மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
தமிழில்: எம்.எச்.எம். ஹஸன்
தமது சேதனப் பசளைத் திட்டம் சமூக ரீதியாக மோசமான விளைவுகளைத் தோற்றுவித்து இடை நடுவில் ஸ்தம்பித்துவிட்ட நிலையில் அதே போன்ற மற்றுமொரு திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். அது தான் ஒரே நாடு ஓரே சட்டம் என்ற நிலையைத் தோற்றுவிப்பதற்கான பிரேணைகளை முன்வைக்கும் ஒரு செயலணியை அமைத்திருப்பதாகும்.
இந்த யோசனை பெருமளவான விமர்சனங்களுக்கும், கலந்துரையாடலுக்கும் உட்பட்டிருப்பதனூடாக கேலிக்கிடமானதாகவும் மாறியுள்ளது. மக்களின் துலங்கல்கள் அதிகம் வெளிப்பட்டிருப்பது அதன் தலைமைத்துவம் பற்றியாகும். அப்பதவிக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற ஞானசார தேரர் தலைவராக்கப்பட்டிருப்பது குறித்தே அதிகம் விமர்சிக்கப்படுகிறது. அது விமர்சிக்கப்பட வேண்டியது தான். இது போன்ற சட்ட மூலங்களின் போது பொறுப்பற்ற, ஜனநாயக விரோத, இனத்துவ ஆதிக்க அரசியல் ரீதியான நாசகார இயல்புகள், நோக்கங்கள் சாத்தியப்பாடுகளை ஜனநாயகத்தின் கோணத்தில் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இன மேலாதிக்க வாதம்
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் அடிப்படை, பல்லின சமூகத்தில் காணப்படும் இன மேலாதிக்க பார்வையும் அரசியல் நோக்கமுமாகும். இது இன, மொழி, கலாசார, சமய பல்வகைமை கொண்ட சமூகத்தில் அரசியல் மேலாதிக்கத்தையும் சமூக மேலாதிக்கத்தையும் இணைக்கவேண்டும் என்ற உந்துதலாகும்.
வலுக்கட்டாயமாக ஒருமுகப்படுத்தல் என்ற இந்த செயலொழுங்குக்கு ஒரு வரலாறுண்டு. ஒரு நாடு ஓர் இனம் என்ற கோசத்தின் அடிப்படையில் தான் இது ஐரோப்பியாவில் ஆரம்பமானது. பன்மொழி பேசும் பல மதங்களைப் பின்பற்றும் பன்மைக் கலாசாரங்களையும் கொண்ட மக்களை உள்ளடக்கிய பெரும் சனத்தொகையையும் கொண்ட ஒரு குறிப்பிட்ட நிலப் பிரதேசத்தை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்கும் செயற்பாடு 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆரம்பமானது. தேசிய அரசு உருவாக்கவாதிகள் இதன் போது அனைத்து மக்களையும் அரசியல் ரீதியாக ஒரு அதிகார வகுப்பின் கீழ் கொண்டு வருவதற்காக அவர்களிடையே ஒரே அரசியல் அடையாளமும், மத, மொழி, கலாசார அடையாளத்தையும் தோற்றுவிப்பதற்கு முனைந்தனர். “தேசம்” என்ற நவீன அரசியல் கலாசார எண்ணக்கருவின் கீழ் ஐரோப்பாவில் 17ஆம் நூற்றாண்டு முதலே தேசியவாதம் இந்தப் பின்னணியிலேயே தோன்றி வளர்ந்தது.
