நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. ‘நாடு வங்குரோத்தாகிவிட்டது’ என ஆளும் தரப்பின் அமைச்சர்களே வாய்திறந்து விமர்சிக்கின்ற அளவுக்கு நிலைவரம் கைமீறிச் சென்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு திடீரென எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதால் ஏனைய சகல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. இது மக்களைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பிறக்கவிருக்கும் 2022 நிச்சயமாக மக்களுக்கு பலத்த சவால்களைக் கொண்டுவரும் என்றே பொருளாதார மற்றும் அரசியல் நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
இது ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கின்ற நேரமல்ல. அரசியல் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு நாம் அடுத்த முறை ஆட்சிக்கு வரலாம் எனத் திட்டம் வகுக்கின்ற காலமும் அல்ல. மாறாக அரசாங்கமும் எதிரணியினரும் பொருளாதார நிபுணர்களும் இராஜதந்திரிகளும் இணைந்து தீர்வு காண வேண்டிய பிரச்சினையாகும். இன்றேல் அடுத்த தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள்.
அந்த வகையில் நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கின்ற நிதி நெருக்கடி, அந்நியச் செலாவணி நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றுக்கு விரைவாக திட்டமிட்ட ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டிய தேவையுள்ளது.
இலங்கையானது இவ்வருடத்திலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையான 4 வருட காலப்பகுதியில் அதிகளவான பிணைமுறி கொடுப்பனவுகளை செலுத்த வேண்டியிருக்கின்றது. முக்கியமாக இந்த நான்கு வருட காலப்பகுதியில் இலங்கையானது வருடம் ஒன்றுக்கு பிணைமுறி மற்றும் கடன் கொடுப்பனவு உள்ளடங்கலாக 4.5 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டும். இதில் அவசரமாக அடுத்த மாதம் 1 பில்லியன் டொலர்களைச் செலுத்த வேண்டியிருப்பதுடன் 2022 இல் மாத்திரம் 7 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் டொலர்களில் கடனைச் செலுத்துவது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றதாக மாறியுள்ளது. அதனால்தான் ஈரானுக்கு வழங்க வேண்டிய சுமார் 260 மில்லியன் டொலர் கடனுக்கு பதிலாக தேயிலையை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. எனினும் எல்லா நாடுகளும் இவ்வாறான ஒப்பந்தத்துக்கு முன்வரமாட்டா.
இந்நிலையில் அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தை நாடி புதிய ஒரு ஏற்பாட்டுக்குச் செல்வதன் ஊடாகவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற யோசனையை பொருளாதார நிபுணர்களும் அரசியல்வாதிகளும் முன்வைக்கின்றனர். எனினும் அரசாங்கம் அதற்குத் தயங்குகிறது. எக்காரணம் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தை நாடமாட்டோம் என மத்திய வங்கி ஆளுநர் கூறி வருகிறார்.
வெளிநாட்டு கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையை (–– சிசிசி) என்ற பிரிவுக்குள் வைத்திருப்பதால் வெளிநாடுகள் இலங்கைக்கு கடன் வழங்குவதில் பின்வாங்குகின்றன. இலங்கை தற்போதிருக்கின்ற நிலையில் எந்தவொரு நாடும் பில்லியன் கணக்கில் கடன் கொடுக்க முன்வராது என்பதே யதார்த்தமாகும்.
இந் நிலையில் இலங்கைக்கு இருக்கின்ற ஒரே தெரிவு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதுதான். இவ்வாறான நெருக்கடி நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் மிகப்பெரியதொரு தொகையை கடனாகப் பெற்று ஏற்கனவே இருக்கின்ற இந்த கடன்களையும் பிணைமுறிகளையும் செலுத்த முடியும். அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை ஒரு நீண்டகால ரீதியில், சலுகையின் அடிப்படையில் இலங்கை செலுத்த முடியும். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடாக இருப்பதன் காரணமாக இதனைச் செய்வது அவ்வளவு கடினமானதல்ல.
எனினும் சர்வதேச நாணய நிதியம் எவ்வாறான நிபந்தனைகளை இலங்கைக்கு விதிக்கும் என்பதே இப்போதுள்ள சவாலாகும். இந்த அச்சத்தினால்தான் இலங்கையும் தயங்குகிறது. அதாவது அரசாங்கத்தின் செலவை கடுமையாக குறைத்தல், மக்களுக்கான நலன்புரி செலவுகளைக் குறைத்தல், ஊழல், வீண்விரயம் என்பவற்றைக் கட்டுப்படுத்தல், இறக்குமதிக் கட்டுப்பாடுகளை முற்றாக தளர்த்துதல் போன்ற நிபந்தனைகளை நாணய நிதியம் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதானது அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொண்டு வரும் என்றும் குறிப்பாக மக்களுக்கான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட நலன்புரித் திட்டங்களுக்கான செலவைக் குறைப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கலாம் என்றும் அரசாங்கம் அஞ்சுகிறது. இதில் சில நியாயங்கள் உள்ள போதிலும் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைத்தல், ஊழல் மோசடி வீண்விரயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட விடயங்களுக்கு இலங்கை இணங்கிச் செல்ல முடியும். இதற்கான அர்ப்பணிப்புகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
நாட்டில் எந்தவித டொலர் கையிருப்பும் இல்லாத நிலையில், வெளிநாடுகளினதோ அல்லது சர்வதேச நாணய நிதியத்தினதோ உதவியின்றி மிகச் சிறிய நாடான இலங்கையால் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். எனவேதான் நாட்டின் இறைமைக்குப் பாதிப்பில்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி, நாட்டை ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதே இப்போதுள்ள ஒரேயொரு தீர்வாகும். இதனையே பொருளாதார நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர்.- Vidivelli