியம் இருந்தால் எம்முடன் விவாதத்திற்கு வர வேண்டும்.
நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும், அதையே நாம் விரும்புகின்றோம். அவர் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் நினைக்கவில்லை. ஏனென்றால் இவரே காலத்தை கடத்திக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல தான் பதவி விலக வேண்டும் என நினைத்திருந்தால் அவருக்கு கொள்கை ஒன்று இருக்கும் என்றால், ஆடை அணியும் நபர் என்றால் யாரும் கூறுவதை கேட்டுக்கொண்டு அமைச்சுப்பதவியில் இருக்க வேண்டியதில்லை. உடனடியாக பதவி விலக வேண்டும். ஊடகங்களுக்கு ஒன்றும், அமைச்சரவைக்குள் வேறொன்றும் பேசும் இவர்களின் நிலைப்பாடு என்னவென்பது எமக்கும் நன்றாக தெரியும் என்றார்.- Vidivelli