ஒருமுகப்படுத்தல் வரலாறு
ஒருமுகப்படுத்தல் ஐரோப்பாவுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல. குடியேற்றவாதத்தின் பெறுபேறாக ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள நாடுகளிலும் இச்சிந்தனை பரவியது. ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றங்களாக மாறிய சமூகங்கள் அனைத்தும் போல இன, மொழி, கலாசார, சட்ட, அரசியல், நிர்வாக ரீதியான பன்முகத் தன்மை கொண்ட வெவ்வேறு இன,மொழி, பிரதேச, தனித்தன்மைகளைக் கொண்டதாகவே நிலவின. குடியேற்றவாதிகளின் ஒரு முக்கிய கொள்கையாக இந்த ஒருமுகப்படுத்தல் காணப்பட்டது. ஒரே ஆட்சி முறையின் கீழ் கொண்டு வருவது அவர்களின் கொள்கையாக இருந்தது. இலங்கையை எடுத்துக் கொண்டால் 1815 இல் முழுநாட்டையும் குடியேற்றத்தின் கீழ் கொண்டு வந்தமை. 1815 இல் கொண்டு வரப்பட்ட நிர்வாக ஒருமைப்பாடுத்திட்டம், 1833 கோல்புரூக் கமரன் நிர்வாகச் சீர்திருத்தம் என்பன குறிப்பிடத்தக்கன.
இவற்றின் அடிப்படையில் ஒரு நாடு, ஓர் அரசியல் முறை, ஒரு நிர்வாகம், ஒரு சட்டம், ஒரு நீதிமன்ற முறை என்றவாறு ஒருமுகப்படுத்தல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவை எமது நாட்டில் பாரம்பரியமாக வந்த நீதி, நிர்வாக முறைகளின் வளர்சிக்கட்டங்கள் அல்ல. மாறாக ஐரோப்பிய குடியேற்ற நாட்டவர்களால் தன்னிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்டவை. இவை எமது நாட்டு கலாசாரத்தில் இருந்து பிறந்த சிந்தனைகளன்று.
குடியேற்றவாதிகளின் நடவடிக்கைகள் ஒரு பரிபூரண ஒருமைப்பாட்டைக் கொண்டு வரவில்லை. நிர்வாக, ஆட்சி, பாதுகாப்பு விடயங்களிலான ஒருமைப்பாட்டிலேயே அவர்கள் கவனம் செலுத்தினர். சமய, கலாசார, மொழி, மற்றும் சட்ட அமுலாக்கம் போன்றவற்றின் பன்மைத்துவம் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டது. இந்திய இலங்கை குடியேற்றவாத வரலாற்றில் இந்தப் பொதுத் தன்மையை காண முடியும்.
இந்தப் பூரணமற்ற குடியேற்றவாத ஒருமுகப்படுத்தற் செயலொழுங்கு சுதந்திரத்தின் பின்னரும் கைவிடப்படவில்லை அவற்றைத் தொடர்ந்து முன்கொண்டு செல்லவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிந்திய உள்நாட்டு ஆட்சியாளர்களின் முக்கிய இலக்கு, மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்திய தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்புதல் என்ற எண்ணக் கருவின் நோக்கம் கலாசார ஒருமைப்பாடு பற்றியதாகும். சமய, கலாசார, மொழி, ஒருமைப்பாடு அதன் முக்கிய பேசுபொருளாக அமைந்தன. அரச, சமய, அரசகரும மொழி என்ற எண்ணக்கருக்கள் கருத்தாடல்கள் முக்கியத்துவம் பெற இதுவே காரணமாக அமைந்தது. அந்த கலாசார ஒருமைப்பாடு தேசிய ஒருமைப்பாட்டின் அதாவது இனப்பன்மைத்துவத்தினை ஒரே அரசியல் தனித்துவத்துக்குள் கொண்டு வரும் ஒரு முன் நிபந்தினை என்ற நம்பிக்கையும் கருத்தாடலும் சுதந்திரத்துக்குப் பிந்திய குடியேற்ற நாடுகளின் அதிகார பீட உயர் வர்க்கத்தினரிடையிலும் படித்த புத்திஜீவிகளுக்கிடையிலும் விரைவாக பரவுவதற்கு இது காரணமாக அமைந்தது. சிங்கள சமூகத்தில் (ஜாதிக்க சிந்தனைய) தேசிய சிந்தனை என்ற பெயரில் பிரபல்யம் பெற்றதும் இதுவே.
இந்தியாவில் பிஜேபி (BJP) ஆட்சியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறுவதும் ராஜபக்ச குடும்ப ஆட்சியின் கீழ் இலங்கையில் நடப்பதும் இந்த கட்டாய அடிபணிய வைக்கும் முயற்சியேயாகும். இந்த இரண்டு ஆட்சியாளர் தரப்பினரதும் மேலாதிக்கவாதத் தாக்குதலுக்குப் பலியாகி இருப்பவர்கள் சிறுபான்மை முஸ்லிம்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்ச்சியன்று.
ஐரோப்பாவிலும் குடியேற்ற நாடுகளிலும் ஒருமைப்பாட்டுச் செயலொழுங்கில் மற்றுமொரு ஒற்றுமையைக் காண முடிந்தது. அதாவது தேசத்தைக் கட்டியெழுப்புதல் தேசிய ஒருமைப்பாடு தேசிய தனித்துவத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய எண்ணக் கருக்களால் கூறப்பட்ட ஒருமைப்பாட்டுச் செயற்திட்டம் இனத் தேசியவாதம் மற்றும் அதன் ஆதிக்கவாதத்தின் அரசியல் செயற்திட்டமாக மாற்றமடைந்தமையாகும், இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின்னரான சிங்கள இனத்தேசியவாதம் இதற்கான சிறந்த உதாரணமாகும். சிங்களவர்கள் தமிழர்கள் ஆகிய இனங்களுக்கிடையில் தேசிய வாதம் அரசியல் பரவலுக்குச் சமாந்தரமாக சிங்கள இனத் தேசியவாதம் ஒரு அரசியல் செயற்திட்டமாக (Political project)மாற்றமடைந்தது. அதன் விளைவு சிங்கள ஆளும் வர்க்கத்தினர் தலைமை தாங்கிய “தேசத்தைக் கட்டியெழுப்புதல்” என்ற செயற்பாடு சிங்கள பௌத்தர்களுக்கான கலாசார ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு செயற்திட்டமாக மாற்றம் பெற்றமையாகும்.
ஆதிக்க தேசியவாதத்தின் இரண்டாவது கட்டம்
கோட்டாபய ராஜபக்சவின் “ஒரே நாடு ஒரே சட்டம்”என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டிருப்பது. குடியேற்றவாதத்திற்குப் பின்னரான சிங்கள ஆதிக்கவாத தேசியவாதச் செயற்திட்டத்தின் ஒரு நிகழ்ச்சித் திட்டமாகவும் அதன் இரண்டாவது கட்டமாகவுமே ஆகும். பன்மைத்துவ சமூகத்தில் மேலாதிக்க இனத்துவ தேசியவாதத்தின் மூலம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக தோற்றுவித்த புதிய போக்குகள் இன்றைய இலங்கையிலும் இந்தியாவிலும் காணக்கூடியதாக உள்ளது. அதாவது மேலாதிக்க பெரும்பான்மை இனத்துவ தேசியவாதத்தினர் தம்வசம் வைத்துள்ள ஆட்சியில் பணிந்து நடக்க வேண்டியவர்களாக சிறுபான்மையினர் வலுக்கட்டாயமாக மற்றப்படுவதாகும்.
இந்தியாவில் பிஜேபி (BJP) ஆட்சியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறுவதும் ராஜபக்ச குடும்ப ஆட்சியின் கீழ் இலங்கையில் நடப்பதும் இந்த கட்டாய அடிபணிய வைக்கும் முயற்சியேயாகும். இந்த இரண்டு ஆட்சியாளர் தரப்பினரதும் மேலாதிக்கவாதத் தாக்குதலுக்குப் பலியாகி இருப்பவர்கள் சிறுபான்மை முஸ்லிம்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்ச்சியன்று. ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயற்திட்டத்தின் பிரதான இலக்கு இலங்கை முஸ்லிம்களின் கலாசாரத் தனித்துவம் என்பது தெளிவு. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கலாசாரமும் இந்த இலக்கில் வர முடியும்.
இலங்கையின் மேலாதிக்க சிங்கள தேசியவாதத்திற்கும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் தேசிய வாதத்திற்குமிடையேயுள்ள அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்க கடந்த இரண்டு வருடங்களாக ராஜபக்ச அரசு ஒரு நிகழ்ச்சித்திட்டத்துடன் வேலை செய்கிறது. அந்தப் பட்டியலில் இப்போது கத்தோலிக்கமும் இணைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அந்த நிகழ்ச்சி நிரலில் (agenda) ராஜபக்சாக்கள் சேர்த்துள்ள புதிய அம்சம் சிறுபான்மை இன மக்களைப் பூரணமாக பணிய வைக்கும் திட்டமாகும்.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றாலும் இலங்கைத் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்த சிங்கள தேசியவாத அரசியலால் முடியவில்லை. இதற்கிடையில் 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலாசாரத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட சிங்களத் தேசியவாதம் தீர்மானித்ததன் நோக்கம் அவர்களை அரசியல் ரீதியாக அடிபணிய வைப்பதாகும். இனங்களுக்கிடையிலான போரை வேறு வழிகளில் தொடருவதற்கும் ஒரே நாடு ஒரே சட்டம் செயற்திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவத்திற்கு ஞானசார தேரரை நியமித்தமைக்கான அரசியல் அர்த்தமும் இது தான்.
சுபீட்சத்தின் நோக்கு
ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயற்திட்டத்தின் உண்மையான கருத்து பற்றி ஆழமாக நோக்கும் எவருக்கும் பயனளிக்கும் ஒரு முக்கிய ஆவணமுண்டு. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமான “சுபீட்சத்தின் நோக்கு” என்ற வெளியீடே அது. மிக அழகாக வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ள ஒரு பிரகடனமாக இது உள்ளது. “பண்பாடுள்ள, கட்டுப்பாடுள்ள, சட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தை நோக்கி” என்று பெயரிடப்பட்டுள்ள ஒன்பதாவது அத்தியாயத்தில் பின்வரும் வாக்கியங்களைக் காண முடியும்.
“குடிமக்களைப் போன்றே ஆட்சியாளனும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட வேண்டும் என்பதுடன் ஒரு நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். பிரஜை சட்டத்துக்கு பயப்பட வேண்டுமே தவிர சட்டத்தை அமுல் நடத்தும் நிறுவனங்களுக்கோ நபர்களுக்கோ பயப்படாததும் சட்டத்தை அமுல் நடத்தும் நிறுவனங்களும் ஆட்களும் சட்டத்துக்குக் கட்டுப்படுவதுமான ஒரு சூழலை உடனடியாக உருவாக்க வேண்டும்.”
இந்த கூற்றுகளிலிருந்து தெளிவாவது ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் போது “ஒரே நாடு ஒரே சட்டம்”என்ற கூற்றிற்கு வழங்கப்பட்ட கருத்திலிருந்து முற்றிலும் முரண்பட்ட ஒரு கருத்தை நோக்கி இப்போது நகர்ந்துள்ளமையாகும். மேற்படி கூற்றின் மூலம் கருதப்பட்டது ஆளுவோரும் ஆளப்படுவோரும் வேறுபடுத்தி நோக்கப்படும் இரண்டு வகையான சட்டங்கள் அல்லது சட்டத்தை அமுல் நடத்துவதில் உள்ள இரண்டு வகைகள் அல்லது சட்டத்தை அமுல் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் அந்த சட்டத்திற்கும் கட்டுப்படும் ஒரு சூழலை தமது சுபீட்சத்தின் பாதையின் போது உருவாக்கட்டும் என்பதாகும். அந்தக்கருத்து சட்ட ஆட்சி என்ற எண்ணக் கருவுடனும் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது மேற்படி கூற்றுகளில் காணப்படும் மற்றுமொரு சிறப்பம்சமாகும். சட்டத்தின் மேலாதிக்கம் (Rule of law) அல்லது சட்டத்தின் ஆட்சி என்பது தெளிவாகவே தாராண்மை வாத ஜனநாயக எண்ணக்கரு என்பது இங்கு தெளிவாகின்றது.
இதன் மூலம் கூறப்படுவது பதவிக்கு வரும் எந்தவொருவரும் தான்தோன்றித்தனமான, அடக்குமுறையான, மக்களைத் துன்புறுத்தும் சட்டங்களுக்கு குடிமக்கள் அடிபணிய வேண்டும் அல்லது அத்தகையதொரு கருத்தை எவ்வாறாவது கொண்டிருந்தால் அது சட்டத்தின் ஆட்சியல்ல, மாறாக அது (Rule by law) ஆட்சியாளரின் மேலாதிக்கமாகும். ஜனநாயகக் கருத்தில் சட்ட ஆட்சி என்பது உருவாக்கப்பட்டிருப்பது ஆட்சியாளரின் மேலாதிக்கம் (Rule by men) என்ற ஜனநாயகத்துக்கு முரணான சர்வாதிகார கருத்துக்கு எதிராக வரும் குடிமகனுக்கும் ஆட்சியாளருக்கும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற சுபீட்சத்தின் பாதை என்ற வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற கருத்து உரோமக் கூட்டாச்சி சட்டத்தின் கீழ் ஆரம்பமாகி தாராண்மை ஜனநாயகத்தின் கீழ் வளர்ச்சியடைந்த Rule of Law அதாவது Not rule of law by men (சட்டத்தின் ஆட்சியேயன்றி தனிப்பட்ட ஒருவரின் ஆட்சியல்ல) என்ற கோட்பாட்டுடன் நெருக்கமானதாகும். அக்கோட்பாட்டின் கருத்தை உயர்தர வகுப்புகளில் அரசியல் கற்கும் மாணவர்களும் சட்டக்கல்லூரி மற்றும் சட்டபீடங்களில் படிக்கும் மாணவர்களும் நன்கு அறிவர்.
ஒரு நாடு ஒரு சட்டம் என்பது தொடர்பான கோட்டபாய ராஜபக்ஷவின் செயற்திட்டத்துக்கு கருத்து ரீதியான எதிர்பார்ப்பை வெளியிடும் போது எதிர்க்கட்சி சிவில் சமூகத்தினர் மற்றும் ஜனநாயகச் சக்திகள் வலியுறுத்த வேண்டிய ஒரு முக்கியமான அரசியல் கருத்து மேற்படிக் கூற்றுகளில் வெளிப்படுகின்றது. அதாவது சுபீட்சத்தின் பாதை ஆவணத்தில் பல தடவைகள் கையாளப்பட்டுள்ள சட்டத்தின் ஆட்சி என்பதன் உண்மையான அர்த்தத்தின்படி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தி அந்த எண்ணக் கருவின் எதேச்சதிகார, ஆதிக்கவாத, சிதைவை தோல்வியடையச் செய்யும் ஒரு கருத்தியல் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். கோட்ரடபய ராஜபக்ச கைவிட்டுள்ள ‘சட்டத்தின் ஆட்சி’என்ற ஜனநாயக எண்ணக் கருவை ஜனநாயகத்தை மீள் நிலை நாட்டும் ஓர் அமைப்பு கையில் எடுக்க வேண்டும்.
சிறுபான்மையினரின் கலாசார உரிமைகள்
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்டாபய ராஜபக்சவின் செயற்திட்டம் பற்றியதான ஜனநாயக ஆய்வாளர்கள் புறக்கணிக்க முடியாத மற்றுமொரு விடயமுண்டு. அது பன்மைத்துவ சமூகமொன்றில் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகும். கோட்பாட்டு ரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான ஒரு பிரச்சினையாகவுள்ள இந்த விடயத்தை சுருக்கமாகவேனும் கலந்துரையாடுவதற்கு முயற்சிப்போம்.
இன, மத ரீதியான பன்மைச் சமூகங்களில் வாழும் சிறுபான்மை மக்களிடையே அவர்களுக்கேயுரிய தனித்துவமான கலாசார மரபுகள், வழக்காறுகள், நம்பிக்கைகள் உண்டு, பெரும்பான்மை சமூகத்திடையில் அவர்களுக்கேயுரிய தனித்துவமான கலாசார முரண்பாடுகளும் உண்டு. பெரும்பாலும் அத்தகைய இனக்குழுவினரின் குறிப்பிடத்தக்க சட்டத் தொகுதியாகவும் இருப்பது அத்தகைய கலாசாரமாகும். சிங்கள சமூகத்தில் இருக்கும் கண்டியர் விவாக விவாகரத்துச் சட்டம், தமிழ் சமூகத்தில் காணப்படும் தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சமூகத்தில் நிலவும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் முக்குவர் என்ற தமிழ் இனக் குழுவின் மத்தியிலுள்ள முக்குவர் சட்டம் என்பன அத்தகைய சட்ட விஷேட ஏற்பாடுகளுக்கு உதாரணமாகும். ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயற்திட்டத்தின் கீழ் சவாலுக்குள்ளாகி இருப்பதும் இத்தகைய சட்டங்களே. ஆனால் மேற் கூறப்பட்டவை அந்நியமானதல்ல மாறாக இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரிவுகளாகும்.
இத்தகைய சட்டங்கள் நிலவுவதை தீவிரவாத, இனவாத, தேசியவாத சக்திகள் பிழையான கண்ணோட்டத்துடன் யோசிக்கின்றனர். அது சம்பிரதாயபூர்வமான தேசிய அரசுவாத தேசியவாதக் குழுக்களில் இருக்கும் வெறுப்புடன் இணைத்து யோசிக்கப்படுகின்றது. கலாசார, சட்ட, மற்றும் தனித்துவமான ஒருமைப்பாடு அத்தகைய பிரிவினரின் இலக்காக இருப்பதே இந்த எதிர்ப்புக்கான காரணமாகும்.
பொதுபலசேனா இக்குழுவையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அந்த அமைப்பின் செயலாளர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற குழுவின் தலைவராக ஜனாதியதியால் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக ஒரு மோசமான சமிக்ஞையாக கருதப்படுவதும் இதனாலேயாகும்.
சிறுபான்மை இனத்தவர்களின் கலாசாரம்
சிறுபான்மை மக்களிடையே நிலவும் சில சட்டங்கள் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற சர்ச்சையும் இன்று இலங்கையில் எழுப்பப்படுகின்றது. முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பெண் பிள்ளைகளின் விடயத்தில் பாரிய பாகுபாட்டை வளர்ப்பதும் அவர்களது மனித உரிமைகளை மீறும் உறுப்புரைகளைக் கொண்டதுமாக உள்ளது என்ற விமர்சனம் முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்களாலும் வேறு மனித உரிமை ஆர்வலர்களாலும் எழுப்படுகின்றன. ஞானசார குழுவுக்கும் இது தெரியும். ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காக இதே விமர்சனங்களை அரசாங்கமும் செயலணியும் பயன்படுத்திக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஜனநாயகக் கோணத்தில் இருந்து நோக்கும் போது இங்கு ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. எமது நாட்டில் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதும் இப்பிரச்சினைகள் பற்றிய விளக்கத்தையாகும். பன்மைச் சமூகமொன்றில் இனரீதியான கலாசாரம் மற்றும் ஏற்பாடுகளில் காணப்படும் மனித உரிமை மீறல்களைக் கொண்டதும் ஜனநாயகத்திற்கு முரண்பட்டதுமான அம்சங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஜனநாயகத் தீர்வு எவை என்பது அக்கேள்வி.
இக்கேள்விக்கான ஜனநாயகவாதிகளின் பிரதான பதிலாக இருக்க வேண்டியது அரசாங்கம் வலுக்கட்டாயமாக பெரும்பான்மைவாத தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்குப் பொருத்தமான வகையில் சிறுபான்மைக் கலாசார அம்சங்களை ஒழித்துவிடுவதோ இரத்துச் செய்வதோ அன்று. அவ்வாறு செய்வது சிறுபான்மைக்கெதிராக அரசின் கட்டாயப்படுத்தலை திணிப்பதாகும். அதன் மூலம் சிறுபான்மையினர் மேலும் மேலும் வேறுபடுத்தி நோக்குவதற்கு உட்படுத்துவதேயாகும். இது சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் அரசுக்குமிடையே புதிய குரோதங்களைத் தோற்றுவித்து மோதல்களுக்கான வாசல் திறக்கப்படும் நிலையை ஏற்படுத்துவதனாலேயாகும். இன ஒற்றுமையும் வெகுவாக பாதிக்கப்படும் என்பதனாலாகும்.
இது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு கட்டாயப்படுத்தி அடிமைப்படுத்துவதோ பலாத்காரமாக நிறைவேற்றப்படும் சட்டத் திருத்தங்களோ அல்ல. அந்தப் பிரச்சினை தொடர்பில் பொதுவாக சமூகத்திலும் சிறுபான்மை மக்களிடையேயும் திறந்த கலந்துரையாடல்களை தொடருவதாகும். அதன் மூலம் சிறுபான்மை சமூகத்தவரிடையே அத்தகைய சட்டங்கள் சம்பிரதாயங்களை சீர்படுத்தும் கலந்துரையாடலும் பொதுசன அபிப்பிராயமும் உருவாகும்.
எமது சமுகத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுப்பதானால் சிங்கள, தமிழ் சமுகங்களில் காணப்படும் சாதி வேற்றுமை மற்றும் சீதன முறை மனித உரிமைகளையும் அரசியல் யாப்பின் உறுப்புரைகளையும் மீறுகின்றனவாக உள்ளன. சிங்கள, தமிழ் சமூகங்களின் கலாசாரத்தை ஜனநாயக நவீனத்துவம் கொண்டதாக மாற்றியமைக்க சாதி வேற்றுமை மற்றும் சீதனம் தொடர்பான திறந்த மக்கள் கலந்துரையாடலொன்று இடம்பெற வேண்டும். சாதி வேற்றுமையை மற்றும் சீதனத்தை ஒழிப்பதற்கான சட்டங்களைக் கொண்டு வருவதாயினும் அது உரிய சமூகங்களுடனான கலந்துரையாடல் மூலமாகவே நடைபெற வேண்டும். அத்தகைய கலந்துரையாடலின் போது குறிப்பிட்ட கலாசார அம்சங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கருத்தைக் கேட்பது அத்தகைய முயற்சிகளில் முன்னோடிகளாக இருக்கும் ஜனநாயக மற்றும் சமூக மறுசீரமைப்பு தொடர்பாக ஈடுபாடு கொள்கின்ற செயற்பாட்டாளர்கள் குழுக்களின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு நோக்கும் போது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகளை மீறும் அம்சங்கள் இருப்பின் சட்டத்திலிருந்து அவற்றை நீக்கவேண்டியது பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயன்றி இன மேலாதிக்க செயற்திட்டத்தை நிறைவேற்றுவதாக இருக்கக் கூடாது.
சிறுபான்மை மக்களின் கலாசார, உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஜனநாயகம் தொடர்பான அரசியற் கோட்பாட்டிலும் கூட கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கருப்பொருளாகவே உள்ளது. முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது, தனியாள் உரிமைக்கா, குழு உரிமைக்கா, அரசியல் ஜனநாயகத்திற்கா, கலாசார ஜனநாயகத்திற்கா என்ற கேள்விகள் அதனுள் பொதிந்துள்ளன. ஜனநாயகம் தொடர்பான எமது நாட்டின் கலந்துரையாடல் இத்தகைய பிரிவுகள் விடயத்திலும் கவனம் செலுத்தும் காலம் இப்போது கனிந்துள்ளது.- Vidivelli